யாழ்ப்பாணச் சரித்திரம் (ஜோன்)

எஸ். ஜோன் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்தின் பண்டைய வரலாறு கூறும் ஒரு நூல் ஆகும். இதன் முதல் பதிப்பு 1878 ஆம் ஆம் ஆண்டில் வெளிவந்தது. யாழ்ப்பாண நாட்டின் வரலாற்றைத் தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்னும் நோக்கத்துக்காகவே இந்நூல் எழுதப்பட்டது.[1]

யாழ்ப்பாணச் சரித்திரம்
நூல் பெயர்:யாழ்ப்பாணச் சரித்திரம்
ஆசிரியர்(கள்):எஸ். ஜோன்
வகை:வரலாறு
துறை:{{{பொருள்}}}
காலம்:1878
இடம்:யாழ்ப்பாணம்
மொழி:தமிழ்
பதிப்பகர்:ஆசிரியர் 1878, 1882
ஆசிரியர் மகன் 1930
பதிப்பு:இரண்டாம் பதிப்பு (1882)
மூன்றாம் பதிப்பு 1930

பின்னணிதொகு

இந்த நூல் 19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. அக்காலத்தில், யாழ்ப்பாணத்தின் வரலாறு பற்றி அதிக தகவல்கள் கிடையா. ஆய்வு நோக்கில் யாழ்ப்பாண வரலாற்றை நோக்கிய நூல்கள் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே எழுதப்பட்டன. ஒல்லாந்தர் காலத்தில் மயில்வாகனப் புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலே அக்காலத்தில் முக்கியமான வரலாற்று நூலாக இருந்தது. எனவே மாணவர்களுக்கான நூல் ஒன்றை எழுதப் புகுந்த ஜோன், வைபவமாலையைத் தழுவியே இந்த நூலை ஆக்கியுள்ளார். தெல்லிப்பழையைச் சேர்ந்த சுவாமிநாதம்பிள்ளை குமாரர், மண்டலநாயகம்பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்க, "வைபவமாலை முதலாம் நூல்களை ஆதாரமாகக் கொண்டு அவற்றிற் தள்ளவேண்டிய தள்ளியும், கொள்ள வேண்டிய கொண்டும், சேர்க்கவேண்டிய சேர்த்தும்" ஒரு புதுநூலை இயற்றியதாக நூலாசிரியர் தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.[2]

உள்ளடக்கம்தொகு

யாழ்ப்பாணம் தோன்றிய வரலாற்றில் தொடங்கி, தமிழ் அரசு போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டது வரையிலான வரலாற்றையே இந்நூல் கூறுகிறது. வைபவமாலையைப் போலவே தொன்மங்களையும், ஐதீகங்களையும், புனைவுகளையுமே பண்டைய வரலாறாக இந்த நூல் தருகிறது. அத்துடன், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலியனையும், 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் பகர ஆளுனனாக யாழ்ப்பாணத்தை நிர்வாகம் செய்த சங்கிலி குமாரனையும் ஒருவராகக் கருதி மயில்வாகனப் புலவர் விட்ட அதே பிழையே ஜோனின் யாழ்ப்பாணச் சரித்திரத்திலும் காணப்படுகிறது.

பதிப்புகள்தொகு

இந்த நூலின் முதற் பதிப்பு 1878 ஆம் ஆண்டில் வெளிவந்த பின்னர் இதன் 2 ஆம் பதிப்பு 1882 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இந்தப் பதிப்புடன் இந்நூலின் சுருக்கம் ஆங்கிலத்திலும் எழுதிப் பின்னிணைப்பாகத் தரப்பட்டிருந்தது. பின்னர் 1930 ஆம் ஆண்டில் இதன் மூன்றாம் பதிப்பு வெளியானது. இப்பதிப்பை, இந்நூலாசிரியரின் புதல்வரான டானியல் ஜோன் வெளியிட்டிருந்தார். இந்தப் பதிப்பு வெளிவந்தபோது இராசநாயகம் ஆங்கிலத்தில் எழுதிய பண்டைய யாழ்ப்பாணம் (Ancient Jaffna) என்னும் நூல் ஏற்கெனவே வெளிவந்திருந்தது. இவரது நூல் ஜோனின் கருத்துக்களோடு முரண்படும் இடங்களில் இராசநாயகத்தின் கருத்துக்களுக்கு மறுப்பு ஒன்றும் எழுதி இந்த மூன்றாம் பதிப்பில் சேர்த்திருந்ததாகத் தெரிகிறது.[3]

குறிப்புகள்தொகு

  1. குணராசா, க., 2003, முன்னுரை, பக். iii
  2. குணராசா, க., 2003, முன்னுரை, பக். iv
  3. இராசநாயகம், செ., 1999, முன்னுரை. பக். iv

உசாத்துணைகள்தொகு

  • குணராசா, க., எஸ். ஜோனின் யாழ்ப்பாணச் சரித்திரம் 1878 ஒரு மீள்வாசிப்பு, கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம், 2003.
  • இராசநாயகம், செ., யாழ்ப்பாணச் சரித்திரம், ஏசியன் எடுகேஷனல் சர்வீசஸ், புதுடில்லி, 1999.