ஆளவந்தார்

(யமுனாச்சாரியார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வைணவ ஆசாரியனாகிய ஆளவந்தார் பிரபந்தத்தை மீட்டெடுத்த நாதமுனிகளின் பேரனாக ஈசுவரமுனிக்கு மகனாக வீரநாராயணபுரத்தில் (தற்போதைய காட்டுமன்னார்கோயிலில்) பொ.ஊ. 912 ஆம் ஆண்டு (பொ.ஊ. 918 என்றும் பொ.ஊ. 976 என்றும் சொல்லப்படுகிறது) ஆடிமாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தார். நாதமுனிகளின் சீடரான மணக்கால் நம்பிகளால் யமுனைத்துறைவன் என இவருக்கு பெயர் சூட்டப்பட்டது. மணக்கால் நம்பிக்குப் பிறகு ஆசாரிய பட்டம் பெற்றவர் ஆளவந்தார். இராமானுசரின் முதன்மை குரு இவர் என்பதும், திருமலையில் திருவேங்கடவனுக்குண்டான கட்டிய பூமாலைகளை சேர்த்துவைக்கும் இடம் இவருடைய பெயரைக்கொண்டே இன்றும் யமுனாத்துறை என்று அழைக்கப்பட்டுவருகிறது என்பதும் இவரின் சிறப்பாகும்.

ஆளவந்தார்
பிறப்புயமுனைத்துறைவன்
காட்டுமன்னார்கோயில், தமிழ்நாடு
இறப்புதிருவரங்கம், தமிழ்நாடு

பாலப்பருவம்

தொகு

நாதமுனிகள்,தன் மகன் ஈசுரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் எனப் பெயர் சூட்டி, வைணவத் திருமறையெழுத்துக் காப்புப்[1] புகட்டுமாறு தன் மாணாக்கர் உய்யக்கொண்டாரை வேண்டிக்கொண்டு நாதமுனிகள் திருநாடு சென்றார்.[2] அந்தப் பணியை உய்யக்கொண்டார், தன் மாணாக்கர் மணக்கால் நம்பியிடம் ஒப்படைத்துவிட்டுக் காலமானார். மணக்கால் நம்பி ஈசுவரமுனியின் மகனுக்கு முறைப்படி யமுனைத்துறைவன் எனப் பெயர்சூட்டி வாழ்த்தினார்.

ஆளவந்தவர்(ரோ?)

தொகு

மகாபாஷ்ய பட்டரிடம் யமுனைத்துறைவன் பால கல்வி பயின்று வந்த காலத்தே பட்டருக்கு அரசவையிலிருந்து ஓர் ஓலை வந்தது. அதில் பாஷ்ய பட்டர் ஆக்கியாழ்வானை வாதில்வெல்ல வேண்டும் இல்லையேல் தோல்வியை ஒப்புக்கொண்டு கப்பம் கட்டவேண்டும் என எழுதப்பட்டிருந்தது. ஆக்கியாழ்வான் முன்னமே பலமுறை இவ்வாறு பலரை வென்று தனக்கு அடிமையென எழுதி வாங்கிக்கொண்டு அவர்களிடம் கப்பம் பெறுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான். அவ்வண்ணமே வந்தே இக்கடிதத்தைக் கண்ணுற்று வருத்தம் கொண்ட மகாபாஷ்ய பட்டரின் வருத்தம் தீரும் வண்ணம், யமுனைத்துறைவன் தான் தன் குருவுக்குப் பதிலாக அச்சவாலை ஏற்பதாகவும் ஆயினும் உரிய மரியாதை அளித்தால் ஒழிய தான் அரசவைக்கு வரவிரும்பவில்லை என்றும் அரசவைக்கு மறுவோலை அனுப்பினார். செய்தி அறிந்த அரசன் பல்லக்கு அனுப்பி அவரை அவைக்கு அழைத்து வந்தான். அவையில் ஆக்கியாழ்வானுக்கும் யமுனைத்துறைவனுக்குமிடையே சொற்போர் நடந்தது. அவைக்கு வந்திருந்த அரசி, அங்குச் சிறுபிள்ளையாக அமர்ந்திருந்த யமுனைத்துறைவன் அழகில் மயங்கி, இவர் ஆணவம்கொண்ட ஆக்கியாழ்வானை வெல்வார் என்று அரசனிடம் கூறினார். மறுதளித்த அரசன் மிகுந்த அறிவாளியாகிய ஆக்கியாழ்வான் தோற்றால் தன் நாட்டில் பாதியை யமுனைத்துறைவனுக்குக் தருவதாக அரசன் அரசியிடம் கூறினான்.அரசியோ ஒருவேளை இப்பிள்ளை தோற்றால் நான் பட்டத்தரசி எனும் நிலையைவிட்டு அந்தப்புரத்தில் ஒரு சேடிப்பெண்ணாக இருந்து உமக்குச் சேவை செய்வேன் என்றாள்.

