லினோலியம் தளமுடிப்பு

கட்டிடங்களில், தளங்களுக்கான முடிப்புப் பொருட்களில் லினோலியம் தளமுடிப்புகள் நூற்றாண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. புதுப்பிக்கக்கூடிய (renewable) வளங்களான இயற்கை உற்பத்திப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுவது இதன் சிறப்பாகும். இதன் மூலப்பொருள்களுள் தாவரம் ஒன்றிலிருந்து உற்பத்தி செய்யப்படும் லின்சீட் எண்ணெய் முக்கியமானதாகும். இந்த எண்ணெயுடன், மரத்தூள், கார்க் தூள், நிறத்தூள்கள் என்பவற்றைச் சேர்த்து லினோலியம் தயாரிக்கப்படுகின்றது.

வகைகள்

தொகு

லினோலியம் தளமுடிப்புக்காக இரண்டு வடிவங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஒன்று, பொதுவாக இரண்டு மீட்டர் வரை அகலம் கொண்ட விரிப்புக்களாகச் சுருள் வடிவில் சந்தைப்படுத்தப்படுகின்றது. இன்னொன்று, 500 x 500 மில்லிமீட்டர், 600 x 600 மில்லிமீட்டர் போன்ற அளவுகளில் தள ஓடுகள் வடிவில் கிடைக்கின்றன.

சாதக இயல்புகள்

தொகு

லினோலியம் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது. 40 வருடங்கள் வரை தளமுடிப்புகளில் பயன்படக்கூடியது என்று கூறப்படுகின்றது. இதனால் இது அதிக மக்கள் நடமாடக்கூடிய இடங்களில் பயன்படுத்துவதற்கு உகந்தது. அத்துடன் லினோலியம் மீள்தன்மை (resilient) கொண்டதாக இருப்பதுடன் வளைந்து கொடுக்கக்கூடிய தன்மையும் கொண்டது. வைனைல் தளமுடிப்புக்கள் போன்ற செயற்கைப் பொருட்களைப் போலன்றி, இது மட்கிப் போகக்கூடியது என்பதால் இதன் கழிவுகளால் சூழல் அசுத்தப் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. இது இலகுவில் எரியாது, நீர் ஊடுசெல்ல விடாது, நிலைமின்னேற்றத்தை உருவாக்காது என்பனவும் இதன் சாதகமான இயல்புகளாகும்.

லினோலியம் இயற்கையாகவே பக்டீரியா எதிர்ப்புத் தன்மை கொண்டது என்பதால், வேறு சில உற்பத்திப் பொருட்களைப் போல, தனியான வேதியியல் பக்டீரியா எதிர்ப்புப் பொருட்களைச் சேர்க்கவேண்டிய தேவை இல்லை. இதனால், கட்டிடங்களுள், காற்றுத் தூய்மையைப் பேணும் முயற்சிக்கு லினோலியம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. எனினும், இது தொடர்பில் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விடயம் ஒன்று உண்டு. லினோலியம் தள விரிப்புக்களையோ அல்லது தள ஓடுகளையோ ஒட்டுவதற்குப் பயன்படக்கூடிய ஒட்டுபொருட்களில் பல, காற்றிற் கலக்கக்கூடிய வேதிப்பொருட்களைக் கொண்டிருக்கின்றன. இதனால் ஒட்டுபொருட்களைத் தெரிவு செய்யும்போது உரிய கவனம் எடுக்கவேண்டியுள்ளது.

வரையறைகள்

தொகு

பல சாதகமான இயல்புகளைக் கொண்டுள்ள லினோலியத்தின் பயன்பாட்டுக்குச் சில வரையறைகளும் உண்டு. இதனை நீர்ப்பற்றுக் கொண்ட இடங்களில் பயன்படுத்த முடியாது. இதனால் காங்கிறீற்றுத் தளங்கள் நன்றாகக் காய்ந்தபின்னரே லினோலியத்தைப் பொருத்தவேண்டும். அத்துடன், நீர் மேலேறுவதற்கு வாய்ப்புள்ள நிலக்கீழ் அறைகளிலும் இதனைப் பயன்படுத்த முடியாது. அத்துடன் லினோலியம், வலுவான அமிலம், காரம் (alkali) மற்றும் பெற்றோலியப் பொருட்களால் தாக்குப்படக்கூடியது. ஆகவே, அத்தகைய பொருட்களின் பயன்பாடு இருக்ககூடிய இடங்களில் இது பொருத்தமற்றதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லினோலியம்_தளமுடிப்பு&oldid=1734232" இலிருந்து மீள்விக்கப்பட்டது