யாழ்ப்பாண முஸ்லிம்கள் வரலாறும் பண்பாடும் (நூல்)
யாழ்ப்பாண முஸ்லிம்கள் வரலாறும் பண்பாடும் என்பது யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்றையும் அவர்களது தனித்துவமான பண்பாடுகளையும் எடுத்துக் கூறுகின்ற ஒரு நூல் ஆகும். யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் ஆசிரியராக இருந்த எம். எஸ். அப்துல் ரகீம் இந்த நூலை எழுதியுள்ளார். யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறு, பண்பாடு என்பவை பற்றி முறையான ஆய்வுகள் வெளிவராத நிலையில் இந்நூல் இவ்விடயம் குறித்த முன்னோடி முயற்சிகளுள் ஒன்று.
யாழ்ப்பாண முஸ்லிம்கள் வரலாறும் பண்பாடும் | |
---|---|
நூல் பெயர்: | யாழ்ப்பாண முஸ்லிம்கள் வரலாறும் பண்பாடும் |
ஆசிரியர்(கள்): | எம். எஸ். அப்துல் ரகீம் |
வகை: | வரலாறும் பண்பாடும் |
துறை: | யாழ்ப்பாண முசுலிம்கள் |
காலம்: | முற்காலம் முதல் 1970கள் வரை |
இடம்: | யாழ்ப்பாணம் |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 180 |
பதிப்பகர்: | இஸ்லாமிய இலக்கியக் கழகம் |
பதிப்பு: | 1979 |
நோக்கம்
தொகு"தன் பெற்றோரை எப்படி ஒருவன் நன்கறிந்திருக்க விரும்புவானோ அதே போன்று தன் சமூகத்தின் சரித்திரத்தை உணர்ந்திருத்தல் அத்தியாவசியம். பாரம்பரியம் அறிந்த சமுதாயம்தான் கண்ணியத்தைக் காப்பாற்றி அதற்காகத் தொடர்ந்தும் உழைத்துவரும்." என்று இந்நூலுக்கு முன்னுரை எழுதிய இலங்கையின் அப்பீல் நீதிமன்ற நீதியரசராக இருந்த எம். எம். அப்துல்காதிறு குறிப்பிட்டுள்ளார்.[1] இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே இந்த நூலாசிரியரின் நோக்கமும் இருந்துள்ளது என்பது, "நமக்கு ஒரு வரலாறு வேண்டும் என்ற அவாவினால் எடுத்த முயற்சியின் பெறுபேறே இது"[2] என அவர் குறிப்பிடுவதில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.
உள்ளடக்கம்
தொகுநூலின் தலைப்புக்கு ஏற்ப இது வரலாறு, பண்பாடு என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வரலாறு கூறும் முதற்பகுதி ஐந்து காலப் பகுதிகளில் யாழ்ப்பாணத்து முஸ்லிம்களின் வரலாற்றை எடுத்துரைக்கிறது. இப்பகுதியில் அடங்கிய துணைப் பிரிவுகள் வருமாறு:
- முஸ்லிம்களின் குடியேற்றமும் பரம்பலும்
- போர்த்துக்கேயர் காலம்
- ஒல்லாந்தர் காலம்
- ஆங்கிலேயர் காலம்
- சுதந்திரத்தின் பின்
யாழ்ப்பாணத்து முஸ்லிம்களின் பண்பாடு பற்றி விளக்கும் பகுதி பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது:
- மொழி
- இலக்கியப் பங்களிப்புக்கள்
- அரபு இலக்கியப் பங்களிப்பு
- சமகால இலக்கியப் பங்களிப்பு
- கல்வி
- சமய விழிப்புணர்ச்சி
- பள்ளிவாசல்கள்
- உடைகள்
- உணவு
- சமய சமூக விழாக்கள்
- முஸ்லிம்களுக்கே உரித்தான கலை நிகழ்ச்சி
- திருமண சம்பிரதாயங்கள்
- தொழில்கள்
- சமூக சேவை இயக்கங்கள்
- உள்ளூராட்சி அரசியலில் முஸ்லிம்கள்
நூல் கூறும் சில கருத்துக்கள்
தொகுஇலங்கையில் முஸ்லிம்களின் வரலாற்று பற்றி ஆராந்த பலர் இலங்கையில் முஸ்லிம் குடியேற்றங்கள் முதன் முதலாக இலங்கையின் மேற்குப் பகுதியிலேயே உருவாகின என்பர். இதற்கு மாறாக, முஸ்லிம்கள் முதலில் யாழ்ப்பாணப் பகுதியிலேயே குடியேறியிருக்க வேண்டும் என்னும் கருத்தை நூலாசிரியர் முன்வைத்துள்ளார்.