மின் முறிவு
மின் முறிவு (electrical breakdown) என்பது அரிதில் கடத்தி போன்ற ஒரு பொருளில் அளவுக்கும் அதிகமான மின்னழுத்தம் கொடுக்கும் போது, அப்பொருளின் மின்தடை மிகவும் குறைந்து, மின்கடத்தியாக மாறும் நிகழ்வாகும். மின் முறிவு திட, திரவ, வாயு ஆகிய அனைத்துப் பொருள்களிலும் நடைபெறும். ஆனால், ஒவ்வொன்றிலும் மின் முறிவு என்பது வெவ்வேறு விதமாக நிகழும்.[1][2][3]
அரிதில் கடத்தியும் மின் முறிவும்
தொகுஒரு அரிதில் கடத்தி மின்சாரத்தைக் கடத்தாது. இவ்வாறான அரிதில் கடத்திகள் மின் கம்பிகளின் மீது மின்காப்புப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. பல இடங்களில், மின்கம்பிகள் ஒன்றையொன்று தொட்டுக் கொள்ளாதவாறு இடையில் அரிதில் கடத்திகள் வைக்கப்பட்டிருக்கும். மின்மாற்றிகள், மின் தேக்கிகள் போன்றவற்றில் அரிதில் கடத்திகள் பொருத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.
மின்சாரக் கம்பங்களில், ஒரு கம்பிக்கும் மற்றொரு கம்பிக்கும் போதிய இடைவெளி விடப்பட்டிருப்பதை காணலாம். இந்த இடைவெளியில் இருக்கும் காற்று ஓர் அரிதில் கடத்தி. அது இங்கே பெரும்பான்மையான வேளைகளில் மின்காப்பானாக இருந்து மின்சாரம் ஒரு கம்பியில் இருந்து மற்றொரு கம்பிக்குத் தாவாமல் தடுக்கின்றது.
மின்னோட்டமும் மின் முறிவும்
தொகுஒரு வாயுப் பொருளில், மின் முறிவு உண்டாகும் போது அதில் நிகழும் மின்னோட்டம் எவ்வாறு மாற்றமடைகின்றது என்பது படத்தில் காட்டப் பட்டுள்ளது. பொதுவாகவே, காற்று போன்ற வாயுப் பொருட்களில் மின்னூட்டம் கொண்ட மின்னணுக்கள் இருக்கும். மின்னழுத்தம் கொடுக்கும் போது, இந்த மின்னணுக்கள் ஒரு திசையை நோக்கி ஓடுகின்றன. இந்த ஓட்டத்தை மின்னோட்டம் என்கிறோம். மின்னழுத்தம் அதிகமாக, மின்னணுக்கள் இன்னும் வேகமாக ஓடுகின்றன. இது படத்தில் 1 என்று குறிக்கப் பட்டுள்ளது. அடுத்து, 2 என்று காட்டப் பட்டுள்ள பகுதியில், மின்னழுத்தை அதிகரித்தாலும் மின்னோட்டம் அதிகமாவதில்லை. இதற்குக் காரணம், மின்னணுக்கள் ஒரு குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் செல்ல முடிவதில்லை. மின்னழுத்தத்தை இன்னும் கூட்டினால், மின் முறிவு உண்டாகத் தொடங்குகின்றது. வாயுப் பொருளில் உள்ள அணுக்களில் இருக்கும் எதிர் மின்னிகள் அங்கிருந்து வெளியே இழுக்கப் படுகின்றன. இவ்வாறு அணுக்கள் மின்னனுக்களாக மாறி, பின் ஓடத் தொடங்குகின்றன. இதனால், மின்னோட்டம் அதிகமாகின்றது. இது 3 என்று படத்தில் குறிக்கப் பட்டுள்ளது. மின்னழுத்தம் இன்னும் அதிகமாக, மேலும் பல மின்னணுக்கள் உருவாகி, மின்னோட்டம் பேரளவில் ஓடுகின்றது. இது 4 என்று படத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இதை டவுன்சென்ட் மின்னிறக்கம் (Townsend discharge) என்பர்.
உசாத்துணை
தொகு- ↑ Belkin, A.; Bezryadin, A.; Hendren, L.; Hubler, A. (2017). "Recovery of Alumina Nanocapacitors after High Voltage Breakdown". Scientific Reports 7 (1): 932. doi:10.1038/s41598-017-01007-9. பப்மெட்:28428625. Bibcode: 2017NatSR...7..932B.
- ↑ Hong, Alice (2000). "Dielectric Strength of Air". The Physics Factbook.
- ↑ "Lab Note #106 Environmental Impact of Arc Suppression". Arc Suppression Technologies. April 2011. பார்க்கப்பட்ட நாள் March 15, 2012.