மெய்மையியம் (கலை)
மெய்மையியம் அல்லது இயல்பியம் (Realism) என்பது, அலங்காரமோ, விளக்கமோ இன்றி உலகில் அன்றாட வாழ்வில் காண்பவற்றை அப்படியே காண்கலைகளிலோ, இலக்கியத்திலோ எடுத்துக் காட்டுவதைக் குறிக்கும். இது, உண்மையை எடுத்துக் காட்டும் நோக்கில் அருவருப்பு, இழிந்தநிலை ஆகியவற்றை உள்ளடக்கும் படைப்புக்களையும் குறிக்கக்கூடும். மெய்மையியம் என்பது 1850 களில் பிரான்ஸ் நாட்டில்,1848 ஆண்டு நிகழ்ந்த பிரெஞ்சு புரட்சிக்குப் பிறகு, உருவான ஒரு கலை இயக்கத்தையும் குறிக்கும்[1]. இது, 1800 களின் நடுப்பகுதியில் மிகவும் புகழ் பெற்ற கலை வடிவமாகத் திகழ்ந்தது. காண்பவற்றை அப்படியே படமாக்கித் தரும் புதிய கலையான நிழற்படக் கலையின் அறிமுகப்படுத்தப்பட்டபோது, காண்பது போலவே படங்களை உருவாக்கும் விருப்பு மக்களிடையே ஏற்பட்டது. இக்காலத்திலேயே இயல்பிய இயக்கம் உருவானது.
நிழற்படங்களின் அறிமுகத்துடன் மெய்மையியத்தின் புகழ் வளர்ச்சியடைந்தது. மெய்மையியத்தினர் 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் பிரான்சிய இலக்கியத் துறையில் முன்னணியில் இருந்த புத்தார்வக் கற்பனையியத்துக்கு எதிரானவர்களாக இருந்தனர். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களால் பாதிக்கப்படாத மெய்மையியம் புறநோக்கு உண்மைக் (objective reality) கொள்கையில் நம்பிக்கை கொண்டது. உண்மையும், துல்லியமும் பல மெய்மையியத்தினரின் குறிக்கோளாக இருந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Metropolitan Museum of Art". Metmuseum.org. 2014-06-02. பார்க்கப்பட்ட நாள் 2014-07-15.