மு. ஜெயபாரதிதாசன்


முத்துலிங்கம் ஜெயபாரதிதாசன் (பிறப்பு  21 ஜூன் 1962) இலங்கைத் தமிழ் மெல்லிசைத்துறையில்  முக்கியமான கலைஞர்.  தன் தனித்துவமான பாடும் திறமையாலும், இனிய குரலாலும் பல இசை இரசிகர்களின் கவனம் கவர்ந்தவர். பாடும் திறமை மட்டுமல்ல, இவர் பாடல்கள் இயற்றுவதிலும் இசையமைப்பதிலும் வல்லவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிலையத் தெரிவுக் கலைஞரான இவர் நூற்றிற்கும் அதிகமான மெல்லிசைப் பாடல்களை தமிழிலும் மற்றும் பல சிங்கள மொழிப் பாடல்களையும் பாடியுள்ளார்.

M. ஜெயபாரதிதாசன்
பெயர் முத்துலிங்கம் ஜெயபாரதிதாசன்
பிறப்பு ஜூன் 21, 1962
பெற்றோர் திரு.கிருஷ்ணபிள்ளை முத்துலிங்கம் திருமதி. மின்னொளி முத்துலிங்கம்
மனைவி திருமதி.பங்கயற்செல்வி ஜெயபாரதிதாசன் (ஆசிரியை)
பிள்ளைகள் சோபிதா ஜெயபாரதிதாசன் அபிஷேகி ஜெயபாரதிதாசன் இலக்கியா ஜெயபாரதிதாசன் டிரூஷினி ஜெயபாரதிதாசன்
பிறப்பிடம் திருகோணமலை, இலங்கை
துறைகள் பாடகர் பாடலாசிரியர் இசையமைப்பாளர்
தொடர்புபட்ட நிறுவனங்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC) இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ITN தொலைக்காட்சி சுவர்ணவாஹினி தொலைக்காட்சி சக்தி தொலைக்காட்சி
முகநூல் பக்கம் ஜெயபாரதிதாசன் முத்துலிங்கம்

இலங்கை வானொலி மட்டுமன்றி, இலங்கை அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி மற்றும் ITN, சுவர்ணவாஹினி, சக்தி TV போன்ற தனியார் தொலைக்காட்சிகளிலும் இசை நிகழ்ச்சிகளில் தோன்றியும் பாடியுள்ளார். அத்துடன் தற்கால இசைப்போட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும், ஜெயபாரதிதாசன் அவர்கள் பல குரல்களிலும் பாடும் திறமையும் பெற்றவர்.  தனக்கென்று தனிப்பாணியைக் கொண்டிருந்த போதும், இரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க தென்னிந்தியப் பாடகர்களான T.M. சௌந்தரராஜன், S.P.பாலசுப்ரமணியம், K.J. ஜேசுதாஸ் போன்றோரின் குரல்களிலும் பாட வல்லவர்.

இசைத்துறையில் மட்டுமன்றி நாடகத்துறையிலும் இவர் கால் பதித்துள்ளார். 2003 இல் மகாகவி சுப்பிரமணி பாரதியாராக இவர் நடித்த ‘பாட்டுக்கொரு புலவன்' மேடை நாடகம், நாடக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

தொழில் ரீதியாக இசைக்கலைஞரான இவர், இலங்கை அரச சேவையிலும் 20 வருடங்களாக கடமையாற்றியுள்ளார். சுகாதார அமைச்சிலும், பிரதேச சபையிலும், பின்னர் கல்வி அமைச்சிலும் எழுது வினைஞராகக் கடமையாற்றியுள்ளார். அத்துடன் அகில இலங்கை சமாதான நீதிவானாகவும் சேவையாற்றியுள்ளார்.

2012ம் ஆண்டு, இலங்கை உள்நாட்டுப் பிரச்சினையால் இலங்கை இழந்த திறமைசாலிகளுள் இவரும் ஒருவர். தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். அவுஸ்திரேலிய மேடைகளை அலங்கரித்து வருகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை

ஜெயபாரதிதாசன் இலங்கையின் கிழக்குக் கரையோரம் அமைந்த திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரின் தந்தை, அமரர்.கிருஷ்ணபிள்ளை முத்துலிங்கம் அவர்களும் ஊரறிந்த சிறந்த பாடகராவார். இவரின் தாய் அமரர் திருமதி. மின்னொளி முத்துலிங்கம் ஆவார். இவரின் பெற்றோர் மகாகவி பாரதியின் மேல் உள்ள பிரியத்தால், கவிஞரின் பெயரையொட்டி இவருக்கு பெயர் சூட்டினர்.

