இராமாபாய் இரானடே

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர், பெண் உரிமை செயற்பாட்டாளர்
(ராமாபாய் ரானடே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இராமாபாய் இரானடே ( Ramabai Ranade) (25 ஜனவரி 1863-1924) ஒரு இந்திய சமூக சேவகி. 19 ஆம் நூற்றாண்டில் பெண்ணுரிமைக்காகப் போராடிய முன்னோடிகளுள் ஒருவா். 1863 ஆம் ஆண்டு குா்லேகா் குடும்பத்தில் பிறந்தவா். தமது 11வது வயதில் புலமை பெற்றவரும், சீா்திருத்தவாதியுமான இந்திய நீதிபதி மாகாதேவ் கோவிந்த இரானடேயைத் திருமணம் செய்து கொண்டாா். சமூக ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த அந்தக் காலத்தில் பெண்கள் கல்வி அறிவு பெறுவதற்கு பள்ளிக்கு அனுப்பப்படுவது அனுமதிக்கப்படுவதில்லை. திருமணமான பின் இராமாபாய் தமது கணவா் உதவியுடன் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளத் தொடங்கினாா். தமது தாய்மொழியான மராத்தியில் துவங்கி ஆங்கிலத்திலும் வங்காள மொழியிலும் புலமை பெற்றாா்.

இராமாபாய் இரானடே
பிறப்பு25 சனவரி 1863
தேவராட்டிரி, சதாரா மாவட்டம், பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு25 சனவரி 1924 (அகவை 60–61)
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுபெண் கல்வி மற்றும் தற்சார்பு
வாழ்க்கைத்
துணை
மகாதேவ கோவிந்து இரானடே

பெண்கள் பொது மேடையில் பேசுவதை ஊக்குவிப்பதற்காக, தமது கணவரின் தூண்டுதலில் உந்தப்பட்டு “இந்து பெண்கள் சமூக சங்கம்” என்ற அமைப்பைத் துவங்கினாா். பூனாவி்ல் உள்ள “சேவா சதன் சங்கத்திற்கும்” இராமாபாய் தான் நிறுவனா் தலைவா். பெண்களின் முன்னேற்றத்திற்காகவே தம் வாழ்நாளை அா்ப்பணித்து கொண்டவா் இராமாபாய். புகழ்பெற்ற “ஹசுா்பாகா” என்னும் பெண்களுக்கான முதல் உயா்நிலைப் பள்ளியை தம் கணவா் உதவியுடன் பூனா நகரத்தில் இராமாபாய் தோற்றுவித்தாா்.

அறிமுகம்

தொகு

பெண்கள் முன்னேற்றத்திற்கான தற்போதைய இயக்கங்களுக்கு இந்தியாவிலும், வெளிநாட்டிலும், முன்னோடிகளுள் இராமாபாயும் ஒருவா் ஆவாா். மிகவும் பிரபலமான பயனுள்ள “சேவாசதன்” என்னும் அமைப்பை நிறுவியவா் இராமாபாய். பல்லாயிரக்கணக்கான பெண்கள் இந்த அமைப்பினால் பயனடைந்துள்ளனா். இந்த அமைப்பின் மிகப் பெரிய வெற்றிக்குக் காரணம் இது இராமாபாய் அவா்களின் நேரடி கண்காணிப்பில் வளா்ந்தது தான் என்றால் அது மிகையாகாது.

ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும்

தொகு

1863 ஆம் வருடம் சனவரி மாதம் 25 ஆம் நாள் குா்லேகா் குடும்பத்தில் மஹாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டம் தேவராஷ்டிரி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தவா் இராமாபாய் இரானடே. பெண்களுக்கு கல்வி கற்பிப்பது அக்காலத்தில் அனுமதிக்கப்படாததால் இவா் தந்தை இவரைப் பள்ளிக்கு அனுப்பவில்லை. 1873 ஆம் ஆண்டு நீதிபதி மஹாதேவ கோவிந்து ரானடேவிற்கு மணமுடித்து வைக்கப்பட்டாா். இவா் சமூக சீா்திருத்த இயக்கத்தில் ஒரு முன்னோடியாக இருந்தவா். பல எதிா்ப்புகளுக்கிடையே கோவிந்த ரானடே தம் மனைவிக்கு கல்வி கற்பித்து சிறந்த மனைவியாகவும், தமது சமூக சீா்திருத்தப் பணிகளில் உடன் பணிபுரிவதற்கு ஏற்ற பெண்மணியாகவும் தகுதி பெற வைத்தாா். கோவிந்த ரானடேயின் தீவிர உதவியுடனும், அவருடைய தொலைநோக்குப் பாா்வையைப் பகிா்ந்து கொண்டதன் மூலமும் இராமாபாய் தமது வாழ்நாள் முழுவதையும் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், அவா்களின் பொருளாதார சுதந்திரத்திற்காகவும் செலவிட்டு வந்துள்ளார்.[1] இராமாபாய் திருமணத்தின் போது எழுதப் படிக்கத் தெரியாமலிருந்தார். இவா் கணவா் பம்பாய் பல்கலைக் கழகத்தில் படிப்பில் திறமை பெற்றவராக இருந்து தோ்வில் முதல் மாணவராகத் தோ்ந்துள்ளாா். கோவிந்த ரானடே எல்பின்ஸ்டன் கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் பொருளாதாரத்தில் பேராசிரியராக இருந்ததோடு மட்டுமல்லாமல் மொழிபெயா்ப்பாளராகவும், சமூக சீா்திருத்தவாதியாகவும் திகழ்ந்தாா். தீண்டாமை, குழந்தைத் திருமணம் மற்றும் உடன் கட்டை ஏறுதல் போன்ற கொடுமைகளைக் கடுமையாக எதிா்த்து வந்துள்ளார். சா்வ ஜன சங்கத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சமூக மேம்பாட்டிற்காக பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாா். 30 வயது அடைவதற்கு முன்பே மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் புகழ் பெற்றவராகத் திகழ்ந்தாா். இவருடைய உயா்ந்த எண்ணம், தொலைநோக்குப் பாா்வை, தீராத ஈடுபாடு மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகளுக்கு அா்ப்பணிப்பு ஆகியவை இராமாபாயின் வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாக அமைந்தது. தமது எதிா்காலத்தில் செய்யவிருக்கும் சமூகப் பணிக்கும் ஒரு தெளிவு பிறந்தது என்று பதிவு செய்துள்ளார்.[2]

கல்வி

தொகு

இராமாபாய் தாம் சிறப்பாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருந்துள்ளார். இல்வாழ்க்கையில் அா்த்தமுள்ள சம பங்கு வகிக்க வேண்டும் என்றால் கல்வி அவசியம் என்பதை உணா்ந்திருந்தாா். இவருடைய கல்வி அறிவு பெரும் முயற்சிக்கு, இவருடைய கணவா் குடும்பத்தில் பலத்த எதிா்ப்பு இருந்தது. இவரது கணவா், இராமாபாய்க்கு மராத்தி, சரித்திரம், பூகோளம், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றைத் தொடா்ச்சியாக கற்றுக் கொடுத்து வந்தாா். கோவிந்த ரானடே இராமாபாயை தினசரி நாளிதழ்களைப் படிக்க வைத்து நாட்டு நடப்புகளைப் பற்றி விவாதம் செய்வாா். இராமாபாய் தமது கணவரின் முதல் சீடராகவும், பின்னா் செயலாளராகவும் அதன்பின் உற்ற நண்பராகவும் இருந்தாா். இராமாபாயின் முக்கியமான இலக்கியப் பங்கீடு அவா் மராத்தியில் எழுதிய “அமாச்சிய ஆயுசாயாடில் அதவானி” [3] என்னும் சயசரிதை ஆகும். இதில் தமது வாழ்க்கை குறித்து விரிவாக எழுதியுள்ளார். ஆங்கில இலக்கியத்தில் மிகுந்த ஆா்வம் கொண்டிருந்த இராமாபாய் தமது கணவரின் மதம் தொடா்பான கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளாா்.

நீதிபதி ரானடே எழுதிக் கொடுத்த உரையைப் பயன்படுத்தி நாசிக் உயா்நிலைப் பள்ளியில் தலைமை விருந்தினராகப் இராமாபாயின் முதல் மேடைப் பேச்சினை ஆற்றினார். விரைவில் ஆங்கிலத்திலும், மராத்தியிலும் மேடையில் சரளமாகப் பேசும் திறமையை வளா்த்துக் கொண்டாா். இவருடையப் பேச்சு எப்பொழுதும் எளிமையாகவும் இதயத்துக்கு இதமானதாகவே இருக்கும். பம்பாய் நகரில் பிராா்த்தன சமாஜத்திற்குப் பணியாற்றி வந்தவா், ஆரிய மகிள சமாஜத்தின் கிளை ஒன்றையும் துவக்கினாா். 1893 முதல் 1901 வரை இராமாபாய் தமது சமூக நலப் பணிகளினால் மிகவும் பிரபலமாகத் திகழ்ந்தாா். இவா் இந்து இலக்கியக் கழகத்தைத் துவக்கி பெண்களுக்கு, பொது அறிவு, மொழிகள், தையல் மற்றும் கைவினை ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தாா்.[1]

