மூலதன ஆதாய வரி (இந்தியா)
மூலதன ஆதாய வரி (Capital gains tax), தங்கம், பங்குகள், பரஸ்பர நிதிகள் அல்லது காலி மனைகள் மற்றும் வீடுகள் போன்ற சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் முதலீட்டாளர் உருவாக்கும் இலாபங்கள் அல்லது ஆதாயங்களை மூலதன ஆதாயம் எனப்படும். மூலதனச் சொத்தின் பரிமாற்றம் நடைபெறும் ஆண்டில் இத்தகைய மூலதன ஆதாயங்கள் மீது வருமான வரி விதிக்கப்படும். இந்தியாவில் குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கு மூலதன ஆதாய வரி பொருந்தும். இந்த இலாபத்தின் மீது அரசாங்கம் விதிக்கும் வருமான வரியானது மூலதன ஆதாய வரி எனப்படும். இது சொத்துக்களின் வைத்திருக்கும் காலத்தைப் பொறுத்து, இந்தியாவில் மூலதன ஆதாய வரி இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது. நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCG) மற்றும் குறுகிய கால மூலதன ஆதாய வரி (STCG) ஆகும்.[1]
மூலதன சொத்துக்களை வரையறுத்தல்
தொகுநிலம், கட்டிடம், வீட்டு மனை, வாகனங்கள், காப்புரிமைகள், வர்த்தக முத்திரைகள், குத்தகை உரிமைகள், இயந்திரங்கள் மற்றும் நகைகள் ஆகியவை மூலதனச் சொத்துக்களின் சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.
மூலதனச் சொத்து வகையில் வராத இனங்கள்
தொகு- வணிகம் அல்லது தொழிலின் நோக்கத்திற்காக வைத்திருக்கும் எந்தவொரு பங்கு, நுகர்பொருட்கள் அல்லது மூலப்பொருள்
- தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வைத்திருக்கும் ஆடைகள் மற்றும் தளபாடங்கள் போன்ற தனிப்பட்ட பொருட்கள்
- மத்திய அரசால் வெளியிடப்பட்ட 6½% தங்கப் பத்திரங்கள் (1977) அல்லது 7% தங்கப் பத்திரங்கள் (1980) அல்லது தேசிய பாதுகாப்பு தங்கப் பத்திரங்கள் (1980)
- சிறப்புப் பத்திரங்கள் (1991)
- தங்க வைப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தங்க வைப்புப் பத்திரம் (1999) அல்லது தங்கப் பணமாக்குதல் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வைப்புச் சான்றிதழ்கள், 2015.
- கிராமப்புறங்களில் விவசாய நிலம் (கிராமப் பகுதியின் வரையறை (2014-15 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும்) - 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகராட்சி அல்லது கன்டோன்மென்ட் வாரியத்தின் அதிகார வரம்பிற்கு வெளியே உள்ள எந்தப் பகுதியும் கிராமப் பகுதியாகக் கருதப்படுகிறது.
மூலதன சொத்துக்களின் வகைகள்
தொகுகுறுகிய கால மூலதனச் சொத்துகள்
தொகு- குறுகிய கால மூலதனச் சொத்து என்பது 36 மாதங்கள் அல்லது அதற்கும் குறைவான காலத்திற்கு வைத்திருக்கும் சொத்து ஒரு குறுகிய கால மூலதனச் சொத்து.
- 2017-18 நிதியாண்டிலிருந்து நிலம், கட்டிடம் மற்றும் வீடு போன்ற அசையாச் சொத்துக்களுக்கான அளவுகோல் 24 மாதங்கள் ஆகும்.
நகைகள், கடன் சார்ந்த பரஸ்பர நிதிகள் போன்ற அசையும் சொத்துகளுக்கு 24 மாதங்கள் பொருந்தாது.
- சில சொத்துக்கள் 12 மாதங்கள் அல்லது அதற்கும் குறைவாக வைத்திருக்கும் போது குறுகிய கால மூலதன சொத்துகளாகக் கருதப்படுகின்றன.
- பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனத்தில் பங்கு அல்லது முன்னுரிமைப் பங்குகள்
- பங்குச் சந்தையில் பட்டியலிட்ட கடன் பத்திரங்கள்
- பங்கு சார்ந்த பரஸ்பர நிதியத்தின் அலகுகள்
நீண்ட கால மூலதனச் சொத்துக்கள்
தொகு24 மாதங்களுக்கும் மேலாக வைத்திருக்கும் வீடு, காலி மனை, கட்டிடம் போன்ற நீண்ட கால மூலதனச் சொத்து. அதேசமயம், கீழே பட்டியலிடப்பட்ட சொத்துக்கள் 12 மாதங்களுக்கு மேல் வைத்திருந்தால், நீண்ட கால மூலதனச் சொத்தாகக் கருதப்படும்.
- பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனத்தில் பங்கு அல்லது முன்னுரிமைப் பங்குகள்
- பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட கடன் பத்திரங்கள்
- பங்கு சார்ந்த பரஸ்பர நிதியத்தின் அலகுகள்
- பூஜ்ஜிய கூப்பன் பத்திரங்கள்
- பரம்பரைச் சொத்துக்கள்:
பரிசு, உயில், வாரிசு அல்லது பரம்பரை மூலம் பெறப்பட்ட சொத்துகள்; அது குறுகிய காலமா? அல்லது நீண்ட கால மூலதனச் சொத்தா? என்பதை தீர்மானிப்பதற்கு, முந்தைய உரிமையாளரால் சொத்து வைத்திருந்த காலமும் சேர்க்கப்படும்.
நீண்ட கால மூலதன ஆதாய வரி
தொகு1961இன் வருமான வரிச் சட்டத்தின்படி, ஒரு அசையாச் சொத்தை இரண்டு ஆண்டுகள் அல்லது 24 மாதங்களுக்கு மேல் ஒருவர் வைத்திருந்து, அதனை விற்பனை செய்து கிடைக்கும் இலாபம் அல்லது வருமானம் நீண்ட கால மூலதன ஆதாயம் எனப்படும். அத்தகைய சொத்துக்களின் விற்பனைக்கு பொருந்தும் வருமான வரி நீண்ட கால மூலதன ஆதாய வரி என்று அழைக்கப்படுகிறது. தற்போது நீண்டகால மூலதன ஆதாய வரி, மூலதன ஆதாயத்தில் 20% ஆகும். இருப்பினும் கீழ்கண்ட தரகுகள், சொத்தை மேற்படுத்துவதற்கான கட்டுமானச் செலவுகள் மூலதன ஆதாயத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம். நீண்டகால மூலதன ஆதாய வரியை மதிப்பிடும் போது, வரி செலுத்துவோர் வருமான வரிச்சட்டத்தின் பிரிவுகள் 54, 54B மற்றும் 54EC ஆகியவற்றின் கீழ் சில வரி விலக்குகளைப் பெறலாம்.
குறுகிய கால மூலதன ஆதாய வரி
தொகுஒரு காலி மனை அல்லது வீடு போன்ற அசையாத் சொத்து விற்கப்படுவதற்கு முன்பு உரிமையாளராளரால் 24 மாதங்களுக்கும் குறைவாக வைத்திருந்தால், அதன் விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானம் அல்லது லாபம் குறுகிய கால மூலதன ஆதாயம் என அழைக்கப்படுகிறது. குறுகிய கால மூலதன ஆதாயத்தின் மீது விதிக்கப்படும் வருமான வரி குறுகிய கால மூலதன ஆதாய வரி எனப்படும்.
தற்போதுள்ள வருமான வரிச் சட்டங்களின்படி, முதலீட்டாளரால் உருவாக்கப்படும் குறுகிய கால மூலதன ஆதாயம், அவர்களின் வருடாந்திர வரிக்குட்பட்ட வருமானத்தில் சேர்க்கப்படும் மற்றும் தொடர்புடைய வருமான வரி அடுக்கு விகிதத்தின்படி வரி விதிக்கப்படும்.
நீண்டகால மூலதன ஆதாய வரியைப் போலவே, சொத்து மீதான குறுகிய கால மூலதன ஆதாய வரிக்கான வரி விதிக்கக்கூடிய வருமானத்தைக் கணக்கிடும் போது, தனிநபர் தரகுத் தொகை மற்றும் வீட்டு மேம்பாட்டுச் செலவுகளைக் கழிக்க முடியும்.[2]