லாயிட் ருடால்ப்
லாயிட் ருடால்ப் (Lloyd I. Rudolph நவம்பர் 1, 1927- சனவரி 16 2016) என்பவர் அமெரிக்க நூலாசிரியர், கல்வியாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர் ஆவார். சிகாகோ பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பேராசிரியராக இருந்தார். இவருடைய எழுத்துக்களும் படைப்புகளும் இந்தியாவின் அரசியல் சமூக தளங்களைப் பற்றியதாக இருந்தன.[1]
பிறப்பும் கல்வியும்
தொகுலாயிட் ருடால்ப் சிகாகோவில் பிறந்தார். சிகாகோவிலும் எல்ஜினிலும் வளர்ந்தார். எல்ஜின் பள்ளியில் சேர்ந்து படித்தார். ஆர்வர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் 1948 ஆம் ஆண்டில் பெற்றார். எம்பிஏ பட்டம் 1950 ஆம் ஆண்டில் பெற்றார். பின்னர் 1956 இல் ஆர்வர்ட் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பட்டம் பெற்றார். 18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் அரசியல் கட்சிகளின் நிலைமைகள் பற்றிய ஆய்வைச் செய்தார்.
பணிகள்
தொகுஅவருடைய ஆய்வுப்பணி 1948 இல் தொடங்கியது. 1951 இல் பிரான்சுக்குப் பயணமானார். அங்கிருந்து திரும்பி வந்ததும் பொருளியல் ஆலோசகர் குழுவில் ஆய்வு உதவியாளராகச் சேர்ந்தார். இவருடைய ஆசிரியர் பணி ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் தொடங்கியது. 1964 இல் லாய்ட் ருடால்ப் சிகாகோ பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்து 34 ஆண்டுகள் பல பொறுப்புகளில் இருந்து பணி செய்தார். 2002 இல் ஒய்வு பெற்றாலும் மதிப்புறு பேராசிரியராக சிகாகோ பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து பணி செய்தார்.
ருடால்ப் தம் நீண்ட கால நண்பர், உடன் பணி செய்த நூலாசிரியர், பெண்மணியான சூசன் ஹோபர் என்பவரை 1952இல் திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள்.
சிகாகோ பல்கலைக் கழகத்திலிருந்து இருவரும் பணி ஒய்வு பெற்ற பிறகு ருடால்ப் இணையர் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் மாறி மாறி வாழ்ந்து வந்தார்கள்.
நிறுவனப்படுத்தப்பட்ட அரசியல், பொருளாதாரம் பற்றியும் தெற்கு ஆசிய நிலைமைகளை ஒப்பிட்டும் ருடால்பின் ஆய்வுகள் இருந்தன. இந்திய முதலாளியம், மகாத்மா காந்தியின் கொள்கைகள், வழிமுறைகள் பற்றியும் நூல்கள் எழுதினார்.
ருடால்பும் அவருடைய மனைவியும் சேர்ந்து எட்டு நூல்கள் எழுதினார்கள். இந்தியாவின் பழைய மரபுகள் பற்றியும் புதிய பழக்கங்கள் பற்றியும் ஆய்வு செய்து தி மாடர்னிட்டி ஆப் டிரெடிஷன் என்னும் நூலில் எழுதினர்.
1984 இல் இந்தியாவில் பண்பாட்டு அரசியல் , 1994 இல் ராஜஸ்தான் பற்றிய எண்ணங்கள், 2006 இல் அரசைப் பற்றிய அனுபவங்கள் ஆகிய நூல்களைப் பதிப்பித்தார்.
2002இல் ருடால்ப் இணையர்கள் இருவரும் பல்கலைக் கழக நோரா அண்ட் எட்வார்ட் ரையரசன் உரையை நிகழ்த்தினார்கள் அந்த உரையில் அவர்களுடைய அறிவார்ந்த வாழ்க்கை பற்றியும் இணைந்து பணியாற்றியது பற்றியும் கூறினர்.
விருதுகள்
தொகு- பத்ம பூசண்-2014 லாயிட் ருடால்ப், சூசன் ருடால்ப் ஆகிய இருவரின் இந்தியா பற்றிய ஆய்வுப் பணிகளைப் பாராட்டி இருவருக்கும் பத்ம பூசண் விருது அளித்து இந்திய அரசு கவுரவித்தது.[2]
- சிகாகோ பல்கலைக்கழக எமெரிடாஸ் பேராசிரியர்
- இந்தியாவின் அயலக நண்பர் விருது
- ருடால்பின் எழுத்தாக்கங்களை ஆக்சுபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பகம் மூன்று தொகுப்புகளில் வெளியிட்டது.
லாயிட் ருடால்ப் கலிபோர்னியாவில் ஓக்லாந்தில் 2016 சனவரி 16 இல் காலமானார்.[3]
மேற்கோள்
தொகு- ↑ "Lloyd Rudolph, leading scholar and teacher of South Asia, 1927-2016". 18 January 2016.
- ↑ "Five eminent personalities from the US get Padma awards, 3 of them Indian Americans". The American Bazaar. 27 January 2014.
- ↑ "Lloyd Rudolph: a tribute".