மெரீனா ஸ்வெட்டேவா

உருசிய கவிஞர், எழுத்தாளர்

மெரினா இவனோவ்னா ஸ்வெட்டேவா ( உருசிய மொழி: Мари́на Ива́новна Цвета́ева ; 8 அக்டோபர் 1892 - 31 ஆகஸ்ட் 1941) என்பவர் ஒரு உருசிய மற்றும் சோவியத் கவிஞர். இவரது படைப்புகள் இருபதாம் நூற்றாண்டின் உருசிய இலக்கியங்களில் மிகச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. [1] இவர் 1917 உருசியப் புரட்சி மற்றும் அதைத் தொடர்ந்து வந்த மாஸ்கோ பஞ்சம் பற்றி வாழ்ந்து எழுதினார். தனது மகள் இரினாவை பட்டினியிலிருந்து காப்பாற்றும் முயற்சியில், 1919 ஆம் ஆண்டில் அவளை ஒரு அரசு அனாதை இல்லத்தில் சேர்த்தார். அங்கு அவள் பசியால் இறந்தாள். ஸ்வேடேவா 1922 இல் உருசியாவை விட்டு வெளியேறி, பின்னர் 1939 இல் மாஸ்கோவுக்கு மீண்டும் திரும்புவதற்கு முன்பு பாரிஸ், பெர்லின் மற்றும் ப்ராக் ஆகிய நாடுகளில் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்தார். இவரது கணவர் செர்ஜி எஃப்ரான் மற்றும் அவரது மகள் அரியட்னா அஃப்ரான் ( ஆல்யா ) ஆகியோர் உளவு குற்றச்சாட்டில் 1941 இல் கைது செய்யப்பட்டனர்; இவரது கணவர் தூக்கிலிடப்பட்டார். ஸ்வேடேவா 1941 இல் தற்கொலை செய்து கொண்டார். ஒரு ஆர்வமுள்ள கவிஞராக, துனிச்சலான மொழியியல் இலக்கியப் பரிசோதனையும் இவரது காலத்திய ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்றாசிரியராகவும் இருந்தார்.

மெரீனா ஸ்வெட்டேவா
1925 இல் ஸ்வெட்டேவா
1925 இல் ஸ்வெட்டேவா
பிறப்புமெரினா இவனோவ்னா ஸ்வெட்டேவா
(1892-10-08)8 அக்டோபர் 1892
உருசியப் பேரரசு, மாஸ்கோ
இறப்பு31 ஆகத்து 1941(1941-08-31) (அகவை 48)
சோவியத் ஒன்றியம், டாடர் தன்னாட்சி சோவியத் சோசலிச குடியரசு, யெலபுகா
தொழில்கவிஞரும், எழுத்தாளரும்
கல்விபாரிஸ், சோர்போன்
இலக்கிய இயக்கம்Russian symbolism
துணைவர்செர்ஜி எஃப்ரான்
பிள்ளைகள்3
கையொப்பம்

பிறப்பும் கல்வியும் தொகு

ஸ்வெட்டேவா மாஸ்கோவில் புகழ்பெற்ற பேராசிரியரான இவான் விளாடிமிரோவிச் ஸ்வெடேவுக்கும், நாகரிகமிக்க ஒரு மங்கை நல்லாளுக்கும் மகளாகப் பிறந்தவள் ஸ்விட்சர்லாந்திலும் தெற்கு ஜெர்மனியிலும் கல்வி பயின்றார்; பாரிசு சார்போன் பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து உலகப் பேரறிஞர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டுத்தான் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். உருசியக் கவிஞர் வொலோவினின் கவிதையாற்றலால் ஈர்க்கப்பட்டு, கிரிமியாவில் அவருக்குச் சொந்தமான கோக்டெபெல் இல்லத்தில் தங்கியிருந்தபோது, ‘செர்ஜி எஃப்ரன்’ என்பவரைச் சந்தித்து மணந்து இரண்டு ஆண் குழந்தைகளையும் ஒரு பெண் மகவையும் பெற்றெடுத்தவர்.[2]