சொற்போரில் ஆக்கியாழ்வான் கேட்ட அத்தனை வினாக்களுக்கும் விடைபகன்ற யமுனைத்துறைவன், இம்முறை தாம் மூன்றே கூற்றுகளைக் கூறுவதாகவும் அவற்றை மறுத்தால் தான் தோற்றதாகவும் அறிவித்து, 1. உன் தாய் மலடி அல்லள். 2. நம் அரசன் தர்மவான். 3. நம் அரசி பதிவிரதை. என்ற கூற்றுக்களையும் கூறினார்.

அம்மூன்று கூற்றுக்களையும் கேட்ட ஆக்கியாழ்வான், அம்மூன்று கூற்றுக்களையும் நீர் மறுத்தால் தன் தோல்வியை ஒப்புக்கொள்வதாக யமுனைத்துறைவனிடம் கூறினார். அம்மூன்று கூற்றுக்களையும் யமுனைத்துறைவன் மறுத்து கூறலானார்.

1.ஆக்கியாழ்வான் தன்தாய்க்கு ஒரே மகன். ஒருமரம் தோப்பாகாது. அதுபோல ஒருபிள்ளை பெற்றவள், சாத்திரப்படி மலடி. எவ்வாறெனில் அக்குழந்தைக்கு துர்மரணம் நேர்ந்தால் அவளை தாயென்று கொண்டாட மற்ற பிள்ளைகள் இல்லையாதாலால் மலடி என்று முதலாவது கூற்றை மறுத்தார்.

2.அரசன் தர்மவானாக இருந்தாலும் தன் குடிமக்கள் செய்த பாவங்கள் யாவும் அறநெறிப்படி அரசனையே சாரும். ஆகையால் இந்த அரசன் அறநெறியாளன் [3] அல்லன் என்று சொல்லி இரண்டாவது கூற்றை மறுத்தார்.

3.ஒவ்வொரு திருமண வைபவங்களிலும் மணமகன் சொல்லும் தோத்திரங்களில் ஒன்று "இவளைச் சந்திரன், கந்தர்வன் மற்றும் அக்னி ஆகிய தேவர்களிடம் இருந்து பெறுகிறேன்" என்பதாகும். மக்கட்செல்வம், செல்வம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இத்தேவதைகளின் ஆசிபெறுவதற்காக சொல்லப்படுவது. அவ்வாறெனில் இவ்வாக்கியப்படி ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் இந்நிலவுலகில் வாய்க்கும் கணவன் என்பவன் நான்காமவனாக கருதப்படுவான். இதற்கு உட்பட்ட இவ்வரசியும் கற்புக்கரசி [4] அல்லள் என்று மூன்றாவது கூற்றையும் மறுத்தார். சொற்போரில் வென்றார்.

இவற்றை செவிமடுத்த அரசி மிக்க மகிழ்ச்சிக்கொண்டு அந்த ஞானக்குழந்தை முன் மண்டியிட்டு நீர் எம்மை ஆளவந்தவரோ? என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். அரசன் தான் கூறியபடி வென்ற யமுனைத்துறைவனுக்குத் தன் நாட்டில் பாதியைத் தந்தான். அன்றிலிருந்து அரசியின் வாக்குப்படி ஆளவந்தார் எனும் பெயரோடு அரசாட்சி செய்துவந்தார்.