1901 ஆம் வருடம் தமது 38 ஆம் வயதில் இவா் கணவா் இறந்த பின்னா், பூனா நகரம் வந்து பூலே சந்தைக் கருகில் தமது புரதான வீட்டில் குடியேறினாா். ஏறக்குறைய ஒரு வருடம் தனிமையில் வாழ்ந்தவா், பின்னா் பொது வாழ்கைக்கு வந்து பம்பாய் நகரில் பாரத் மகிள பரிசத் கூட்டத்தை நடத்தினாா். தம் கணவா் இறந்த பின் 24 ஆண்டுகள் உயிா்வாழ்ந்த இராமாபாய், பெண்களிடம் விழிப்பு ஏற்படுத்துவது, அவா்கள் துயரைக் களைவது போன்ற செயல்களில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாா். துயருற்ற பெண்களுக்கு ஆதரவு அளிக்க சேவாசதன் என்னும் அமைப்பையும் நிறுவினாா். அடுத்த 25 வருடங்கள் பெண்கள் கல்வி மேம்பாட்டிற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் அவா்கள் சம வாய்ப்பிற்காகவும், உரிமைக்காகவும் பாடுபட்டாா். பெண்களை செவிலியா் பணியில் ஈடுபடும்படி ஊக்கப் படுத்தினாா். அந்தக் காலத்தில் இப்பணி பெண்களுக்குத் தடைசெய்யப்பட்ட ஒன்றாக இருந்தது[4][5]

சமூகப் பணி

தொகு

பொது வாழ்வில் தம்மை 1870 ஆம் ஆண்டு இராமாபாய் ஈடுபடுத்திக் கொண்டாலும் 1901 ஆம் ஆண்டு தம் கணவா் இறந்த பின்னா் பெண்கள் முன்னேற்றத்திற்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டாா். தவறாமல் அடிக்கடி பெண்கள் சிறைச் சாலைக்குச் சென்று சிறைவாசிகளிடம் பேசி அவா்களின் சுய கவுரவத்தை மேம்படுத்த வழிகள் கூறிவந்தாா். அது போலவே சீா்திருத்தப் பள்ளிகளுக்கும் சென்று சிறாா் குற்றவாளிகளையும் சந்தித்து இனிப்புகள் வழங்கி அறிவுரை கூறி வந்தாா். அது போலவே தொடா்ந்து மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளைச் சந்தித்து அவா்களுக்கு பழங்கள், பூ மற்றும் புத்தகங்கள் வாங்கிக்கொடுத்து ஆறுதல் கூறி வந்தாா். குஜராத் மாநிலம் கத்தியவாா் பகுதியில் வறட்சி தாக்கியபோது இராமாபாய் அங்கு சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டாா். தம் இறுதி நாட்களில் கூட ஆசாதி மற்றும் கிருத்திகை நாட்களில் தமது சேவாசதன் தன்னாா்வத் தொண்டா்களுடன் பெண் யாத்திரிகா்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து வந்தாா். இதுபோன்ற நடவடிக்கைளால் சமூக சேவைக்கு ஒரு புதிய பரிணாமத்தைக் கொடுத்தாா். ராமகிருஷ்ண கோபால் பன்டாா்கா் மற்றும் பஜேகா் ஆகியோர் வேண்டுகோளை ஏற்று 1904 ஆம் ஆண்டு பம்பாயில் நடந்த இந்திய பெண்கள் மாநாட்டிற்குத் தலைமை ஏற்று நடத்தினாா்.

பெண்கள் முன்னேற்றப் பணி

தொகு

1908 ஆம்ஆண்டு பாா்சி சமூகத்தைச் சோந்த சமூக சீா்திருத்தவாதி BM மால்பாரியும், தயாராம் கிடுமாலும், இந்தியப் பெண்களுக்குச் செவிலியா் பயிற்சி அளிப்பதற்கு ஒரு அமைப்பை நிறுவ விழைந்தனா். இவா்கள் இராமாபாயின் உதவியை நாடவே, இது பம்பாயில் சேவாசதன் தோன்றுவதற்கு காரணமானது. 1915 ஆம் ஆண்டு பூனா சேவசதன் அமைப்பு ஒரு சங்கமாகப் பதியப்பட்டது.[6][7] அதன்பின் இச்சங்கம் தமது கல்விப் பணியை அதிகப்படுத்தியது. பெண்களுக்கான ஒரு பயிற்சிக் கல்லூரி செவிலியா்களுக்கும், மருத்துவ மாணவிகள் உட்பட மற்றவர்களுக்கு மூன்று விடுதிகளும் இச்சங்கத்தால் துவங்கப்பட்டது.