உருசியாவுக்கு வெளியே தொகு

உருசியாவில் உள்நாட்டுப் போர் நடந்தபோது இவர் கணவன் செர்ஜி, ஜாரின் வெண்படைக்கு ஆதரவாக இருந்தார். உள் நாட்டுப் போரில் வெண்படை தோற்றபோது, இவரும் இவருடைய கணவரும் உருசிய நாட்டைவிட்டு வெளியேறினர். இவருடைய கணவர் சோவியத் அதிகாரிகளுக்குப் பயந்து தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டார். பல இடங்களில் சுற்றியலைந்துவிட்டு 1922-இல் செக்நாட்டின் தலைநகரான பிராகுவில் இருவரும் ஒன்று சேர்ந்தனர். மூன்று ஆண்டுகள் பிராகுவின் புறநகரில் வாழ்ந்த பிறகு இவருடைய கணவர் தன் கொள்கையை மாற்றிக் கொண்டு ஸ்டாலினின் உளவுப் படையில் சேர்ந்து பணியாற்றினார். டிராஸ்கியின் மகனுடைய கொலையில் அவருக்கும் பங்குண்டு. அரசியற்பணி நிமித்தம் இவளுடைய கணவர் பல இடங்களில் சுற்றியலைந்த காரணத்தால், ஸ்வெட்டேவாவின் வாழ்க்கை பெரும்பாலும் தனிமையிலேயே கழிந்தது.[2]

இவரின் தனிமை பலரோடு காதல் தொடர்பு கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கியது. 1915-16ஆம் ஆண்டுகளில் உருசியக் கவிஞர் மேண்டல்ஸ்டாமைக் காதலித்து அவருடன் வாழ்ந்தார். 1925-இல் பிராகுவில் வாழ்ந்தபோது, ஒரு வெண்படை அதிகாரியைக் காதலித்து அவருடன் ஓராண்டு வாழ்ந்தார். பிறகு 1926-இல் தன் கணவன் செர்ஜியுடன் மீண்டும் சேர்ந்து கொண்டார், பாரிசில் வாழ்ந்த காலத்திலும் இவருக்குப் பலரோடு தொடர்பிருந்தது. இவர் ஓயாமல் காதலித்தார்: காதலிக்கப்பட்டார்; உணர்ச்சி மிகுந்த காதற்கவிதைகள் எழுதிக் குவித்தார்.[2]

பொதுவுடைமைக் கொள்கையும், ஸ்டாலினின் சர்வாதிகாரமும் இவருக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. கவிஞனுக்கும் அவன் படைப்புக்கும் கட்டுப்பாடு இருக்கக் கூடாது என்று கருதினார். அறிஞர்கள் சுதந்திரமாகச் சிந்திக்க அனுமதிக்கப்படவேண்டும் என்பது இவர் கொள்கை. கவிஞனின் கற்பனைக்கும் பாடு பொருளுக்கும் எல்லை கட்டிய உருசிய அதிகாரவர்க்கத்தை வெறுத்தார்; அவர்களுக்குத் துதி பாடிய உருசியக் கவிஞர்களைச் சொல்லம்புகளால் சாடினார்.

புஷ்கினும் அலெக்சாண்டர் பிளாக்கும் இவருக்குப் பிடித்தமான கவிஞர்கள். அக்மடோவா, மாயகோவ்ஸ்கி, பாஸ்டர் நாக் ஆகியோரைப் பாராட்டிக் கவிதைகள் எழுதியிருக்கிறார். ஐரோப்பியக் கவிஞர்களுள் ஜெர்மானியக் கவிஞரான ரில்க்கை மிக உயர்ந்த கவிஞராகப் போற்றினார்; அவரோடு கடிதத் தொடர்பும் கொண்டிருந்தார். மாயகோவ்ஸ்கி மக்கள் கவிஞன், ஸ்வெட்டேவா தன்னைப் பற்றியும், தன் சொந்த உணர்ச்சிகளையும் பாடியவர். கொள்கையில் இருவரும் எதிரெதிர் துருவங்கள். என்றாலும் மாயகோவ்ஸ்கியின் படைப்பாற்றலை ஸ்வெட்டேலாவியத்து போற்றுகிறார்.

