வண்ணார மாடன்

நாட்டார் தெய்வம்

வண்ணார மாடன் என்பவர் தமிழகத்தில் வணங்கப்படும் காவல் தெய்வங்களில் ஒருவர் ஆவார்.

வரலாறு தொகு

வண்ணாரமாடன் குறித்து நிலவும் செவிவழிக் கதை பின்வருமாறு; சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு அரசர் ஆட்சி செய்து வந்தார். அவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத நிலையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் ஆண் குழந்தை இல்லையே என்று அரசர் வருத்தப்பட்டார். ஆனால் அடுத்த சிலகாலத்திற்குப் பிறகு அரசியாருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தைக்கு முண்டுசாமி என பெயரை வைத்து வளர்த்தனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக அரசரும் அரசியும் மரணமடைந்தார்கள். இதனால் முண்டு சாமியின் சகோதரி முண்டு சாமியை அரசனாக்க முயற்சி செய்தார். அதே நேரம் அரசாட்சிக்கு ஆசைப்பட்ட முண்டு சாமியின் உறவினர்கள் முண்டு சாமியையும் அவனுடைய சகோதரியையும் கொன்று விட்டு ஆட்சியை அபகரிக்க திட்டம் திட்டினர். உறவுக்காரர்கள் சூழ்ச்சியை அறிந்தார் முண்டு சாமியின் சகோதரி தன் தம்பியை அழைத்துக் கொண்டு அரண்மனையை விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறினாள்.

எங்கு போவது என்ன செய்வது என்று எதுவுமே தெரியாமல் நெடுந்தூரம் நடந்து அவர்கள் களைப்படைந்தனர். அப்போது அருகில் தென்பட்ட ஆற்றுக்குச் சென்று தண்ணீர் அருந்தலாம் என ஆற்றை நோக்கிச் சென்றனர். ஆனால் ஆற்றை அடைவதற்கும் இருவரும் மயங்கி விழுந்தனர். அந்த ஆற்றில் துணி துவைக்க வரும் சலவைத் தொழிலாளியான குயிலான் என்பவர் அங்கு மயங்கிய நிலையில் உள்ள இருவரையும் கண்டு அவர்களைக் காப்பாற்றினார். அவர்களிடம் யார் என்று விசாரித்தார் குயிலான் ஆனால் முண்டு சாமியும் அவருடைய சகோதரியும் தாங்கள் யார் என்ற உண்மையை அவரிடம் தெரிவிக்காமல் அனாதைகள் என்றனர். இதன்பின்னர் அவர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு துணிகளை சலவை செய்யும் வேலை கொடுத்து இருக்க இடமும் கொடுத்தார். குயிலானுக்கு சிவ பொலிவு என்ற வயதுக்கு வந்த அழகான மகள் இருந்தாள். அவளும், முண்டு சாமியும் காதலிக்க தொடங்கினார்கள். ஒருநாள் இந்த விஷயம் குயிலைனுக்கு தெரிந்தது விட்டது. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்து விட்டானே இவனை சும்மா விடக்கூடாது என்று முண்டு சாமியின் மீது கோபம் கொண்டார் குயிலான். இவர்களின் காதலை பிரிப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தார் ஆனால் அது முடியாமல் போனது. அதனால் முண்டு சாமியையும் அவரடைய சகோதரியையும் திட்டமிட்டு கொலை செய்தார். இந்த நிகழ்வு நடந்த சில நாட்களுக்கு பிறகு, குயிலானுக்கு பல துர்சகுணங்கள் ஏற்பட்டன. இதற்கெல்லாம் காரணம் இறந்துபோன முண்டு சாமி தான் என்று எண்ணி முண்டு சாமிக்கு ஒரு கோயிலை எழுப்பி அவனுக்கு வண்ணாரமாடன் என்ற பெயரை வைத்து தெய்வமாக வணங்க ஆரம்பித்தார் குயிலான். இப்படி உருவானதுதான் வண்ணார மாடன் சாமி ஒரு காதலுக்காக உயிரை விட்ட முண்டு சாமியை மக்கள் இன்றும் தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.[1][2]

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்ணார_மாடன்&oldid=3602777" இலிருந்து மீள்விக்கப்பட்டது