ரூத்து (நூல்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ரூத்து (Ruth) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறும் நூல்களில் ஒன்றாகும்.

நூலின் பெயர் தொகு
இந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரேயத்தில் "Meghilath Ruth" அதாவது "ரூத்து பற்றிய சுருளேடு" என்பது முதல் சொல்லாக உள்ளது. எனவே அப்பெயரும் இந்நூலுக்கு உண்டு. இந்நூலின் நடை ஒரு புனைவுரை போல் அமைந்துள்ளது. விவிலியத்தில் பெண்கள் பெயரால் வழங்கப்படும் மூன்று நூல்களுள் இது முதலாவதாகும். மற்றவை "எஸ்தர்", "யூதித்து" ஆகிய இரு நூல்கள் ஆகும்.
நூலின் கதைச் சுருக்கம் தொகு
இரண்டு பெண்கள்; இருவரும் கைம்பெண்கள். ஒருவர் வயதான நகோமி; மற்றவர் இளம் பருவத்தினரான ரூத்து. இருள், சாவு, அழிவு அனைத்தும் சேர்ந்து இவர்களது வாழ்க்கையில் புகுந்து கடவுளின் திட்டத்தையே சீர்குலைக்க முயல்கின்றன. ஆனால் இறைவன் இத்தீமைகளையெல்லாம் முறியடித்துத் தம் திட்டத்தை நிறைவேற்றுவதை "ரூத்து" என்னும் இத்திருநூல் அழகுற எடுத்துக் காட்டுகிறது.
மனித வரலாற்றில், துயரக் கட்டங்களையெல்லாம் கடவுள் வெற்றி மகுடமாக மாற்றித் தருகின்றார் என்பதே விவிலிய நூலின் அடிப்படைக் கருத்து. அத்தகைய மாபெரும் செயல்களில் பெண்களுக்கும் அரியதொரு பங்கை அளிக்கிறார் என்பது இந்நூலால் விளங்குகிறது.
இவ்வரலாறு நிகழுமிடம் பெத்லகேம் என்னும் தாவீதின் நகர். காலம் வாற்கோதுமை அறுவடைக் காலம். நகோமியின் அருமை மருமகளான ரூத்தின் வழியாக இறையருள் செயலாற்றுகிறது; இவ்விரு கைம்பெண்களின் வாழ்க்கை மீண்டும் மலர்கிறது. இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் அட்டவணையில் ரூத்தின் பெயரும் இடம் பெறுகிறது. இவற்றை இந்நூலில் காணலாம்.
ரூத்து நூலின் உட்கிடக்கை தொகு
பொருளடக்கம் | அதிகாரம் - வசனம் பிரிவு | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. ரூத்துடன் நகோமி பெத்லகேமுக்குத் திரும்பல் | 1:1-22 | 404 - 405 |
2. ரூத்து போவாசைச் சந்தித்தல் | 2:1 - 3:18 | 405 - 408 |
3. போவாசு ரூத்தை மணமுடித்தல் | 4:1-22 | 408 - 410 |
கதையின் கட்டமைப்பு தொகு
ரூத்து நூலை அழகியதொரு கதையாகக் கொண்டு பார்த்தால் அதில் கீழ்வரும் கட்டமைப்பு துலங்குவதைக் காணலாம்:
பருவம் 1: முன்னுரையும் கதை முடிச்சும்: சாவு - வெறுமை (1:1-22)
காட்சி 1: பின்னணியும் கதைச் சிக்கலும் (1:1-6)
காட்சி 2: வெறுமை மேலிடல் (1:7-19அ)
காட்சி 3: வெறுமையின் வெளிப்பாடு (1:19ஆ-22)
பருவம் 2: ரூத்து தம் மாமியார் நகோமியின் உறவினரான போவாசு என்பவரை வயல் அறுவடையின்போது சந்திக்கிறார் (2:1-23)
காட்சி 1: ரூத்து கதிர் பொறுக்கப் போகிறார் (2:1-3)
காட்சி 2: போவாசு காட்டிய பெரும் வள்ளன்மை (2:4-17அ)
காட்சி 3: போவாசு ரூத்துக்குப் பாதுகாப்பு அளிக்கிறார் (2:17ஆ-23)
பருவம் 3: வாற்கோதுமையைத் தூற்றும் களத்தில் இருந்த போவாசிடம் நகோமி ரூத்தை அனுப்புகிறார் (3:1-18)
காட்சி 1: நகோமி தம் திட்டத்தை அறிவித்தல் (3:1-5)
காட்சி 2: நகோமியின் திட்டத்தை ரூத்து செயல்படுத்துகிறார் (3:6-18)
பருவம் 4: கதை முடிச்சு அவிழ்தலும் நிறைவுரையும் (4:1-22)
காட்சி 1: ரூத்து, நகோமி ஆகிய இருவரையும் மீட்டெடுக்கும் உரிமையை போவாசு பெற்றுக்கொள்கிறார் (4:1-12)
காட்சி 2: ரூத்து மறுவாழ்வு பெறுகிறார், நகோமி நிறைவு காண்கிறார் (4:13-17)
காட்சி 3: நிறைவுரை: ஒரு யூத குடும்பம் செழிப்புறுகிறது (4:18-22)