யாக்கூப் ஆஃப்னர்

யாக்கூப் கொட்ஃபிரீட் ஆஃப்னர் (Jacob Gottfried Haafner) (13 மே 1754 - 4 செப்டெம்பர் 1809) ஒரு செருமன் - ஒல்லாந்த பயண எழுத்தாளர் ஆவார். இவர் தென்னாப்பிரிக்கா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் தனது பயணங்கள் குறித்து ஐந்து நூல்களை எழுதியுள்ளார். இவர் மேற்கத்தியக் குடியேற்றவாதம், மதம் பரப்பும் நிறுவனங்கள், அடிமை முறை அகியவற்றுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர். இவர் நெதர்லாந்துக்குத் திரும்பிய பின்னர் குடியேற்றவாதத்துக்கும், மதம் பரப்பும் நிறுவனங்களுக்கும் எதிரான முதல் நூலை எழுதினார். இவர் தமிழ் மொழியை நன்கு அறிந்தவர். அத்துடன், இந்தி, வங்காளி போன்ற மொழிகளிலும், ஓரளவுக்கு சமசுக்கிருதத்திலும் இவருக்குப் பழக்கம் உண்டு.

யாக்கூப் ஆஃப்னர்
யாக்கூப் ஆஃப்னர் 1800
பிறப்பு13 மே 1754
ஹால்லி
இறப்பு4 செப்டெம்பர் 1809 (அகவை 55)
ஆம்ஸ்டர்டம்
பணிஎழுத்தாளர், traveler

இளமைக்காலம்

தொகு

யாக்கூப் ஆஃப்னர் 1754ம் ஆண்டு செருமனியில் உள்ள ஆலெ (Halle) என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு பிரான்சியர். ஒரு வைத்தியர். தாய் ஒரு செருமானியர். யாக்கூப் பிறந்து சில நாட்களின் பின்னர் தந்தையின் தொழில் காரணமாக அவர்களது குடும்பம் எம்ப்டென் என்னும் இடத்துக்குக் குடி பெயர்ந்தது. 1765ல் அவர்கள் அம்சுட்டர்டாமில் குட்டியேறினர். யாக்கூபின் தந்தைக்குத் தொழில் வாய்ப்பு எதிர்பார்த்தபடி அமையாததால், ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பலில், கப்பல் மருத்துவராகப் பணியேற்றுக் கேப் டவுனுக்குப் பயணமானார். மகன் யாக்கூபையும் அவர் தன்னுடன் அழைத்துச் சென்றார். ஆனால், கப்பல் கேப் டவுனை எட்டுமுன்பே மூத்த ஆஃப்னர் இறந்துவிட்டார். இவர்களது நண்பர்களான ஒரு குடும்பத்தினர் இரண்டு ஆண்டுகள் சிறுவனான யாக்கூபை வளர்த்தனர். அதன் பின்னர் யாக்கூப் தானே உழைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணிய அவர்கள் 14 வயதே ஆகியிருந்த யாக்கூபை சக்கார்த்தா செல்லவிருந்த ஒரு கப்பலில் வேலைக்குச் சேர்த்துவிட்டனர். சக்கார்த்தாவில் சில காலம் இவர் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் உயர் அதிகாரி ஒருவரின் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்து வந்தார். மீண்டு கேப் டவுனுக்குத் திரும்பிய ஆஃப்னர் அங்கே அடிமை வியாபாரி ஒருவரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அடிமைகளை நடத்துவது தொடர்பில் ஆஃப்னருக்கு அவரது முதலாளியுடன் அடிக்கடி தகராறு ஏற்படலாயிற்று. இதனால், வேலையை விட்டுவிட்டு 1770ல் மீண்டும் அம்சுட்டர்டாமுக்கே திரும்பினார்.[1]