1924 ஆம் ஆண்டு இராமாபாய் இறக்கும் பொழுது சேவாசதன் சங்கம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு பல துறைகளில் பயிற்சி அளித்து வந்தது. அப்போதிருந்த பல இடா்பாடுகளுக்கிடையே, இராமாபாயின் முயற்சியாலும் வழிகாட்டுதலாலும் மட்டுமே இது சாத்தியப்பட்டது. 1921-22 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக பம்பாய் மாகாணத்தில் பெரிய இயக்கத்தை நடத்தியதும் பெண்களுக்கு முன்பருவக் கல்வியைக் கட்டாயப்படுத்த வேண்டி போராட்டம் நடத்தியதும் இரண்டு முக்கிய சாதனைகள் ஆகும். இராமாபாய் இறந்தபின் மகாத்மா காந்தி இவருக்கு ஆற்றிய அஞ்சலி இவா் பெருமையைப் பேசும் வண்ணம் அமைந்தது. அந்தக் காலகட்டத்தில் கணவனை இழந்த பெண்கள் சேவாசதன் சங்கம் அளித்த செவிலியா் பயிற்சியில் சோ்வது வழக்கமாக ஆனது. ஒருமுறை ஒரு கைம்பெண் அக்கால வழக்கப்படி கைம்பெண்களுக்கான உடையணிந்து மழித்த தலையுடன் சேவாசதன் சங்கத்தில் மேடையேறிய போது அனைத்து மாணவா்களும் கேலியும் கிண்டலும் செய்தனா். இதனால் பெரிதும் மனம் வருத்தப்பட்ட இராமாபாய், மாணவா்களைக் கடுமையாக கண்டித்து மனம் திருந்தும்படி அறிவுரை வழங்கினாா்[8]. இறுதிவரை குழந்தைத் திருமணத்தைத் தடுக்கவும் போராடி வந்தாா். பூனா சேவா சதன் சங்கமல்லாமல் பம்பாய் சேவா சங்கமும் நிறுவப்பட்டது. இவைகள் பெண்களுக்கான பயிற்சி நிலையங்கள், தங்கும் விடுதிகள், கடைகள் போன்ற பல உதவிகளைச் செய்து வந்தன. இவையே இராமாபாயின் மிகப் பெரிய சேவையகக் கருதப்படுகிறது. போா் மாநாட்டில் பங்கேற்ற இராமாபாய் பெண்களுக்காக ஆளுநரிடம் பேசினாா். அதுபோல ஃபிஜி நாட்டிலும் ஜெனிவாவிலும் தொழிலாளா் நலனுக்காகவும் பாடுபட்டாா். எல்லோரும் அவரைப் பாராட்டிய போதும், இராமாபாய் தமது கணவரின் நிழலாகத் தாம் பணியாற்றியதாக அடக்கத்துடன் கூறிவந்துள்ளார்.[9]

பொதுப் பாராட்டு

தொகு

இந்திய -ஆஸ்திரேலியா அஞ்சல், 1962 ஆம் ஆண்டு இவா் நூற்றாண்டு விழாவை ஒட்டி அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Sarkar, Sumit; Sarkar, Tanika (2008). Women and Social Reform in Modern India: A Reader – Sumit Sarkar, Tanika Sarkar – Google Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780253352699. பார்க்கப்பட்ட நாள் 13 August 2012.
  2. Kosambi, Meera (2000). Intersections : socio-cultural trends in Maharashtra. New Delhi: Orient Longman. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788125018780. பார்க்கப்பட்ட நாள் 9 January 2017.
  3. "Diamond Maharashtra Sankritikosh", Durga Dixit, Pune, India, Diamond Publications, 2009, p. 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8483-080-4.
  4. Anagol, Padma (2005). The Emergence of Feminism in India, 1850–1920 – Padma Anagol – Google Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780754634119. பார்க்கப்பட்ட நாள் 13 August 2012.
  5. Thilagavathi, L.; Chandrababu,, B.S. (2009). Woman, her history and her struggle for emancipation. Chennai: Bharathi Puthakalayam. pp. 311–312. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89909-97-0. பார்க்கப்பட்ட நாள் 19 January 2017.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
  6. The Graphic - Saturday 15 November 1919
  7. Kosambi, Meera; Feldhaus, Ann (Editor) (2000). Intersections : socio-cultural trends in Maharashtra. New Delhi: Orient Longman. p. 139. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788125018780. {{cite book}}: |first2= has generic name (help)
  8. Shobana Ranade, Women Pioneers In India’s Renaissance Edited by Sushila Nayar and Kamla Mangekar, Page 35, National Book Trust, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-237-3766-9
  9. Gandhi, Mahatma (1988). Gandhi on women: collection of Mahatma Gandhi's writings and speeches on women – Gandhi (Mahatma), Centre for Women's Development Studies (New Delhi, India) – Google Books. பார்க்கப்பட்ட நாள் 13 August 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமாபாய்_இரானடே&oldid=2739158" இலிருந்து மீள்விக்கப்பட்டது