ல டொமாட்டினா
ல டொமாட்டினா (தமிழ்: தக்காளித் திருவிழா, Spanish: La Tomatina) ஸ்பெயின் நாட்டின் வளன்சியான் மாநிலத்தின் வளன்சியா மாகாணத்தில் அமைந்திருக்கும் பூணல் என்ற நகரத்தில் நடைபெறும் ஒரு திருவிழா ஆகும். இத் திருவிழாவில் கலந்து கொள்பவர்கள் ஒருவர் மீது மற்றொருவர் தக்காளிகளை வீசி எறிந்து விளையாடுவார்கள். கடந்த 1945-ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி புதன்கிழமைகளில் இத் திருவிழா நடைபெறுவது வழக்கம்[1].
தக்காளித் திருவிழா | |
---|---|
அதிகாரப்பூர்வ பெயர் | ல டொமாட்டினா |
கடைபிடிப்போர் | பூணல், வளன்சியா, ஸ்பெயின் |
தொடக்கம் | 26 ஆகஸ்ட் 2015 |
முடிவு | 27 ஆகஸ்ட் 2015 |
நாள் | last Wednesday in August |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
வரலாறு
தொகு1945-ஆம் ஆண்டு, கடைசி புதன்கிழமை நாளில் ( 29, ஆகஸ்ட் 1945) வளன்சியான் நகரத்தில் நடைபெற்ற "ராட்சத பெரிய தலை பொம்மைகள்" அணிவகுப்பு விழாவில் பங்கேற்க இளைஞர்கள் சிலர் அந்நகர சதுக்கத்தில் ஒன்றுகூடியிருந்தார்கள். அப்போது அந்த இளைஞர்கள் தம்மோடு கூட இசைக் கலைஞன் ஒருவனையும் அழைத்து வந்திருந்தனர். அவர்களது ஆரவாரக் கொண்டாட்டத்தின் போது, அவர்களில் ஒருவன் வழித்தடத்தில் வைக்கப்பட்டிருந்த காய்கறி வண்டிகளை எல்லாம் தள்ளி விழுத்திக் கொண்டே மேடையிலிருந்து தவறி விழுந்தான். அதனால் அங்கு ஒரு பெருங்கூட்டமே அவனைச் சூழந்து கொண்டது. அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் இடறிவிழுந்த காய்கறி வண்டிகளில் வைக்கப்பட்டிருந்த தக்காளிகளை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடத் தொடங்கினார்கள். பின்னர் காவல்துறையினர் வந்தே அக் கூட்டத்தை அகற்றினார்கள்.
அடுத்த ஆண்டு அதே ஆகஸ்ட் மாத கடைசி புதன் கிழமையில் ஒன்றுகூடிய ஒரு சில இளைஞர்கள், தமது வீடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து விளையாடி மகிழ்ந்தனர். மீண்டும் பெருங்கூட்டம் கூடிவிட, காவல்துறையினர் வந்து அக்கூட்டத்தை அப்புறப்படுத்தினார்கள். இது அங்குள்ள மக்களை ஈர்த்துவிடவே, 1950-யிலிருந்து அதே நாளில் தக்காளிகளை வீசி எறிந்து விளையாடி மகிழ அந்த நகராட்சியே அனுமதி வழங்கியது. ஆனால், எதிர்பாராதவிதமாக அடுத்த ஆண்டே அனுமதியை ரத்து செய்ததோடு, பல இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். ஆனால், நகரத்து மக்கள் பலரும் ஒன்றுகூடி காவல்துறையை தடுத்தனர். இறுதியில் வேறு வழியின்றி காவல்துறையினர் கைதானவர்களை விடுவித்தது. இதன் பின் இத்திருவிழாவின் புகழ் பெரியளவில் பரவியது. அடுத்தடுத்த ஆண்டுகளில் பலமுறை இத் திருவிழாவை தடுக்கப் பார்த்தும் பயனளிக்கவில்லை. 1957-யில் "தக்காளியின் கருமாதி" என்ற பெயரில் பல இளைஞர்கள் ஒன்று கூடினார்கள். அந்த ஒன்றுகூடலில் இசைக்கலைஞர்கள், பாடகர்கள், நகைச்சுவைக் கலைஞர்களும் பங்கேற்றார்கள். அந்த ஒன்றுகூடலின் சிறப்பம்சமே, பெரிய சவப்பெட்டி ஒன்றில் மிகப் பெரிய தக்காளி வடிவத்தை வைத்து ஆடிப் பாடிக் கொண்டே ஊர்வலம் வந்தனர். மக்களிடையே இது பெரும் கவனத்தைப் பெற்றதால், நகரத்துவாசிகள் சிலரது வேண்டுகோளிற்கு இணங்க ஒருசில கட்டுப்பாடுகளையும், விதிகளுக்கும் உட்பட்டு இத் திருவிழாவை கொண்டாட அனுமதி அளித்தார்கள். காலம் செல்ல செல்ல இந்த கட்டுப்பாடுகளில் பல தளர்த்தப்பட்டுவிட்டன. [2]
சான்றுகள்
தொகு- ↑ "தக்காளித் திருவிழா". பார்க்கப்பட்ட நாள் 26 ஆகத்து 2015.
- ↑ Spanish austerity comes to tomato-throwing festival The Financial Times. Retrieved Aug 24, 2013