இறுதிக் காலம்

தொகு

அம்சுட்டர்டாமில் குடும்பச் சூழல் சரியாக அமையாததாலும், பயணத்தில் அவருக்கு இருந்த விருப்பும் ஆஃப்னரை மீண்டும் கிழக்கு நோக்கிச் செல்லத் தூண்டியது. 1773ல் கோரமண்டல் கரையின் ஒல்லாந்தரின் தலைமையிடமான நாகபட்டினத்தில் ஒரு உதவிக் கணக்குப் பதிவாளராகச் சேர்ந்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் 1779ல் செயலர்-கணக்குப் பதிவாளர் என்னும் பதவி உயர்வுடன் சத்ராசுப்பட்டினம் என்னும் இடத்துக்கு அனுப்பப்பட்டார். அப்போது ஏற்பட்ட நான்காம் ஆங்கில-ஒல்லாந்தப் போரில் போர்க் கைதியாக ஆங்கிலேயரிடம் பிடிபட்ட ஆஃப்னர் மதராசில் சிறை வைக்கப்பட்டார்.[2] 1782ன் இறுதியில் விடுவிக்கப்பட்டர் ஆயினும், ஆங்கில ஆட்சியின் கீழ் மதராசில் இருப்பது பாதுகாப்பாக இருக்கவில்லை. அங்கிருந்து டென்மார்க்கின் ஆளுகைக்குள் இருந்த தரங்கம்பாடிக்குத் தப்பி வந்த அவர், அங்கும் நிலைமை நன்றாக இருக்காத காரணத்தால் அங்கிருந்து தோணியொன்றில் கடலைக் கடந்து அப்போது ஒல்லாந்தரின் ஆட்சியில் இருந்த யாழ்ப்பாணத்தை அடைந்தார். அவரைப் போலவே முன்னர் நாகபட்டினத்தில் இருந்து சிறைப்பட்டுப் பின்னர் தப்பிவந்த பலர் ஏற்கெனவே யாழ்ப்பாணத்தில் இருந்தனர். எனவே அவரது வாழ்க்கை அங்கே சில மாதங்கள் மகிழ்ச்சியாகக் கழிந்தது. பின்னர், பயணம் செய்யும் விருப்புக் காரணமாக சில மாதங்கள் இலங்கையில் காட்டுப் பகுதிகளூடாகக் கால்நடையாகப் பயணத்தில் ஈடுபட்டிருந்தார்.[3] 1783ன் இறுதியில் அவர் கல்கத்தாவுக்குச் சென்றார்.[2]

கல்கத்தாவில் இருந்த பிரித்தானிய ஆளுனரிடம் கணக்குப் பதிவாளராகப் பணியில் அமர்ந்தார். 1786ல் ஒரிசாவிலும், கோரமண்டல் கரையிலும் விரிவான பயணம் ஒன்றை மேற்கொண்டார். கடைசியாக இந்தியாவில் இருந்த ஆண்டுகளில் போதிய அளவு பணத்தையும் சேர்க்கக்கூடியதாக இருந்தது. 1787ல் அவர் மீண்டும் ஐரோப்பாவுக்குத் திரும்பினார். அங்கும் சில ஆண்டுகள் விரிவாகச் சுற்றுப்பயணம் செய்த ஆஃப்னர், 1790ல் அம்சுட்டர்டாமுக்கு வந்து அங்கே தங்கினார். அங்கிருந்த காலத்தில் தனது பயண அனுபவங்களை நூல்களாக எழுதினார். இவரது முதல் நூல் 1806ல் வெளியானது.[2]

1809ம் ஆண்டு, இலங்கை பற்றிய தனது நூலை எழுதிக்கொண்டிருந்தபோது, 55 ஆவது வயதில் இதய நோய் காரணமாக ஆஃப்னர் காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "van der Velde, Jacob Haafner - An anti-colonialist with a multicultural perspective". Archived from the original on 2011-07-02. பார்க்கப்பட்ட நாள் 2016-12-22.
  2. 2.0 2.1 2.2 van der Velde,
  3. Haafner, J., Travels on Foot Through the Island of Ceylon (Translated from Dutch), Asian Educational Services, New Delhi, 1995.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாக்கூப்_ஆஃப்னர்&oldid=3569218" இலிருந்து மீள்விக்கப்பட்டது