மொழிபெயர்ப்பு இலக்கியம்
படைப்பிலக்கியத்துக்கு நிகராக மதிக்கப்படும் மொழிபெயர்ப்பு இலக்கியம் உலகில் வழங்கிவரும் பல்வேறு மொழிகளின் பனுவல்களினூடாக காணும் பல்வேறுபட்ட மக்களின் கலை உணர்வு வெளிப்பாடு முதல் பண்பாடு, வாழ்க்கைமுறை, அரசியல், சிந்தனைப்போக்கு என யாவற்றையும் எண்ணற்ற பெயர்ப்புப் பனுவல்கள் வழி எல்லைகளைத் தாண்டி கொண்டு சேர்ப்பது. புறவயமான அரசியல், சமூக முயற்சிகளை விடவும் உலக மானுடன் என்ற கருத்தாக்கம் மொழிபெயர்ப்புப் பனுவல்களினூடாக காலம் காலமாக இலக்கிய வாசகர்கள் மனதில் வலுவுடன் தொழிற்பட்டு வருகிறது. மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் வழியாக உலகின் இலக்கியங்கள் யாவும் புதிய வெளிச்சத்தையும் அதன் தாக்கத்தினால் புதிய தடங்களையும் கண்டிருக்கின்றன. இதற்கு தமிழ் இலக்கியமும் விலக்கல்ல என்றே சொல்ல வேண்டும். தமிழின் நெடிய இலக்கிய மரபில் தொன்று தொட்டே, மொழிபெயர்ப்பின் ஒரு வகையாக கருதப்படும் தழுவல் ஒரு கூறுபாடாக இருந்து வந்திருக்கிறது. தொடக்க காலத்தில் வடமொழி இலக்கியங்களைத் தழுவி படைப்புகள் ஆக்கப்பட்டதாக ஆய்வாளர் கூறுவர். கம்பனின் "இராமாயணம்" மிகப் போற்றப்படும் தமிழ்ப்படைப்பேயாயினும் அது வடமொழி மூலத்தைத் தழுவியது என்பதை நாம் மறக்கலாகாது. ஐரோப்பியர் வருகை தொடங்கி இன்று வரை தமிழிலக்கியத்துக்கு மொழிபெயர்ப்பாளர்கள் தொடர்ச்சியாகத் தங்கள் பங்களிப்பினைச் செய்து வருகின்றனர். தமிழிலக்கியச் சூழலில் மொழிபெயர்ப்பும் தனக்கென பொருட்படுத்தத்தக்க ஓர் இடத்தைக் கொண்டதாகவே இருந்து வருகிறது.
மொழிபெயர்ப்பின் தேவை
தொகுவேறு ஒரு மொழியில் காணும் சிறந்த படைப்புக்களை ஒருவரது சொந்த மொழியினரும் வாசிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கித் தருதல், ஒருவரது சொந்த மொழியில் காணும் சிறந்த படைப்புக்களை வேற்று மொழியினரும் வாசிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கித் தருதல், இவையே (இலக்கியத்தில்) மொழிபெயர்ப்புக்கான தேவையை ஏற்படுத்துகின்றன. தமிழிலக்கியத்தில் மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் நிறுவனங்களைக் காட்டிலும் தனியர் தேர்வுகளைக் கொண்டே அமைந்தவை. தற்போது இப்போக்கு மாறி வருகிறது. திட்டமிட்ட வகையில் மொழிபெயர்ப்புகளைப் பதிப்பகங்கள் வெளியிட்டு வருகின்றன.
