முதியோர் சுகாதாரம்

முதியோர் சதவீதம்

தொகு

உலகத்தின் சனத்தொகை பெரும் அதிகரிப்பினை காட்டுகின்றது. கடந்த 1999ம்ஆண்டு உலக சனத்தொகை ஆறு பில்லியனைத் தாண்டியது. இது 2020ம் ஆண்டளவில் 7.6 பில்லியனை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத்தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.இலங்கையில் ஒருவரது வாழ்நாட்காலம் சராசரியாக 72 வயதை அண்மித்துக் காணப்படுகின்றது. இதிலும் முக்கியமாக ஒருவர் 65 வயதைக் கடப்பாராயின் அவர் 70 வயதிற்கு மேல் வாழக்கூடிய சூழ்நிலையே தற்போது உள்ளது.

முதியோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

தொகு

நீண்ட ஆயுள் ஒரு வகையில் வரப்பிரசாதமாக அமைந்தாலும் அவ்வாழ்க்கையானது அவர் சுகதேகியாக அநாவசிய அழுத்தங்கள் மற்றும் சமூக பொருளாதார தாக்கங்கள் அற்று வாழும் போது நீண்ட ஆயுள் ஓர் ஆசீர்வாதமாக அமைகின்றது. இவ்வாறான நிலைமை எல்லோருக்கும் கைகூடுவதில்லை. ஏனேனில் 65 வயதிற்குள் இறப்போரை நோக்கும் போது அவர்கள் உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, கொலஸ்டரோல் அதிகரிப்பு போன்ற நோய்களினால் தாக்குண்டு இறப்பவர்களே அதிகமாயுள்ளனர். இத்தகைய கட்டத்தினை தாண்டி 65 வயதிற்கு மேல் வாழ்பவர்கள் இத்தகைய நோய்களின் வேறு தாக்கங்களை எதிர் நோக்குகின்றனர். பாரிசவாதம் இதற்கு நல்ல உதாரணமாகும். மேலும் புற்று நோய் போன்றவையும் ஏனைய நீண்ட நாள் நோய்களான நீரிழிவு, தொய்வு போன்றவற்றாலும் தாக்கமுறுகின்றனர். வைத்தியசாலைகளில் விசேட கிளினிக்குகளில் சிகிச்சை பெற வரும் நோயாளரில் காணப்படும் வயதானேரின் எண்ணிக்கைளை கொண்டே இதனை மதிப்பிடலாம். அத்துடன் உடலின் மூளை நரம்புமண்டலத் தேய்மானங்களால் ஏற்படும் நோய் நிலைகள் (உதாரணம் PARKINSON’S, DEMENTIA) மற்றும் எலும்பு, முட்டு, தேய்மானங்களால் உடல் இயக்கம் குறைவதனால் ஏற்படும் பாதிப்புகள் வயதானோரை தாக்குகின்றன.
இவற்றினை உற்று நோக்குமிடத்து வயதானோரில் சிலர் திடகாத்திடமானவர்களாக இருப்பினும் பெரும்பாலானோர் பாரிசவாதம், புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் இயக்கக் குறைவினாலும், உடல் தொகுதிகளின் தேய்மானங்களினாலும் ஏற்படும் தாக்கங்களின் பாதிப்பு போன்றவற்றால் அவதியுறுகின்றனர். மேலும் மலம் மற்றும் சிறுநீர் தங்களை அறியாமலே கழிக்கும் நிலை, பெண்களில் கருப்பை கீழிறக்கம் போன்றன, உணவு உட்கொள்ளலில் மந்த நிலை ஆகியவற்றாலும் பாதிப்படைகின்றனர்.

முதியோர் புனர்வாழ்வு

தொகு

இத்தகையோருக்கு சிகிச்சைகள் மட்டுமல்லாது, தகுந்த கவனிப்பும் புனர்வாழ்வும் அவசியமாகின்றது. அதாவது புனர்வாழ்வு மற்றும் தகுந்த கவனிப்பினை வழங்க இள வயதினர் தேவைப்படுகின்றனர். இவற்றினை வழங்கத்தக்கதாக தகுந்த வசதிகளுடன் கூடிய இடங்கள் அவசியம். இவற்றினை மேற்கொள்ளுவதற்கு வேண்டியதாக பொருளாதாரம் அவசியமாகின்றது. இத்தகையதொரு பொருளாதார நிலையில் எமது முதியோர்கள் உள்ளனரா என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கும். முதியோர்க்கு தேவையான சிகிச்கைள் வழங்கத்தக்கதான அமைப்புக்கள் எமது வைத்தியசாலைகளில் உள்ளனவா என்றால் இல்லை என்ற பதிலே விடையாகும். எமது முதியோர் இல்லங்கள் இத்தகைய வசதிகளைக் கொண்டுள்ளனவா என்றால் ஒரு சில இல்லங்களைத் தவிர ஏனையவை இத்தகைய நிலையில் இல்லை என்பதே பதிலாகும்.