தனது ஆரம்பக்கல்வியை திருகோணமலை புனித சேவியர் கல்லூரியிலும் பின்னர் உயர்தரக் கல்வியை திருகோணமலை கோணேஸ்வர இந்துக்கல்லூரியிலும் பயின்றார்.

1969ம் வருடம், திருமதி. சோமகேசன் அவர்களின் வழிகாட்டலில், தனது ஏழாவது வயதிலேயே அகில இலங்கைத் தமிழ்த் தினப் போட்டியில் வாய்ப்பாட்டில் தங்கப்பதக்கம் வென்று தனது பாடசாலைக்கும் ஊரிற்கும் பெருமை சேர்த்தார்.

அதன் பின்னர் மிகச் சிறுவயதிலேயே இசைக்குழுக்களில் இணைத்துக் கொள்ளப்பட்டு, கோயில் திருவிழாக்கள், மேடை நிகழ்ச்சிகள் என இவரது இசைப் பயணம் ஏறுமுகம் கண்டது. ‘கலைவாணி' இசைக்குழு இவர் ஆரம்ப காலங்களில் பங்குகொண்ட உள்ளூர் இசைக்குழுவாகும். பின்னர், ‘தாய் ஸ்வரம்' என்ற பெயரில் தன் சொந்த இசைக்குழுவையும் உருவாக்கினார்.

இலங்கை வானொலிப் பிரவேசமும் இசைப் பங்களிப்பும்

1971 இல், இலங்கை வானொலிக் கலைஞராக அங்கீகரித்த போது இவருக்கு வயது ஒன்பது. சிறுவர் மலர் நிகழ்ச்சியிலும் வானொலி மாமாவுடன் இணைந்து பல பாடல்கள் பாடி பாராட்டுப் பெற்றார். அது மட்டுமன்றி பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியிலும் பல பாடல்கள் பாடியுள்ளார்.

இலங்கை வானொலியின் தமிழ் மெல்லிசைப் பாடல்கள் வானொலி இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் பெற்றவை. இப்பாடல்களில் நூற்றுக்கும் அதிகமான பாடல்களை ஜெயபாரத்திதாசன் அவர்கள் பாடியுள்ளார்.பல பாடல்களை இவரே எழுதியும் பாடியுள்ளார். இப்பாடல்களில் பல இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அறிவுசார் சொத்தாக அதன் இசை வைப்பகத்தில் இருக்கின்றன. எனினும் மிகச் சில பாடல்கள் ‘எம்மவர் இசை மழை’ போன்ற இசை ஆர்வலர்களின் உழைப்பால் எமக்கு இணையத்தில் கேட்கக் கிடைக்கின்றன.

(பாடல் இணைப்புகள் கீழே)

இலங்கைத் தொலைக்காட்சி சேவைகளில் இசைப்பங்களிப்பு

1984ம் ஆண்டு, 22 வயதில் ஜெயபாரதிதாசன் அவர்கள் தொலைக்காட்சித் திரையில் முதன் முறையாகத் தோன்றினார்.

‘உதயகீதம்', திரு. P. விக்னேஸ்வரன் அவர்கள் தயாரித்து, இலங்கை அரச தொலைக்காட்சியான ரூபவாஹினியில் ஒலிபரப்பான ஒர் இசைப்போட்டி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்குபற்றி தன் சொந்தப் பாடலான ‘மலையும் முகிலும்' பாடலைப் பாடி முதல் பரிசு வென்றார்.

பின்னர் இந்தப் பாடல், இலங்கைத் தொலைக்காட்சி வரலாற்றில் தயாரிக்கப்பட்ட முதலாவது சின்னத் திரைச்சித்திரமான ‘என் வாழ்வு உன்னோடுதான்' இலும் இடம் பெற்றது. இந்தப் பாடல் தென்னிந்திய பாடலோ என்று பலர் வியக்கும்படி இருந்தது. பெரும் வரவேற்பையும் பெற்றது.

