வகை (மொழியியல்)

மொழியியலில், வகை (variety) என்பது, குறித்த வடிவத்தைக்கொண்ட ஒரு மொழி அல்லது மொழித் தொகுதி ஆகும். இது, மொழிகள், கிளைமொழிகள், நடைகள், பிற மொழி வடிவங்கள் ஆகியவற்றையும் பொது வகையையும் உள்ளடக்கும்.[1] வெவ்வேறு வடிவங்களைக் குறிப்பதற்கு வகை என்னும் சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம், பொது மொழியுடன் மக்கள் அடையாளப் படுத்தக்கூடிய மொழி என்ற சொற்பயன்பாடும், பொது மொழியைவிட குறைவான மதிப்புக் கொண்டது அல்லது குறைந்த அளவு சரியானது என்று எண்ணப்படுகின்ற பொது மொழியல்லாத கிளைமொழி என்ற சொற்பயன்பாடும் தவிர்க்கப்படுகிறது.[2]

கிளைமொழிகள் தொகு

தனித்துவமான ஒலியியல், தொடரியல், சொற்கள் சார்ந்த பண்புகளைக் கொண்ட பிரதேச அல்லது சமூக மொழி வகையே கிளைமொழி என ஓ'கிரேடியும் மற்றவர்களும் வரைவிலக்கணம் தந்துள்ளனர்.[3] குறித்தவொரு பிரதேசத்தில் பேசப்படும் வகை பிரதேசக் கிளைமொழி என்று அழைக்கப்படுகின்றன. அத்துடன், இனக் குழுக்கள் (இனக் கிளைமொழிகள்), சமூக பொருளாதார வகுப்புக்கள் (சமூகக் கிளைமொழிகள்), அல்லது பிற சமூக அல்லது பண்பாட்டுக் குழுக்களுடன் தொடர்புள்ள கிளைமொழிகளும் உள்ளன.

பொது வகைகள் தொகு

பெரும்பாலான மொழிகள் பொது வகையைக் கொண்டுள்ளன. பகுதிச் சட்டவகை அதிகார அமைப்புக்கள் அல்லது பள்ளிகள் அல்லது ஊடகங்களைப் போன்ற சமூக நிறுவனங்கள் ஏதோவொரு வகையைத் தெரிவுசெய்து பொது வகையாக முன்னிலைப் படுத்துகின்றன. பொது வகைகள், பிற பொதுவல்லாத வகைகளைவிடக் கூடிய மதிப்புக் கொண்டவையாக இருப்பதுடன், அம்மொழி பேசுவோரால் பொது வகையே சரியானது என்ற எண்ணமும் உள்ளது. பொது வகைத் தேர்வு எழுந்தமானமானது என்பதால், அம்மொழி பேசும் சமூகத்தால் பெரு மதிப்பு அளிக்கப்படுகிறது என்ற அளவிலேயே பொது வகையைச் "சரியானது" எனக் கொள்ளலாம். ரால்ஃப் அரோல்ட் பசோல்ட் சொல்வதுபோல், "பொது மொழி, இயலுமான அளவுக்குச் சிறப்பாக அமைந்த மொழியியல் அம்சங்களின் சேர்க்கையாகக் கூட இல்லாதிருக்கலாம். பொதுவான சமூக ஏற்பே அதற்கு செயற்படக்கூடிய எழுந்தமானமான தரத்தை வழங்குகிறதேயொழிய அதன் இயல்புகளின் உள்ளார்ந்த மேன்மை அல்ல."[4]

மேற்கோள்கள் தொகு

  1. Meecham, Marjorie and Janie Rees-Miller. (2001) "Language in social contexts." In W. O'Grady, J. Archibald, M. Aronoff and J. Rees-Miller (eds) Contemporary Linguistics. pp. 537-590. Boston: Bedford/St. Martin's.
  2. Schilling-Estes, Natalies. (2006) "Dialect variation." In R.W. Fasold and J. Connor-Linton (eds) An Introduction to Language and Linguistics. pp. 311-341. Cambridge: Cambridge University Press.
  3. O'Grady, William, John Archibald, Mark Aronoff, and Jane Rees-Miller. eds. (2001) Contemporary Linguistics. Boston: Bedford/St. Martin's.
  4. Fasold, Ralph. (2006) "The politics of language." In R.W. Fasold and J. Connor-Linton (eds) An Introduction to Language and Linguistics. pp. 371-400. Cambridge: Cambridge University Press.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வகை_(மொழியியல்)&oldid=2463534" இலிருந்து மீள்விக்கப்பட்டது