வடமோதங்கிழார்

வடமோதங் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் இரண்டு உள்ளன. அவை அகநானூறு 317, புறநானூறு 260 ஆகியவை.

வடமோதம் என்பது ஊரின் பெயர். இந்த ஊர் மக்கள் இவரைத் தமக்கு உரிமையுள்ள தலைவராகக் கொண்டமையால் இவரை ஊர்ப்பெயராலேயே வழங்கலாயினர்.

அகநானூறு 317 செய்தி

தொகு

கார்காலம் வந்ததும் இல்லம் வந்து சேர்வேன் என்று தலைவன் சொல்லிச் சென்றான். கார்காலம் வந்தும் தலைவன் வரவில்லையே என்று தலைவி ஏங்கும்போது அவள் எதிரில் தலைவன் வந்து நிற்கிறான்.

இப்பாடலில் செடியினங்களும், விலங்கினங்களும், பொன்வேலைக் கன்னத் தொழிலும் விக்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பொன்செய் கன்னம் - வெள்ளியை அரத்தால் அராவும்போது வெள்ளித் துகள்கள் உதிர்வது போல வண்டுகள் ஊதும்போது குரவம் பூக்கள் கோங்கம் பூக்களின் மேல் உதிருமாம்.
முருக்கம் பூ - செவ்வண்ணம் ஏற்றிய மகளிர் நகம்போல் பூக்கும்.
தும்பி - யாழிசை போல் துவைக்கும்(ஒலிக்கும்)
ஆன்(பசு) - வேனில் காலத்தில் இணைவிழைச்சை விரும்பும்.
குயில் - பூத்திருக்கும் மரா மரத்தில் இருந்துகொண்டு கூவும்.
இப்படிப்பட்ட கார் காலத்தில் வருவேன் என்றார்.

புறநானூறு 260 செய்தி

தொகு

பாணன் ஒருவன் வள்ளல் ஒருவனை நாடிப் பசியோடு வருகிறான். வரும் வழியில் கள்ளிக்காட்டில் கடவுளாகி நிற்கும் தன் முன்னாள் வள்ளல் ஒருவனை வாழ்த்தி வணங்கிவிட்டு வருகிறான். அவனுக்குப் புலவர் கூறுவதாக அமைந்துள்ளது இந்தக் கையறுநிலைப் பாடல்.

பாண, கேண்மதி! நீ தேடிவந்த மீளியாளன் பகைவர் கவர்ந்துசென்ற ஆனிரைகளை மீட்டு வந்த செய்தியைத் தன் ஊர்மக்களிடம் சொல்லிவிட்டு உடம்பொடு யாரும் செல்லமுடியாத உலகுக்கு உயிரை மட்டும் கொண்டுசென்றுவிட்டான். வையகம் புலம்பிக்கொண்டிருக்கிறது. பாம்பு விழுங்கிய மதியம் போல அவன் உடல் கிடக்கிறது. என்றாலும் "கம்பமொடு துளங்கிய இலக்கம்" போல அவன் உடல் வேல் பாய்ந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீ அங்குச் சென்றால் மற்றவர்கள் உன் பசியை ஆற்றினும் ஆற்றுவர். என்றாலும் உனக்கு எவ்வம்(துன்பம்) இருக்கத்தான் செய்யும்.

  • கம்பமொடு துளங்கிய இலக்கம் = கம்பத்தில் எரியும் தெருவிளக்கு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடமோதங்கிழார்&oldid=2718219" இலிருந்து மீள்விக்கப்பட்டது