மொழிபெயர்ப்பு-வரையறை
தொகுTranslation என்ற வார்த்தை "translatio" என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து வந்தது, இதற்கு ‘கொண்டு சொல்லுதல்’ என்று பொருள். ‘ஒரு மூல மொழிப் பனுவலின் பொருளை அதற்கு இணையான இலக்கு மொழிப் பனுவலின் வழியாக வெளிப்படுத்துதலே மொழிபெயர்ப்பு.’ இந்த வரையறையை மொழிபெயர்ப்பு பற்றிய மிக அடிப்படையானவொரு வரையறையாகக் கொள்ளலாம். இதில் ‘அப்பனுவலுக்கு இணையான’ என்ற பயன்பாடு கூர்ந்து கவனிக்கத்தக்கது. மொழிபெயர்ப்பு எனும்போது இலக்கிய மொழிபெயர்ப்பையே பெரிதும் நாம் சுட்டுகிறோம். தழுவல், சுருக்கம், மொழியாக்கம், நேர்மொழிபெயர்ப்பு என்பவற்றை மொழிபெயர்ப்பின் வகைகளாகக் கொண்டால் நேர்மொழிபெயர்ப்பே இலக்கிய மொழிபெயர்ப்பாக அமைய முடியும். ஏனென்றால் அதுவே ‘பனுவலுக்கு இணையான’ எனும் அடிப்படையைக் கொண்டது. தழுவல் மூலப் படைப்பின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு அதனை இலக்குமொழி சார்ந்த பண்பாட்டுக் கூறுகளுக்கு ஏற்ப மீளாக்கம் செய்வது ஆகும். உலக இலக்கியத்தில் தழுவல் ஏற்கப்பட்ட மொழிபெயர்ப்பு முறையாகக் கொள்ளப்படுவதில்லை, அது மூல ஆசிரியருக்கு இழைக்கப்படும் துரோகமாகக் கருதப்படுகிறது. சுருக்கம் என்பது தேவை சார்ந்த எளிய மொழிபெயர்ப்பு முறை. அதிகமும் ஒரு படைப்பை அறிமுகம் செய்யும் வகையில் சுருக்கம் அமைகிறது. மொழியாக்கம் நேர்மொழிபெயர்ப்பில் கடும் சிக்கலையுண்டாக்கும் படைப்புகளைப் பனுவலுடனான பொருத்தப்பாடு, கருத்து சிதையாமை, கோர்வை இவற்றை அடிப்படைகளாகக்கொண்டு சிறிதளவு சுதந்திரத்துடன் வெளிப்பாட்டு சிக்கலற்ற பனுவலாக மொழிபெயர்ப்பது மொழியாக்கம். மொழியாக்க முறை அதிகமும் கவிதை மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்படுகிறது. நேர் மொழிபெயர்ப்பு சமரசமற்ற இலக்கிய மொழிபெயர்ப்பு. மூலப் பனுவலினின்று சற்றும் வழுவாமல் மொழிபெயர்ப்புப் பனுவலை உருவாக்குவது.
தமிழ் மொழிபெயர்ப்பு வரலாறு
தொகு‘தமிழில் உரைநடை வரலாற்றின் தொடக்கம் மொழிபெயர்ப்புகளின் வரலாறுதான்’ என்கிறார் மொழிபெயர்ப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வரும் ந. முருகேசபாண்டியன். ஐரோப்பியர் வருகையை அடுத்து கிறித்தவ மத நூல்களும் விவிலியமும் (விவிலியம்) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. பின் கடந்த நூற்றாண்டில் மத்தியில் சோவியத் யூனியன் பதிப்பகங்களான இராதுகா, முன்னேற்றப் பதிப்பகம், மீர் பதிப்பகம் போன்றன தமிழில் இலக்கியம் மேலும் பல்துறை சார்ந்த உருசிய நூல்களின் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டுள்ளன. உருசிய இலக்கியங்கள் ஒரு படையெடுப்பாக தமிழுக்கு வந்து பரவலாக அவை வாசகரையும் சென்றடைந்தமை தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க காலகட்டமாகும். பின், எண்பதுகளில் இலக்கியக் கோட்பாடு சார் உரையாடல்களைத் தமிழில் தொடங்கி வைத்ததில் மொழிபெயர்ப்புகளுக்குப் பெரும் பங்குண்டு. அமெரிக்க, ஐரோப்பியப் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டபோதும் தொண்ணூறுகளில் இலத்தீனமெரிக்கப் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு தீவிரமானதொரு ஆர்வத்துடன் வாசிக்கப்பட்டன. தற்போது இலத்தீனமெரிக்கப் படைப்புகள் மீதான முனைப்பு குறைந்துவிட்ட போதும் அப்பெருவிருப்பின் அதிர்வுகளை ஒருவர் இன்னும் உணர முடியும். இன்றைய நிலையில் பரவலாக, மேலை இலக்கியங்கள் மட்டுமல்லாது ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள், மேலும் அதிகம் அறியப்படாத வட்டாரங்களிலிருந்தும் படைப்புகள் தமிழிக்கு கொண்டுவரப்படுகின்றன.[1][2]
மொழிபெயர்ப்பு எனும்போது இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்துள்ள படைப்புகள் குறித்தும் பதிவதஙின்றிய்யமையாதது. பிற இந்திய மொழிகளோடு ஒப்பிடுகையில் மலையாளம், வங்காளம் ஆகிய மொழிப் படைப்புகள் தமிழில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தற்போது வங்காள மொழிப் படைப்புகள் அதிகம் மொழிபெயர்க்கப்படுவதில்லை என்றாலும் தொடர்ந்து மலையாள படைப்புகள் தமிழுக்கு வந்தபடியிருக்கின்றன.மலையாள-தமிழ் இலக்கிய உலகங்களுக்கிடையேயான உறவு இதற்கு காரணமாக இருக்கக் கூடும். கன்னடம், மாரத்தி, இந்தி போன்ற மொழிகளிலிருந்தும் படைப்புகள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்படுகின்றன. சாகித்ய அகாதமி, நேசனல் புக் டிரசுட்டு ஆகியன இந்திய மொழி படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வருதில் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. தமிழிலிருந்து பிறமொழிகளுக்கு, குறிப்பாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது அரிதாகவே நிகழ்கிறது.
