மெட்டி என்பது தற்போது திருமணமான இந்து சமயப் பெண்கள், விரும்பி அல்லது மரபு காரணமாக, தங்கள் கால் விரல்களில் அணியும் வளையம் போன்ற அணிகலன் ஆகும். இது பெரும்பாலும் வெள்ளியால் செய்யப்பட்டிருக்கும். பழங்காலத்தில் இது ஆணுக்குரிய அணிகலனாக இருந்தது. திருமணமான ஆணுக்கு மெட்டியும், பெண்ணுக்கு தாலியும் அடையாள அணிகலன்கள் ஆகும்.[1] ஒரு ஆண் திருமணமானவன் என்பதனை, அவனின் பாதங்களைப் பார்க்கும் பெண் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆண்களின் கால்களில் மெட்டி அணிவிக்கப்பட்டது. காலமாற்றத்தினால் அல்லது கலாச்சார மாற்றத்தினால் மெட்டி, பெண்ணுக்குரிய அணிகலனாகியது.மெட்டி அணிதல் இந்தியாவின் சில பகுதிகளில் திருமணமான பெண்களுக்கு நிகழும் ஒரு முக்கியச் சடங்கு. பணக்கார குடும்பங்களில் பெண்கள் வெள்ளியால் செய்த அழகுபடுத்தப்பட்ட விலையுயர்ந்த மற்றும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மெட்டிகளை அணிவர். பித்தளை, நிக்கல் அல்லது துருப்பிடிக்காத எஃகு முதலியவற்றிலும் மெட்டி தயாரிக்கப்படுகிறது. ஆனால் பெண்கள் தங்கத்தால் செய்த மெட்டிகளை பெரும்பாலும் அணிவதில்லை.

மெட்டி அணியும் திருமணச் சடங்கு
ஆண்களுக்கு திருமணத்தின் போது மெட்டி அணிவிக்கப்படுகிறது
ஆண்களுக்கு திருமணத்தின் போது மெட்டி அணிவிக்கப்படுகிறது

உத்தர பிரதேசம் மற்றும் பீகார் போன்ற வட இந்திய மாநிலங்களில் திருமணமான பெண்கள் பொதுவாக பிச்சியா (bichiya) என்று அழைக்கப்படும் மெட்டிகளை அணிவர். தென்னிந்தியாவில் பெண்கள் தங்களது கால்விரல்களில் (முதல் மற்றும் கடைசி விரல்களைத் தவிர) மெட்டிகளை அணிகின்றனர். இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தில் மெட்டி அணிவது கருப்பை நரம்புடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.[2]

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்டி&oldid=2943640" இலிருந்து மீள்விக்கப்பட்டது