அதன் பின்னர் பல சிறப்பு நிகழ்ச்சிகளிலும், பண்டிகைக் கால நிகழ்ச்சிகளிலும் தமிழ் சினிமா பாடல்களையும், இலங்கை மெல்லிசைப் பாடல்களையும் பாடி பல இரசிகர்களுக்குச் சொந்தக்காரரானார்.

தென்னிந்திய தமிழ் சினிமா

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பாடும் நோக்குடன்,1989ம் வருடம், தனது 27ம் வயதில், இந்தியாவிற்கு இடம் பெயர்ந்தார். 1994ம் ஆண்டு வரை 5 வருடங்கள் தமிழ் நாட்டில் தங்கி, திரு. வி. ரமணன்,  நித்ய காதம்பரி, திரு. ரகுராஜ் சக்கரவர்த்தி போன்றோரின் இசைக்குழுக்களிலும், திரு. A.R. ரஹ்மான்,  திரு. சங்கர் கணேஷ், திரு.காண்டீபன் உட்பட பல சினிமா இசையமைப்பாளர்களின் கலையகங்களில் பல பாடல்களின் முதற்பிரதிகளைப் (track version) பாடியுள்ளார். இவர் முயற்சிகள் பயனளிக்கமுன் குடும்ப சூழ்நிலையால் இலங்கை திரும்ப நேர்ந்தது.

சிங்கள இசைத்துறையில் பங்களிப்பு

ஜெயபாரதிதாசன்  அவர்கள் சிங்களப் பாடல்கள் சிலவற்றையும் பாடியுள்ளார். சிங்கள சினிமா நடிகர் மற்றும் இசையமைப்பாளரான திரு. சரத் டி அல்விஸ் மற்றும் திரு.காண்டீபன் அவர்கள் தயாரித்த சிங்கள மொழியிலமைந்த 10 பாடல்கள் அடங்கிய சிங்கள இசைத்தொகுப்பு ஒன்றில் அமைந்த 10 பாடல்களையும் பாடியுள்ளார்.

மேடை நாடகங்கள்

நாடகத்துறையிலும் இவரது கன்னி முயற்சியே இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

2003ம் ஆண்டு, இவரது 41 வது வயதில், ‘பாட்டுக்கொரு புலவன்' என்ற நாடகம், வெள்ளவத்தை இராமகிருஷ்ண அரங்கத்தில், சட்டத்தரணி திரு. K.சிவபாலன் நெறியாள்கையில் இடம் பெற்றது. இந்த நாடகம் மகாகவி சுப்பிரமணி பாரதியாரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து புனையப்பட்ட ஒரு நாடகம். இந்த நாடகத்தில், தலைமைக் கதாபாத்திரம் ஏற்று, பாரதியாக நடித்து,பலத்த பாராட்டும் பெற்றார்.

இணையத்தில் உள்ள பாடல்கள்

பாடல் பாடியவர்(கள்) இசையமைப்பு பாடலாசிரியர் குறிப்புகள்
மலையும் முகிலும் ஜெயபாரதிதாசன் மெட்டு - ஜெயபாரதிதாசன்

பின்னணி இசை -

அப்சராஸ் (மோகன் - ரங்கன்)

ஜெயபாரதிதாசன் உதயகீதம் போட்டி நிகழ்ச்சியில் பரிசு வென்ற பாடல்.

‘என் வாழ்வு உன்னோடுதான்' தொலைக்காட்சி நாடகத்திலும் பின்னர் ஒலித்தது

பனி தூங்கும் ஜெயபாரதிதாசன்

நிலுக்‌ஷி ஜெயவீரசிங்கம்

பயாஸ் , ரட்ணம் எஸ். எழில்வேந்தன்
உன்னைப் பார்த்தேனா ஜெயபாரதிதாசன் எஸ். கணேஷ்ராஜ் திருமலை சந்திரன்
மின்னலாய் வந்து ஜெயபாரதிதாசன் எஸ். கணேஷ்ராஜ் கார்மேகம் நந்தா ‘எண்ணங்கள்' இசைத் தொகுப்பில் இடம்பெற்றபாடல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._ஜெயபாரதிதாசன்&oldid=3309741" இலிருந்து மீள்விக்கப்பட்டது