மொழிபெயர்ப்பு மூலம் உலகின் பல அரிய படைப்புகள் தமிழிலக்கியத்தை அடைந்துள்ளன. அப்படைப்புகளின் பட்டியல் மிக நீளமானது. கடந்த பத்தாண்டுகளில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதன்மையான சில படைப்புகள் 'அந்நியன்" -ஆல்பர் காம்யு,'சொற்கள்'- ழாக் பிரவர்,"குட்டி இளவரசன்"- எக்சுபெரி, "உருமாற்றம்"- காப்கா, "சிதைவுகள்"- சினுவா ஆச்சிபி, "சிலுவையில் தொங்கும் சாத்தான்"- ங்கூகி வா தியாங்கோ, "தூங்கும் அழகிகளின் இல்லம்" -யசுனாரி கவாபட்டா. "சதத் காசன் மாண்ட்டோ படைப்புகள்", "ஒரு தந்தையின் நினைவுக்குறிப்புகள்: இராசன் கொலை வழக்கு"- ஈச்வராச்சாரியார். "உலகக் கவிதைகள்"- தொகு- பிரம்மராசன். இது போல தற்போது மொழிபெயர்ப்பில் புவியரசு, பிரம்மராசன், ஆர்.சிவக்குமார், ஆனந்த், வெ.சிரீராம், சா.தேவதாசு, சி. குப்புசாமி, குறிஞ்சி வேலன், பாவண்ணன், அமரந்தா, லதா ராமகிருட்டிணன், எசு. பாலச்சந்திரன், நிர்மால்யா, அசதா, மு தனஞ்செழியன். போன்றோர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழில் மொழிபெயர்ப்புக்கென ஒரு இதழும் நடத்தப்படுகிறது. ‘திசை எட்டும்’ என்ற அந்த இதழின் ஆசிரியர் குறிஞ்சி வேலன் ஆவார்.
மொழிபெயர்ப்பின் விளைவுகள்
தொகுமொழிபெயர்பெயர்ப்புகளால் தமிழில் ஏற்பட்ட மாற்றங்களாக பின் வருவனவற்றைச் சுட்டலாம்; உலக இலக்கியப் போக்குகள் பல்வேறு உத்திகள், வகைமைகள் சார்ந்த எழுத்துக்கள் அறிமுகமாயின. நவீனத்தை நோக்கிய தமிழிலக்கியத்தின் நகர்வுக்கு துணை புரிந்தன. தமிழ் எழுத்துலகில் பரீட்ச்சார்த்தங்களும், பழைய வகைமைகளில் துலக்கங்களும் ஏற்பட வழி ஏற்பட்டது.
மொழிபெயர்ப்பில் சிக்கல்கள்
தொகு’குறிப்பிட்ட ஒரு மொழியில், குறிப்பிட்ட ஒரு வார்த்தை பல அர்த்தங்களைக் கொண்டிருக்கும்.’ என்பதிலிருந்து ஒரு மொழி சார்ந்த பண்பாட்டுப் பின்புலங்களை அறிந்துவைத்திருத்தல் வரை மொழிபெயர்ப்பாளன் கடந்து வர வேண்டிய தடைகள் பல. பழமொழிகள், மரபுத் தொடர்களை மொழிபெயர்க்கையில் கவனம் தேவை. வாக்கிய அமைப்பு, இடம் சார்ந்த பொருள் இவற்றையும் கவனித்து மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறது. விடாமுயற்சி, கவனம், மொழியறிவு, மொழிசார் பண்பாடு குறித்த புரிதல், படைப்பின் தொனி, படைப்பு மொழியின் சிக்கல், அடர்த்தி ஆகியவற்றை உள்வாங்கும் திறன் ஆகியவை ஒரு திறமையான மொழிபெயர்ப்பாளனின் அடையாளங்களாக அமையக்கூடும். ‘எவ்வளவு பெரிய மொழிபெயர்ப்பாளராக இருந்தாலும் ஒருவர் அகராதியைப் புரட்டத் தயங்கக் கூடாது’ என்கிற தியோடர் சேவரியின் கூற்றை ஒரு மொழிபெயர்ப்பாளன் எப்போதும் மறத்தல் கூடாது.
‘மொழிபெயர்ப்பாளர்கள் துரோகிகள்’ என்கிறது ஒரு இத்தாலியப் பழமொழி. உண்மையில் மொழிபெயர்ப்பு என்பது எத்தனை சவால் நிறைந்த செயல் என்பதைக் குறிப்பதாக இப்பழமொழியை புரிந்துக் கொள்ளவேண்டும். மொழிபெயர்ப்புகள் வழி உலகை இணைக்கிறார்கள் என்பது ஒரு மிகையான கூற்று போலத் தோன்றினாலும் அது உண்மையானதே.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Art of Translation – Theodore Savory". பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2017.
- ↑ "மொழிபெயர்ப்பு முறைகளும், தமிழில் இலக்கிய மொழிபெயர்ப்பு முயற்சிகளும் : ந.முருகேசபாண்டியன்". Archived from the original on 2016-05-10. பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2017.