ரைசின்
ரைசின் என்னும் புரதப் பொருள், ஆமணக்கம் விதையில் இருந்து பெறப்படும் ஒரு வகை நச்சுப்பொருள் ஆகும்.
ரைசினை, சுவாசத்தோடு உள்ளிழுப்பதன் மூலம், ஊசியினால் செலுத்துவதன் மூலம், அல்லது வாய் வழியாக உட்கொள்வதன் மூலம் அது புரதத் தொகுப்பைப் (protein synthesis) பாதிக்கிறது. ரைசின், சயனைட்டிலும் 6,000 மடங்கும், rattlesnake என்னும் நச்சுப் பாம்பின் நஞ்சிலும் 12,000 மடங்கும் கூடிய நச்சுத்தன்மை கொண்டதாகும். இந்த நஞ்சை முறிப்பதற்கான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அமெரிக்கப் படையினர் இதற்குத் தடுப்பு மருந்து ஒன்றை உருவாக்கி உள்ளதாகக் கூறப்படுகின்றது. இந் நஞ்சிலிருந்து பிழைத்துக் கொள்பவர்களின், உறுப்புக்களில் நீண்டநாள் பாதிப்புகள் ஏற்படலாம் எனச் சொல்லப்படுகிறது. ரைசின் தீவிரமான வயிற்றோட்டத்தை ஏற்படுத்தி, அதனால் பாதிக்கப்படுபவர்கள் அதிர்ச்சியினால் இறக்கும் நிலை ஏற்படலாம்.
ஆமணக்கு விதைகளை உட்கொண்டு இறப்பது மிகவும் அரிது. எட்டுக் காய்களில் அடங்கியுள்ள விதைகளில், வளர்ந்த ஒருவரைப் பாதிக்கக்கூடிய அளவு நஞ்சு இருப்பதாகக் கருதப்படுகின்றது. ரைசின் நஞ்சை அளவுக்கு மீறி உட்கொண்டவர்களுக்கு மருத்துவம் செய்வதற்கு சேலைன் மற்றும் குளுக்கோசுக் கரைசல்கள் பயன்படுத்தப்படுகின்றன.