மீனெறி தூண்டிலார்
மீனெறி தூண்டிலார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் உள்ளது. அது குறுந்தொகை 54.
இவர் தன் பாடலில் 'மீனெறி தூண்டில்' என்னும் தொடரைக் கையாண்டுள்ளார். அதனால் இவருக்குப் பாடல் தொடரால் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெயர் சூட்டியவர் எட்டுத்தொகை நூலைத் தொகுத்தவர்.
பாடல் தரும் செய்தி
தொகுதிருமண நாள் தள்ளிப்போகிறது. தலைவிக்குக் கவலை. தன் தோழியிடம் சொல்கிறாள்.
நான் இங்கே இருக்கிறேன். என் மேனி நலன் கானக நாடன் இருக்கும் இடத்துக்குப் போய் தங்கிவிட்டது. அங்கேயே ஒழிந்து போகட்டும். இது எப்படி இருக்கிறது தெரியுமா? தினைப்புனம் காக்கும் கானவன் கவணால் கல் எறிந்தான். அதன் ஒலியைக் கேட்டு மூங்கிலை வளைத்து உருவித் தின்றுகொண்டிருந்த யானை வெருவி(திடுக்கிட்டு), மூங்கிலிலிருந்த கையை விட்டுவிட்டது. அப்போது அந்த மூங்கில் திடுமென விசும்பி நிமிர்வது போல என் நல்லழகு மட்டும் விசும்பி அவரிடம் போய்விட்டது - என்கிறாள்.