ரங்காவர்சிதா அருங்காட்சியகம், செமராங்

இந்தோனேசிய அருங்காட்சியகம்

ரங்காவர்சிதா அருங்காட்சியகம் (Ranggawarsita Museum) இந்தோனேசியாவின் செமரங்கில் அமைந்துள்ள ஒரு மாநில அருங்காட்சியகம் ( அருங்காட்சியகம் நெகேரி ) ஆகும். மாநில அருங்காட்சியகம் என்ற நிலையில் ரங்காவர்சிதா அருங்காட்சியகம், அதிகாரப்பூர்வமாக மத்திய ஜாவா மாகாணத்தின் மாநில அருங்காட்சியகமாம் (அருங்காட்சியகம் நெகேரி புரோபின்சி ஜாவா தெங்கா) என்று அழைக்கப்படுகிறது. மத்திய ஜாவா மாகாணத்தின் கலாச்சாரத்துடன் தொடர்புடைய பொருட்களின் இனவியல் சேகரிப்புகள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வரலாறு தொகு

மத்திய ஜாவா மாகாணத்திற்கு ஒரு மாநில அருங்காட்சியகம் கட்டப்படுவதற்காக அஹ்மத் யானி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ஒரு நிலம் தேர்வு செய்யப்பட்டது. அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பணிகள் 1977 ஆம் ஆண்டில் தொடங்கியது. 1983 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி மத்திய ஜாவாவின் அப்போதைய ஆளுநராக இருந்த சோபார்ட்ஜோ ரோஸ்டாம் இதனைத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்த அருங்காட்சியகம் செயல்படத் தொடங்கியது. பின்னர், இந்த அருங்காட்சியகம் ஜூலை 5, 1989 ஆம் நாள் அன்று கல்வி அமைச்சர் ஃபுவாட் ஹாசனால் மீண்டும் மறுபடியும் திறந்து வைக்கப்பட்டது. ,இதனை கலாச்சார இயக்குநரகம் நிர்வகித்து வந்தது. பிராந்திய சுயாட்சி திட்டம் இயற்றப்பட்ட பின்னர், அருங்காட்சியகத்தின் மேலாண்மையானது அக்டோபர் 14, 1996 ஆம் நாளன்று மத்திய ஜாவாவின் கல்வி மற்றும் கலாச்சார துறைக்கு மாற்றப்பட்டது. 2011 ஆம் ஆண்டு இந்த, அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டது.[1]

ரங்காவர்சிதா என்று இந்த அருங்காட்சியகத்திற்கு பெயர் சூட்டப்பட்டதற்கு ஒரு பின்னணி உள்ளது. ரேடன் ந்காபேகி ரங்காவர்சிதா என்று ஒரு ஜாவாக் கவிஞர் இருந்தார். அவர் மத்திய ஜாவாவில் உள்ள சுராகர்த்தா என்னுமிடத்தில் இருந்த ஒரு பிரபல இலக்கிய குடும்பத்தில் பிறந்தார். அவர் பெயராலேயே இந்த அருங்காட்சியகம் அழைக்கப்பட்டது.

சேகரிப்புகள் தொகு

மேற்கு ஜாவாவின் கலாச்சாரத்துடன் தொடர்புடைய கிட்டத்தட்ட 60,000 பொருட்களின் தொகுப்பை இந்த அருங்காட்சியகம் தன் சேகரிப்பில் கொண்டுள்ளது. இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சேகரிப்புகள் நான்கு வீடுகளில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடும் அதன் வரலாற்றின் அடிப்படையில் வெவ்வேறு கருப்பொருளுடன் ஒத்த நிலையில் அமைந்துள்ளது.

