மேகதூதம்
மேகதூதம் (சமற்கிருதம்: Meghadūtam; "மேக தூதன்" என்று பொருள்) புகழ்பெற்ற சமற்கிருத புலவரான காளிதாசரால் இயற்றப்பட்ட ஒரு காவியம்[1]. இது தமிழில் உள்ள தூது இலக்கியத்தை ஒத்தது.
பணி காரணமாக நீண்ட நாட்களாக திரும்பாத தலைவர், தன் மனைவிக்கு மேகத்தை தூதுவிடுவதாக இப்பாடல் அமைகிறது. இது பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
காவியத்தை பற்றிய குறிப்புகள்
தொகுஇக்காவியத்தில் 111 பாடல்கள் உள்ளன[2], இது காளிதாசனின் மிகப் பிரபலமான படைப்புகளில் ஒன்றாகும். இப்படைப்பு 'பூர்வ-மேகம்', 'உத்தர-மேகம்' என இரு பிரிவுகளை கொண்டது. ஒரு யக்ஷன் (செல்வத்தின் அரசனான குபேர மன்னனின் ஒரு பிரஜை), தன் பணிகளை சரியாக செய்யாததால் ராஜ்யத்தில் இருந்து மத்திய இந்தியாவிற்கு விரட்டப்பட்டுவிடுகிறான். அவன் வானில் செல்லும் ஒரு மேகத்தை பார்த்து, இமயமலை அடிவாரத்தில் இருக்கும் அலகாபுரி நகரில் வசிக்கும் தன் மனைவிக்கு ஒரு தகவல் எடுத்துசெல்லுமாறு கேட்கிறான். அலகாபுரி செல்லும் வழியில் உள்ள மனதை கவரும் காட்சிகளை வழிகாட்டியாக இருக்க மேகத்திடம் கூறுகிறான் தலைவன்.
மேகதூதத்தின் பிரபலம் காரணமாக அதே போல் எழுந்த பல "ஸந்தேஶ" (தூது) காவியங்கள் பல மேகதூதம் இயற்றப்பட்ட மந்தகிரந்த சந்தத்தில் இயற்றப்பட்டுள்ளன. உதாரணமாக ஹம்ஸ-ஸந்தேஶத்தில், இராமன் சீதைக்கு தூதாக ஒரு ஹம்ஸத்தை (அன்னத்தை), வழியில் காணக்கூடிய அற்புத காட்சிகளை வர்ணித்து, அனுப்புகிறான்.
மல்லிநாதர் என்னும் அறிஞர் இதற்கு வடமொழியில் உரை எழுதியுள்ளார்[3]. 1813-இல் ஹோரேஸ் ஹேய்மேன் வில்ஸன் என்ற அறிஞரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. பல்வேறு மொழிகளில் அதன்பிறகு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
தீபா மேத்தாவின் 'வாடர்' என்னும் திரைப்படத்தில் இக்காவியத்திலிருந்து சில வரிகள் இடம்பெறுகின்றன.