குருவைக் கண்டார்

தொகு

ஆளவந்தார் அரசப் போகத்தில் திளைத்து வழிபிறழ்வதை உணர்ந்து வருத்தமுற்ற மணக்கால் நம்பி தன் குருவின் ஆணைப்படி ஆளவந்தாரை நல்வழிப்படுத்த அரசவைக்குச் செல்லமுயன்றார். சாமான்யராக தென்பட்ட நம்பிகளைக் காவலர்கள் அனுமதிக்கவில்லை. ஆளவந்தாரை எவ்வாறாயினும் காணவிரும்பிய நம்பிகள் ஒரு திட்டமிட்டார். ஆளவந்தார் தூதுவளைக் கீரையை விரும்பி உண்ணும் பழக்கம் உள்ளவர். அதனால் ஆளவந்தாரின் சமையற்கூடத்தில் பணிசெய்யும் சமயற்காரனிடம் நட்புக்கொண்டு அவன் வாயிலாக ஆறுமாத காலம் தூதுவளைக் கீரையை ஆளவந்தாரின் சமையற்கூடத்திற்குத் தினமும் வழங்கிகொண்டிருந்தார். பிறகு நிறுத்திக்கொண்டார். சின்னாட்கள் கீரையை உணவில் காணாத அரசனான ஆளவந்தார் சமைப்பவர்களைக் கேட்க, அவர்கள் யாரோ ஒரு பெரியவர் தினமும் வந்து கொடுத்துக் கொண்டிருந்ததையும் தற்போது அவர் வராததையும் கூற, இதில் ஏதோ நுட்பம் இருப்பதை உணர்ந்த ஆளவந்தார் அடுத்த முறை அப்பெரியவர் வருவாறாயின் தம்மிடம் அழைத்துவருமாறு பணிக்க சேவகர்களும் அவ்வாறே செய்தனர்.நம்பியை நேரில்கண்ட ஆளவந்தார் உமக்கு என்ன வேண்டுமோ கேள் என வினவினார். நம்பி தாம் கொள்ள வரவில்லை என்றும், கொடுக்க வந்துள்ளதாகவும் கூறினார். ஆளவந்தார் தருமாறு வேண்ட நம்பி அவருக்குக் கீதை, திருவெழுத்து முதலானவற்றைப் புகட்டினார். பின்னர்க் குருகை காவலப்பனிடமும் யோகசாத்திரங்கள் பயின்று அரச பதவியைத் துறந்து தன் கருணையால் வைணவ சமயத்திற்கு ஆளவந்தவரும் ஆனார்.

சீடர்கள்

தொகு

ஆளவந்தார் செய்த வடமொழி எட்டு. அவையாவன:

  • சதுஸ்லோகி
  • ஸ்தோத்திர ரத்னம்
  • சித்தி த்ரயம்
  • ஆகம பிராமாண்யம்
  • கீதார்த்த சங்கிரகம்
  • புருஷ நிர்ணயம்
  • ஆத்மசித்தி
  • சம்வித்சித்தி
  • ஈச்வரசித்தி

இவற்றுள் சித்தி த்ரயம், கீதார்த்த சங்கிரகம் என்னும் இரண்டு நூல்கள் முறையே இவரது மாணவர் இராமானுசர் செய்த ஸ்ரீ பாஷ்யத்துக்கும், கீதா பாஷ்யத்துக்கும் ஆதாரமாக அமைந்தவை. பிறவற்றுள் சில தோத்திரம். சில கண்டணம்.

இராமானுசரை ஆட்கொண்டது

தொகு

மணக்கால் நம்பி தன்னிடம் ஒப்படைத்த திருவரங்கச் சொத்தைத் தனக்குப் பின்னர் காக்கவல்லவர் இராமானுசர் என உணர்ந்தார். காஞ்சிபுரம் சென்று அவருக்குத் தெரியாமல் அவரைப் பார்த்து மகிழ்ந்தார். திருவரங்கம் திரும்பித் தொண்டாற்றும் காலத்தில் தமது முடிவுநாள் நெருங்கும்போது தமது மாணவர் பெரிய நம்பியை அனுப்பி இராமானுசரை அழைத்துவரச் சொன்னார். ஆனால், இராமானுசர் வருவதற்கு முன்னர் ஆளவந்தார் திருநாடு எழுந்தருளினார்.[5]

ஆளவந்தார் தனியன்கள்

தொகு

ஆளவந்தார், ஆண்டாள் பாசுரங்களைப் போற்றி இரண்டு தனியன்கள் பாடியுள்ளார். அவை:

1

அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் - இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

2

சூடிக் கொடுத்தாள் சுடர்க் கொடியே தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய் - நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

தொகு
  1. அட்டாட்சரம் 'ஓம் நமோ நாராயணாய'
  2. காலமானார் என்பதைத் திருநாடு சென்றார் என்று கூறுவது வைணவ வழக்கு.
  3. தர்மவான்
  4. பதிவிரதை
  5. காலமானார் எனபதைக் கூறும் வைணவ வழக்கு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆளவந்தார்&oldid=3783501" இலிருந்து மீள்விக்கப்பட்டது