முதியோராகிய தங்கள் பெற்ரோரை கவனிக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை என்பது உண்மையே. ஆனால் பிள்ளைகளுக்கு அவ்வாறாகக் கவனிப்பதற்கு எந்தளவிற்கு வசதி வாய்ப்பு இன்றைய சூழ்நிலையில் உள்ளது என்பது விவாதத்திற்கு உரியது.

பிள்ளைகள் எனும் போது அவர்களும் 40 வயதிற்கு மேற்பட்டவராகவே உள்ளனர். அவர்களது தொழிற்துறைகள், அவர்களது பிள்ளைகளின் கல்வி மற்றும் ஏனைய பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டிய தேவை போன்றவற்றுடன் தற்போதைய காலகட்டத்தில் உள்ள வாழ்க்கை முறைமையினால் தாங்களே உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், நீரிழிவு மற்றும் ஏனைய நோய்களினால் தாக்கமுற்று வைத்தியம் செய்பவர்களாகவும் உள்ளனர். இத்தகையோர் எந்த அளவிற்கு தங்கள் பெற்றௌரை பராமரிக்க, புனர்வாழ்வு அளிக்க முடியும் என்பது ஏற்கனவே கூறியபடி விவாதற்குரியது. மேலும் தற்போது 40 – 50 வயதிற்கு உட்பட்டோர் இன்னும் 15 வருடங்களில் முதியோராய் விடுவர். தங்கள் பெற்றௌர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எதிர்நோக்கவிருப்போரின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் ¼ பங்கினரை எட்டிவிடும்.

தீர்வுகள்

தொகு

இம் முக்கிய பிரச்சினைக்கு தீர்வு என்ன? மேலைநாடுகளில் முதியோர் மருத்துவம் (GERIATRICS) தனியானதொரு துறையாக அங்கீகரிக்கப்பட்டு அதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வைத்தியசாலைகளில் வேறாக உள்ளக வார்ட்டுக்கள், வெளி நோயாளர் சாய்சாலை பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதியோர் இல்லங்களில் தகுந்த வசதிகள் உள்ளன.

எமது நாட்டிலும் முதியோரின் அதிகரிக்கும் வீதத்தினை கருத்தில் கொண்டு முதியோர் கவனிப்பு திட்டமிடப்படல் வேண்டும். தற்போது உயர் பதவிகளை வகித்துஇ திட்டங்கள் இட்டு அமுல் நடாத்தக்கூடிய அதிகாரங்கொண்டோரும் இன்னும் ஓரிரு சகாப்தங்களில் முதியோராகி விடுவர். ஆகையால் தற்போதே திட்டமிடப்படுவது சிறந்தது. வைத்திய சாலைகளில் முதியோர்க்காக கவனிப்பிற்கு தனியாக கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமானதாகும். அத்தோடு முதியோராகும் போது தங்கள் பிள்ளைகள் உட்பட ஏனையோர்க்கு பாரமாக இல்லாமல் இருக்கத்தக்கதாக பொருளாதார பலம் கொண்டிருத்தலும் அவசியமானது. அத்தோடு நடுத்தர வயதிலிருந்தே தகுந்த வாழ்க்கை முறைமையைக் கடைப்பிடித்து உணவுப்பழக்கவழக்கங்களில் கவனம், தேகாப்பியாசம், யோகாசனம், நற்சிந்தனைகளுடன் கூடிய வாழ்க்கை, சமூக சேவைகள் போன்றவற்றில் கவனத்தை செலுத்தி நோய் தவிர்த்து வாழுதலும் உகந்த விளைவைத் தரும். மேலும் முதியோர் இல்லங்கள் முதியோரைப் பராமரிக்கும் வசதிகளைக் கொண்டதாக அமைக்கப்படவும் திட்டமிடப்படல் அவசியமானது.

நாட்டிற்காகவும், குடும்பத்திற்காகவும் உழைத்து உடல் தளர்ந்து முதியோரானோர் தங்கள் வாழ்க்கையின் முதுமைப் பருவத்தில் உடல், உள, சமூக நலனுடன் தங்கள் வாழ்நாளின் இறுதிக்காலத்தைக் கழிக்கத்தக்கதான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இன்றைய நாளில் எமது தலையாய தேவையாகும். எமது வருங்காலத்தை பொறுத்தவரை இவ்விடயம் மிகவும் முக்கியமானது.

இதனையும் வாசிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதியோர்_சுகாதாரம்&oldid=4127690" இலிருந்து மீள்விக்கப்பட்டது