மாய கோவ்ஸ்கி 1927-ஆம் ஆண்டு பாரிசு நகரம் சென்றிருந்த போது அங்கிருந்த உருசிய மாணவர்கள் வால்டையர் விடுதியில் (Cafe Voltaire) ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர். அக்கூட்டத்தில் மாயகோவ்ஸ்கி தமது கவிதைகளை வாசித்ததோடு, உருசிய இலக்கியத்தின் வளர்ச்சி பற்றியும் பேசினார். அப்போது ‘உருசிய வெளியேறிகள்’ (emigres) அந்த விடுதிக்கு முன் கூடி நின்று குழப்பம் செய்து கூச்சலிட்டனர். இக் கூட்டம் நடந்தபோது ஸ்வெட்டேவா அங்கில்லை. என்றாலும் மாய கோவ்ஸ்கியை ஆதரித்து ‘யூரேசி’ (Eurasie) என்ற செய்தித்தாளில் ஓர் அறிக்கை வெளியிட்டார். அவ்வறிக்கையைப் படித்த ‘உருசிய வெளியேறிகள்’ ஸ்வெட்டேவாவைத் தங்கள் கூட்டத்திலிருந்து விலக்கி வைத்தனர். தங்கள் ஏடுகளிலும் அவருடைய படைப்புக்களை வெளியிடுவதை நிறுத்திக் கொண்டனர்.[2]

மீண்டும் உருசிய வாழ்கையும், மரணமும் தொகு

பதினேழு ஆண்டுகள் நாடுகடந்து ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த பிறகு, 1939- இல் தன் கணவனைத் தேடி ஸ்வெட்டேவா மீண்டும் உருசியாவிற்கு வந்தார். நெடுநாட்களாகக் காண விரும்பிய கவிஞர் அக்மடோவாவை நேரில் சந்தித்தார். அப்போது உருசியா மீண்டும் ஜெர்மனியோடு இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டிருந்தது. உருசிய அதிகாரிகள் எல்லோரையும் ஐயத்தோடு பார்த்தனர். ஐயத்துக்குள்ளானவர்களைக் கொன்றனர். ஸ்வெட்டேவாவின் பழைய வரலாற்றை அறிந்த யாரும் அவரை ஆதரிக்கமுன் வரவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காகக் கூலிக்கு மொழிபெயர்ப்பு வேலைகள் செய்தார். இவருடைய குடும்பச் சொத்துக்கள் எல்லாம் உருசிய அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டு எல்லாருக்கும் பிரித்து வழங்கப்பட்டு விட்டன. ஜெர்மன் படைகள் நாட்டின் எல்லைக்குள் நுழைந்து விட்டபடியால், ஸ்வெட்டேவாவும் மாஸ்கோவை விட்டு ‘எலாபுகா’ என்ற உள்நாட்டு நகருக்குக் குடிபெயர்த்தார். அங்குப் பிழைக்க வழியின்றிச் சுருக்கிட்டுக் கொண்டு இறந்தார். உருசிய நாட்டின் புகழ்பெற்று கவிஞர்களுள் ஒருவரான ஸ்வெட்டேவா ஒரு சாதாரண இடுகாட்டில் எந்தச் சிறப்புமில்லாமல் புதைக்கப்பட்டார்.[2]

இலக்கியப் படைப்புகள் தொகு

இவர் படைப்புக்களில் சைக் கவிதைகள் (Psyche_poems) மாஸ்கோ கவிதை (Verse about Moscow), செங்குதிரை மீது (Astride a Red Horse) என்பவை குறிப்பிடத்தக்கவை . சிறுமி ஜார் (The Girl Tsar) எகொருக்ஸ் (Egarukså) என்ற இரண்டும் குழந்தைகளுக்கான நீண்ட கற்பனைக் கவிதைகள் (Fairy tale poems), உள்ளறிவின் வெளிச்சத்தில் கலை (Art in the Light of Conscience) என்ற கட்டுரை நூலில், கவிதைகளைப் பற்றிய நுட்பமான சிந்தனைகளை ஸ்வெட்டேவா பொதிந்து வைத்திருக்கிறார்.[2]

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Tsvetaeva, Marina Ivanovna" Who's Who in the Twentieth Century. Oxford University Press, 1999.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 கவிஞர் முருகு சுந்தரம் (1993). "புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்". நூல். அன்னம் (பி)லிட். pp. 78–88. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெரீனா_ஸ்வெட்டேவா&oldid=2987482" இலிருந்து மீள்விக்கப்பட்டது