யசோதர காவியம்

ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று

தமிழில் எழுந்த ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான யசோதர காவியம், ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். இந்நூல் ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்து சமயத்தில் ஒரு காலத்தில் தெய்வங்களுக்கு உயிர்ப் பலி கொடுப்பது வழக்கமாக இருந்து வந்தது. எனினும் பிற்காலத்தில் இதில் சில சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதன்படி உயிர்களுக்குப் பதிலாக மாவினால் செய்த அவற்றின் உருவங்களை வைத்துப் பலி கொடுப்பது போல் பாவனை செய்யும் வழக்கம் ஏற்பட்டது. உயிர்ப்பலியைத் தீவிரமாக எதிர்த்த சமண சமயம், இப் பாவனை செய்யும் முறையும் கொலையை ஒத்ததே எனவும், இதிலும் கொலை செய்யும் எண்ணம் இருப்பதால் கொலை செய்வதால் ஏற்படும் கர்ம வினைப் பயன்கள் பாவனைக் கொலையிலும் ஏற்படும் என்றும் வலியுறுத்தியது.

மேற்சொன்ன சமணக் கொள்கையை விளக்கி எழுந்ததே யசோதர காவியம் ஆகும். உதய நாட்டு மன்னன் மாரிதத்தனின் ஆணைக்கு இணங்க உயிர்ப்பலி தருவதற்காக இழுத்து வரப்பட்ட இளம் சமணத் துறவிகள் இருவர் முன்கதை கூறும் பாங்கில் அமைந்தது இந் நூல்.

அரிசி மாவினால் செய்த கோழி ஒன்றைக் காளிக்குப் பலி கொடுத்த யசோதரன் என்னும் மன்னனும் அவனது தாயும் அதனால் ஏற்பட்ட கர்ம வினையினால் எடுத்த பிறவிகள் பற்றியும், அவர்கள் அடைந்த துன்பங்கள் பற்றியும், இறுதியில் அவர்கள் அபயருசி, அபயமதி என்பவர்களாக மனிதப் பிறவி எடுத்து மனிதப்பலிக்காகக் கொண்டுவரப்பட்ட நிலை குறித்தும் கூறுவதே இந்நூலின் கதையாகும்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யசோதர_காவியம்&oldid=3643960" இலிருந்து மீள்விக்கப்பட்டது