ரோசனம்
ரோசனம் (Rosin) என்பது ஒரு வகை பிசின். இது எளிதில் நொறுங்கக் கூடிய திண்மப் பொருள். ஆம்பர் நிறத்திலிருந்து கருப்பு நிறம் வரையில் உண்டு. பென்சீன், ஈதர், ஆல்கஹால் போன்ற கரிம நீர்மங்களில் கரையும். நீண்ட இலைகளுள்ள பைன் மரத்திலிருந்து கிடைக்கும் பின்னரக்கு (Oleoresin) கலவைப்பொருளை வாலைவடித்துக் கிடைக்கப் பெறுகிறது. வாலைவடிக்கும்போது நீராவியுடன் வெளிவருவது டர்ப்பன்டைன் (Turpentine) தைலம். தைலம் முழுவதும் வடிந்தபின் எஞ்சி நிற்கும் திடப்பொருள் ரோசனம் எனப்படும். இதை மெருகூட்டிகள் (Polishes), வர்ணம் முதலியவைகளின் உற்பத்தியில் பயன்படுத்துகிறார்கள். காகிதத்திற்குப் பசை பபோடவும் (Sizing), வயலின் இசைக்கருவியை மீட்டும் வில்லில் பூசவும், வழுக்கிவிடக்கூடிய பரப்பை வழுக்காமலிருக்குமாறு செய்யப் பூசவும் ரோசனம் பயன்படுகின்றது. [1]