வடமவண்ணக்கன் தாமோதரனார்

சங்க கால புலவர்
(வடமவண்ணக்கன் தாமோதரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வடமவண்ணக்கன் தாமோதரன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் இரண்டு உள்ளன. அவை குறுந்தொகை 85, புறநானூறு 172.

வண்ணம் என்பது நிறம். பொன்னின் நிறத்தைக் காண்பது வண்ணக்கம். நகைப்பொன்னின், நாணயப்பொன்னின் மாற்றைக் காண்பவர் வண்ணக்கன். வடமம் என்பது இந்தப் புலவர் தாமோதரனார் வாழ்ந்த ஊர்.

இவர் சொல்லும் செய்திகள்

தொகு

குறுந்தொகை 85

தொகு

பரத்தையிடம் சென்ற தலைவன் தன் இல்லம் புக ஒப்புதல் வேண்டிப் பாணன் ஒருவனைத் தன் இல்லத்துக்குத் தூது அனுப்புகிறான். வீட்டில் தலைவியுடன் இருக்கும் தோழி தலைவனை உள்ளே நுழையவிட மறுத்துப் பாணனிடம் சொல்லும் செய்தியைக் கொண்டது இப்பாடல்.

தலைவன் தலைவிக்கு எவரையும் விட இனியவன். எல்லாரையும் விடப் பேரன்பினன். என்றாலும் உள்ளூர்க் குருவியின் சேவல் தன்னுடன் தனக்குக் கருவுற்று வாழும் பேடைக்குருவிக்கு ஈனம் செய்துவிட்டு இனிக்கும் கரும்பிலுள்ள மணமில்லாத பூவைக் கோதுவது போலப் பரத்தையை நாவால் நக்கிக்கொண்டிருக்கிறான் - என்கிறாள் தோழி.

புறநானூறு 172

தொகு

இந்தப் பாடல் பிட்டங்கொற்றன் என்பவனின் நல்லியல்புகளைக் கூறுகிறது.

பிட்டங்கொற்றன் சேர மன்னன் கோதை என்பவனின் ஆட்சிக்கு உட்பட்டு வன்புல நாட்டுப்பகுதி ஒன்றை ஆண்டுவந்தான். அந்த நாட்டில் புன்செய்ப் பயிராக விளையக்கூடிய ஐவனம் என்னும் நெல் மிகுதி. இரவில் ஐவண நெல் வயலில் காவல் புரியும் ஆடவர் வெளிச்சத்துக்காகத் தீப்பந்தம் வைத்திருப்பர். அந்தத் தீப்பந்தத்தின் ஒளி மங்கினால் அந்தாட்டில் ஆங்காங்கே கிடக்கும் மணிகள் ஒளி வீசி வெளிச்சம் தருமாம்.

பிட்டங்கொற்றன் பெருங் கொடையாளி. அத்துடன் சிறந்த வீரன். சிறந்த வீரன் தன் திறமையை வெளிப்படுத்தப் பகையாளி வேண்டுமல்லவா? எனவே பிட்டங்கொற்றன் வாழிய, அவனோடு மாறுகொள்ளும் மன்னரும் வாழிய என்று இந்தப் புலவர் வாழ்த்துகிறார். (இது ஒரு புதுமையான வாழ்த்து)

புலவர் பாணர்களை அழைத்துப் பேசுகிறார்.

உலை ஏற்றுங்கள். சோறு ஆக்குங்கள். கள்ளுக்குடம் குறையட்டும். பாடல்வல்ல விறலியர் ஆடிப்பாடி மாலை சூடுங்கள். எதற்காகவும் கவலைப்பட வேண்டாம். பிட்டங்கொற்றன் இருக்கிறான். ஒல்லாம் தருவான்.

புகழூர்த் தமிழி(பிராமி) கல்வெட்டு

தொகு

கருவூர் மாவட்டத்துப் புகழூரிலுள்ள தமிழி கல்வெட்டு அங்குள்ள ஆறுநாட்டான் மலைக் குகையில் சேரமன்னன் இளங்கடுங்கோ அமண(சமண)த் துறவிகளுக்கு அறுத்துத் தந்த படுக்கைகள் இன்னின்ன துறவிகளுக்கு உரியவை என்று குறிப்பிடுகிறது. அங்குள்ள படுக்கைகளின் தலைமாட்டில் அசோகன் காலத்துத் தமிழி எழுத்துகளில் பிட்டன், கொற்றன் என்னும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை புலவர் தாமோதரன் குறிப்பிடும் பிட்டங்கொற்றன் தன் இறுதிக் காலத்தில் சமணத் துறவியாக மாறி இங்கு உறைந்தானோ என நினைத்துப் பார்க்கத் தூண்டுகிறது. மேலும் பிட்டன் என்பது தந்தை பெயராகவும், கொற்றன் என்பது மகன் பெயராகவும் இருக்கவேண்டும் என்னும் கருத்தையும் வெளிப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு