முத்துசாமி தேவர்

முத்துசாமி தேவர் (1926 - 2011) வில்லுப்பாட்டுக் கலைஞர் ஆவார். வில்லுப் பாட்டு வழிவழியாய் பல புலவர்களால் பாடப் பெற்று 20ம் நூற்றாண்டில் சிறந்து விளங்கியது. வில்லுப் பாட்டு என்று குறிப்பிடும் போது கலைமாமணி முத்துசாமி தேவர்-லீலாவதி அம்மாள் தென்தமிழகத்தில் பெயர் பெற்று விளங்கினார்கள். குடம் வாசிப்பதிலும் திறமை பெற்றவர்.வில்லிசை வேந்தர், குடச்சக்ரவர்த்தி என்று பட்டங்கள் பெற்று விளங்கினார். நீராவி புதுபட்டி அய்யனு கோனார் மற்றும் பங்காருபட்டி சோலைசாமி நாயக்கர் அவர்களையும் குருவாகக் கொண்டு வில்கலையை வளர்த்தார் எனினும் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு தமிழ் இலக்கியங்கள், புராண இதிகாசங்களைக் கையாண்டு தனித் தன்மையோடு விளங்கினார். பெண்கள், ஆண்கள், இளவயதினர், முதியோர் என அனைத்துத் தரப்பினரும் அவர் சொல்லழகில் மயங்கிக் கட்டுண்டு கிடப்பர்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடலையூர் என்ற கிராமத்தில் பெரியசாமி தேவர்-காளியம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாக பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை கடலையூர் அரசு ஆரம்ப பள்ளியில் பயின்ற இவர், தன் குடும்ப வறுமையின் காரணமாக மூன்றாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தினார். அவ்வூரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், மகாகவி சுப்ரமணிய பாரதியின் "தாயின் மணிக்கொடி பாரீர்" என்ற தேசப்பற்று பாடலை தனது பத்து வயதில் முதன் முதலாக பாடி பாராட்டுப் பெற்றார். அதனைத் தொடர்ந்து, அங்கிருந்த சுதந்திரப் போராட்ட வீரர்களால் தூண்டப்பட்டு, பல தேசப்பற்றுப் பாடல்களை பாடினார். பின்னர் வில்லிசையை முறையாகப் பயின்று தன் குருநாதர்களையும் மிஞ்சும் அளவிற்கு பல தெய்வீகம் மற்றும் தேசப்பற்றுக் கதைகளை வில்லில் பாடி காங்கிரஸ் மாநாடு மற்றும் தெருமுனைப் பிரச்சாரம் செய்து சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றினார்.

1958 ஆம் ஆண்டு லீலாவதி அம்மையாரை திருமணம் செய்தார். அன்று முதல் தன் மனைவிக்கும் வில்லுப்பாட்டினை முறையாகக் கற்றுக்கொடுத்து அவர்களை முதன்மைப் பாடகராக்கி முத்துசாமி தேவர் அவர்கள், வில்லிசையின் பக்க இசையான குடம் வாசிக்க தொடங்கினார். தம்பதிகள் இருவரும் கோவில்பட்டி அருகேயுள்ள புளியங்குளம் கிராமத்தில் வாழ்ந்து வந்தனர், தம் வாழ்கையை வில்லிசைக்காக அர்ப்பணித்தார்கள். அதன் பலனாக தமிழ் நாடு மட்டுமல்லாமல், கேரளா, ஆந்திர மாநிலங்களில் பல கோவில் கொடை விழாக்களிலும், மாநாடுகளிலும், தொலைக்காட்சி மற்றும் வானொலியிலும், நம் தலைநகரமான புதுடெல்லி தமிழ் இசை மாநாட்டிலும் வில்லுப்பாடினைப் பாடி பாராட்டுப் பெற்றனர். இவர்களின் வில்லிசைக்காகவே கோவில் கொடைவிழாக்களை மாற்றியமைத்த கிராமங்களும் தமிழகத்தில் இருந்ததாம்.

பாடிய கதைகள்

தொகு

இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம், புரானக்கதைகளான அம்மன் கதை, ஆரிய முத்துப்பட்டன் கதை, சுடலைமாடன் கதை, சாஸ்தா கதை(வல்லரக்கன் கதை), வள்ளிதிருமணம், கருப்பசாமி கதை மற்றும் சுதந்திரப் போராட்ட கதைகளான இந்திய வரலாறு, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அறிஞர் அண்ணாதுரை, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், காமராஜர் வரலாறு போன்ற அணைத்து கதைகளையும் வில்லிசை நடையில் தாமே எழுதி, மெட்டமைத்து பாடியவர்.

2000 ஆம் ஆண்டில் தமிழக அரசின் சிறந்த இசைத்துறை விருதான கலைமாமணி விருதினைப் அன்றைய முதல்வர் கலைஞர்.திரு.மு.கருணாநிதி அவர்களிடம் பெற்றார். தமிழகத்தில் வில்லுப்பாட்டு பக்க வாத்தியமான, குடம் வாத்தியத்தில் கலைமாமணி விருதுபெற்ற ஒரே கலைஞர் என்ற சிறப்பு பெற்றவர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று, சிறந்து விளங்கும் பல வில்லிசை கலைஞர்களை உருவாக்கிய பெருமை இவர்களையே சாரும்.

இன்றளவும் கலைமாமணி.பெ.முத்துசாமி தேவர் அவர்களின் கலையுலக வாரிசுகளான அவரது மனைவி திருமதி.மு.லீலாவதி அம்மாள், மற்றும் அவரது பேத்தி திருமதி.டாக்டர்.கலையரசி-காந்திராஜ்(சித்த மருத்துவ நிபுணர்) அவர்கள் தங்கள் குடும்பத்துடன், நலிந்து வரும் நம் பாரம்பரிய கலையான வில்லிசையை தமிழகம் முழுவதிலும் பாடி, தங்களால் முடிந்தவரை தங்கள் குருநாதரான கலைமாமணி முத்துசாமி தேவர் அவர்களின் பெருமையினையும் வில்லிசையையும் வளர்த்து வருகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துசாமி_தேவர்&oldid=1631154" இலிருந்து மீள்விக்கப்பட்டது