லிபியாவின் வரலாறு
லிபியாவின் வரலாறு, மூத்த குடிகளான பேர்பர் பழங்குடியினரதும், மேலும் பல இனக் குழுக்களின் கலவையாலும் ஆனது. பேர்பர்கள் நாட்டின் முழு வாரலாற்றுக் காலத்திலும் லிபியாவில் வாழ்கின்றனர். லிபியாவின் வரலாற்றின் பெரும்பகுதியில் அது பல்வேறு அளவுகளில் ஆசிய,ஆப்பிரிக்க, ஐரோப்பியக் கண்டங்களைச் சேர்ந்த வெளியார் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. 1951 இல் சுதந்திர லிபியாவின் நவீன வரலாறு தொடங்குகிறது. லிபியாவின் வரலாற்று பண்டைக் காலம், உரோமர் காலம், இசுலாமியக் காலம், ஓட்டோமான் ஆட்சிக் காலம், இத்தாலிய ஆட்சிக் காலம், நவீன காலம் என ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது.
வரலாற்றுக்கு முந்திய மற்றும் பேர்பர் லிபியா
தொகுபத்தாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இன்று லிபியாவின் 90% பகுதியை உள்ளடக்கிய சகாராப் பாலைவனம், பசுமையான தாவர வகைகளைக் கொண்ட இடமாக இருந்தது. இது, பல ஏரிகள், காடுகள், பலவகைக் காட்டுயிர்கள், மிதவெப்ப நடுநிலக்கடல் தட்பவெப்பநிலையைக் கொண்ட இடமாகக் காணப்பட்டது. பொகாமு 8000 ஆண்டுக் காலப் பகுதியில் இருந்தே கரையோரச் சமவெளிகளில் புதியகற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. இம்மக்கள் அப்பகுதியின் தட்பவெப்ப நிலையால் கவரப்பட்டிருக்கக்கூடும். இதனால் அவர்களது பண்பாடு வளர்ச்சியடைந்ததுடன், விலங்கு வளர்ப்பின் மூலமும், வேளாண்மை மூலமும் வாழ்க்கையை நடத்தினர்.[1]
வாடி மாதென்டோவசுவிலும், செபல் அகாகசு மலைப் பகுதிகளிலும் உள்ள பாறை ஓவியங்கள், வரலாற்றுக்கு முந்திய கால லிபியாவைப் பற்றியும், அப்பகுதியில் வாழ்ந்த மேய்ப்பர் பண்பாடு குறித்தும் அறிந்துகொள்வதற்கான தகவல்களைத் தருகின்றன. மேற்படி ஓவியங்கள், லிபிய சகாராவில் ஆறுகள்; புல்வெளிகள்; ஒட்டைச்சிவிங்கி, யானை, முதலை என்பன உள்ளிட்ட காட்டுயிர்கள் ஆகியவை இருந்ததைக் காட்டுகின்றன.[2] 5.9 ஆயிரம் ஆண்டுகளில் இடம்பெற்ற தீவிரமான வரட்சியடைதலினால், பசுமையாக இருந்த சகாரா, விரைவில் பாலைவனமாக மாறியது.
பேர்பர் மக்களின் ஆப்பிரிக்க-ஆசிய முன்னோர் பிந்திய வெண்கலக் காலத்தில் இப்பகுதிக்கு வந்ததாக நம்பப்படுகின்றது. இவ்வாறான இனக்குழுக்கள் தொடர்பில் மிக முந்தி அறியப்பட்ட பெயர் கராமன்தெசு என்பதாகும். இவ்வினக் குழுவினர் செர்மாவைத் தளமாகக் கொண்டிருந்தனர்.கராமந்தெசுக்கள் பேர்பர் மூலத்தைக் கொண்ட சகார மக்கள். இவர்கள் விரிவான நிலக்கீழ் பாசன முறை ஒன்றைப் பயன்படுத்தி வந்தனர். இவர்கள் பொகாமு 1000 ஆவது ஆண்டளவில் பெசான் பகுதியில் வாழ்ந்திருக்கக்கூடும். பொகாமு 500 க்கும், பொகா 500 க்கும் இடைப்பட்ட காலத்தில் சகாராப் பகுதியில் வலிமை மிக்க ஒரு குழுவினராக இவர்கள் காணப்பட்டனர். லிபியாவுக்கு வந்த முதல் செமிட்டிய நாகரிகக் குழுவினரான போனீசியர்களுடன் தொடர்பு ஏற்பட்ட காலத்தில், லெபு, கராமனெட்கள், பேர்பர்கள் ஆகிய குழுக்களும் மற்றும் சில பழங்குடிகளும் ஏற்கெனவே சகாராப் பகுதியில் முழுமையாக நிலைகொண்டுவிட்டனர்.
போனீசியர்களும் கிரேக்க லிபியாவும்
தொகுடயர் (இன்றைய லெபனான்) பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் பேர்பர் மக்களுடன் வணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு மூலப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்வதற்கான உடன்படிக்கை ஒன்றையும் செய்துகொண்ட பின்னர், போனீசியர்களே லிபியாவில் முதன் முதலாக வணிகநிலைகளை நிறுவினர்.[3][4] பொகாமு 5 ஆம் நூற்றாண்டளவில், மிகச் சிறப்பு வாய்ந்த குடியேற்றமான கார்த்தேச்சு (Carthage), அதன் ஆதிக்கத்தை வட ஆப்பிரிக்காவின் பெரும் பகுதிகளுக்கு விரிவாக்கியிருந்தது. இங்கேயே தனித்துவமான பியூனிக் நாகரிகம் தோற்றம் பெற்றுச் செழித்தது. லிபியக் கரையோரமாக அமைந்த பியூனிக் குடியேற்றங்களுள் ஒயேயா (தற்போதைய திரிப்போலி), லிப்டா (பிந்திய லெப்டிசு மக்னா), சப்ராத்தா போன்றவை அடங்குகின்றன. இந்த நகரங்கள் அமைந்திருந்த இடங்கள் பிற்காலத்தில் ஒருங்கே திரிப்போலிசு அல்லது "மூன்று நகரங்கள்" என அழைக்கப்பட்டன. இதிலிருந்தே லிபியாவின் தற்காலத் தலைநகர் திரிப்போலியின் பெயர் உருவானது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Federal Research Division of the Library of Congress, (1987), "Early History of Libya", U.S. Library of Congress. Retrieved 11 July 2006.
- ↑ Oliver, Roland (1999), The African Experience: From Olduvai Gorge to the 21st Century (Series: History of Civilization), London: Phoenix Press, revised edition, pg 39.
- ↑ Herodotus, (c.430 BCE), "'The Histories', Book IV.42–43" Fordham University, New York. Retrieved 18 July 2006.
- ↑ Federal Research Division of the Library of Congress, (1987), "Tripolitania and the Phoenicians", U.S. Library of Congress. Retrieved 11 July 2006.