கட்டிடம் A என்ற பெயர் கொண்ட கட்டடத்தில் நிலவியல், புவியியல் மற்றும் புதைபடிமவியல் தொடர்பான கலைப்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு கனிமங்கள் மற்றும் இயற்கை கற்களின் மாதிரிகள் காட்சியில் உள்ளன. மிகவும் குறிப்பிடத்தக்க சேகரிப்பாக 1984 ஆம் ஆண்டில் கரங்கன்யார் என்னுமித்தில் உள்ள மோஜோஜெடாங் என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விண்கல் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சில நேரங்களில் இந்த விண்கற்களை உலோகத்த்துடன் கலந்து கிரிஸ் என்ற வகையான கத்தியைத் தயாரிக்கின்றனர். இந்த அருங்காட்சியத்தின் இப்பிரிவில் உள்ள புதைபடிமவியல் பிரிவு முதல் தளத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்டவை புதைபடிவ காடுகள், வரலாற்று காலத்துக்கு முந்தைய விலங்குகளின் எலும்புகள் மற்றும் பதம் செய்யப்பட்ட விலங்குகள் இங்கு காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. [2]

கட்டிடம் B என்ற பெயர் கொண்ட கட்டடத்தில் மத்திய ஜாவாவினைச் சேர்ந்த இந்து -பௌத்த காலத்தைச் சேர்த்த நினைவுச்சின்னங்கள் காட்சியில் உள்ளன. இந்த காலகட்டத்தைச் சேர்ந்த தொகுப்புகளில் லிங்கம்-யோனி, லிங்கா மற்றும் யோனி சிலைகள், குடுவைகள், வெண்கலக் கண்ணாடிகள் மற்றும் மத்திய ஜாவாவின் சண்டி எனப்படுகின்ற இந்து மற்றும் பௌத்த கோயில்களில் இருந்து எடுக்கப்பட்ட இந்து கடவுள்களின் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கட்டடத்தில் இந்தோனேசியாவின் முஸ்லீம் மாநிலங்களின் பொருள்களும் உள்ளன. உதாரணமாக அங்கு டெமக் மற்றும் மெனாரா குடஸ் மசூதியின் சிறிய வடிவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் பழைய மசூதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் பொம்மைகள் அல்லது ஆபரணங்கள் போன்றவை உள்ளன. உதாரணமாக மாண்டிங்கன் மசூதியிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு மஸ்தகா கூரை இறுதிப்பகுதி மற்றும் கையால் எழுதப்பட்ட குர்ஆன் நகல் ஆகியவை உள்ளன. மேலும் உள்ளுர், சீன நாட்டு, ஐரோப்பிய நாட்டு பீங்கான் பொருள்களும், பாடிக் துணி வவைகளும் இக்கட்டடத்தில் உள்ளன. இவை அனைத்துமே மத்திய ஜாவாவில் காணப்படுபவையாக உள்ளன. மேலும் காலனித்துவ காலத்தைச் சேர்ந்த பொருட்கள் குறிப்பாக டிபோனெகோரோவுடன் தொடர்புடையவை இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. [3]

கட்டிடம் C என்ற பெயர் கொண்ட கட்டடம் தரைத்தளமாக உள்ளது. அங்கு இந்தோனேசியாவின் சுதந்திர காலப் போராட்டத்தின் வரலாறு தொடர்பான கலைப்பொருள்கள் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ,இந்த கட்டிடத்தில் மத்திய ஜாவாவில் முன்னர் நடந்த பல மோதல்கள் தொடர்பான நிகழ்வுகளின் டியோராமாக்கள் உள்ளன. அவை பெரும்பாலும்செமரங்கில் நடைபெற்ற ஐந்து நாட்கள் போர், பலகன் அம்பராவா, செபுவில் பி.கே.ஐ கிளர்ச்சி, மார்ச் 1, 1949 பொது தாக்குதல் மற்றும் 1966 இல் நடைபெற்ற ட்ரிதுராவின் ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை தொடர்பானவையாகும். [4]

கட்டிடம் D என்ற பெயர் கொண்ட கட்டடம் இன அமைப்பியல் கைவினை கொண்டு தொடர்பான, மத்திய ஜாவாவில் கண்டறியப்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய ஜாவா பாரம்பரியத்துடன் தொடர்பானவை அமையும். அவை வாயங், குடா லம்பிங் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவையாகும். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த இசைக்கருவிகளும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. [5]

குறிப்புகள் தொகு

  1. "Museum Jawa Tengah Ranggawarsita". Asosiasi Museum Indonesia. Asosiasi Museum Indonesia. 2017. பார்க்கப்பட்ட நாள் November 8, 2017.
  2. Hamid Abdullah 1987, ப. 31.
  3. Hamid Abdullah 1987.
  4. Hamid Abdullah 1987, ப. 32.
  5. Hamid Abdullah 1987, ப. 33.