வரம்பன் மரபு

வரம்பன் மரபு என்பது சங்ககால சேரமன்னர்களின் மரபாகும்.சேரமன்னர்களின் பெயர்களில் வரம்பன் என்பது முக்கிய பெயராகும். வரம்பம் அடைமொழியுடன் சேரமன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர்.

பெயர்காரணம்

தொகு
 
வரம்பன் மூலச்சொல்

வரை என்ற சொல்லுக்கு மலை என்பது பொருள்.மலைகளை எல்லையாக கொண்டு ஆட்சி செய்தவர்கள் சேரமன்னர்கள்.வரை என்ற சொல் எல்லைகளை குறிக்க வரம்பு என்று மருவி, பின்னர் அதற்கு உற்பட்ட பகுதியை ஆட்சி செய்யும் மன்னன் வரம்பன் என்றும் அழைக்கப்பட்டனர்.உதாரணமாக இமயவரம்பன் என்ற பெயருக்கு இமயமலையை எல்லையாக கொண்டு ஆட்சிசெய்தவன் என்பது பொருள்.

இதன் மூலசொல் வரை என்ற சொல்லாகும்

வரை > வரைப்பு > வரப்பு > வரம்பு > வரம்பன்

- மயிலை சீனி. வேங்கடசாமி [1]

வரம்பு

தொகு
 
நில எல்லைகளை - வரம்பு

வரம்பு என்பது எல்லை என்ற பொருள் கொண்டது. இலக்கியங்களில் இச்சொல் நில எல்லையாக பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் எல்லைகளை குறிப்பிட தமிழர்கள் மலைகளை முதன்மையாக பயன்படுத்தினர்.குறிப்பாக சிலம்பில் தமிழ்நாட்டு எல்லையை குறிக்க நெடியோன் குன்று என்று வேங்கடமலையையும், எல்லையை குறிக்க வரம்பு என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு - சிலப்பதிகாரம்,வேனிற்காதை:1-2

நெடியோன் குன்றம் - திருமால் குன்றம், வேங்கட மலை, திருப்பதி; தொடியோள் - குமரி; பௌவம் - கடல்; வரம்பு - எல்லை.

வரைப்பு

தொகு

வரைப்பு என்ற‌ சொல்லை அடியொற்றி மருவிய சொல் வரம்பு என்ற சொல்லாகும்.இன்றும் வயல் எல்லைகள் வரைப்பு, வரப்பு என்றே அழைக்கப்படுகிறது. இச்சொல் மலைத்தொடர்களையும் நில எல்லையையும் ஒருசேர குறிக்ககப் பயன்பட்டுள்ளது.

வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெயர் எல்லை அகத்தவர் -(தொல் 1336)

மேலும் வயல் வரப்புகளையும் 'வரம்பு' என்றும் சங்கயிலக்கியங்கள் குறிப்பிடுகின்றன் (வரம்பு அணையாத் துயல்வர - அகம் 13) .

பொற்கோட்டு வரம்பன்

தொகு

சிவபெருமான் இமயமலையை வரம்பாக கொண்டவர்‌ என்பதால் சிலப்பதிகாரம் சிவபெருமானை பொற்கோட்டு வரம்பன் என்று குறிப்பிடுகிறது.


வரம்பன் மன்னர்கள்

தொகு


வரம்பன் பட்டம் கொண்ட சேரமன்னர்கள்

தொகு
  • இமயவரம்பன் (சிலப்பதிகாரம் 26/3/5, 30/20/60)
  • இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (அகம் 347:3 / பதிற்றுப்பத்து பதிகம் 2)
  • இமயவரம்பன் தம்பி (பதிற்றுப்பத்து 46/12-13)
  • களங்காய்கண்ணி நார்முடிச்சேரல் வானவரம்பன்
  • ஆடுகோட்பாட்டு சேரலாதன் (வானவரம்பன்)

வரம்பனும் வர்மனும்

தொகு

பல்லவ மன்னர்களே முதலில் வர்மன் என்ற பட்டத்தை சூட்டியுள்ளனர். பல்லவர்களின் ஆரம்பகால கல்வெட்டுக்கள் தனித்தமிழில் காணப்படுகிறது, அவற்றில் பல்லவ மன்னர்களை தமிழில் சிங்க பர்மன், சிங்க பரம்பன் என்று குறிப்பிட்டுள்ளது. இதனை வடமொழி கல்வெட்டான முதலாம் சிம்மவர்மனின் கல்வெட்டு சிம்ம வர்மன் என்று குறிக்கிறது. பல்லவர் காலத்திலேயே வரம்பன் என்ற சொல் பரம்பன், வர்மன், பர்மன் என்று தமிழிலிருந்து வடமொழியில் மருவிச்சென்றுள்ளதை இதன்மூலம் உறுதியாகிறது.

விண்ணபருமர், வாண பெருமரைசர் என்ற மன்னர்களின் மெய்க்கீர்த்தி சொற்களை கொண்ட பல்லவர்களின் முதல் நடுகல் கல்வெட்டான விஷ்ணுவர்மனின் இருளப்பட்டி நடுகல் கல்வெட்டு [3] தெளிவான குறிப்புகள் தருகிறது. வானவரம்பன் என்ற பெயர் மருவி விண்ணபருமர் என மாற்றமடைந்துள்ளதை. மேலும் அம்மன்கோயில்பட்டி தமிழி கல்வெட்டு பரம்பன் கோகூர் கிழார் என்ற பெயரை குறிப்பிடுகிறது.[4]சின்னய்யன் பேட்டை கம்பவர்மனின் மூன்று கல்வெட்டுகளில் முதலாம் கல்வெட்டில் கம்ப வருமர் என்றும் இரண்டாவது கல்வெட்டில் கம்ப பருமர் என்றும் மூன்றாவது கல்வெட்டில் கம்பவர்மர் என்றும் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.[5] இவைகள் வரம்பன் என்ற சொல் பரம்பன் பருமன் என்று மருவியதை குறிக்கிறது.

முதன் முதலாக வர்மன் என்ற பட்டத்தை பல்லவ மன்னனான முதலாம் சிம்மவர்மன் (கிபி.275 - 300) கொண்டுள்ளான். இதை தொடர்ந்து பல்லவர்களின் கீழ் சிற்றரசாக இருந்த மேலைக் கங்கர் அரசமரபை (Western Ganga Dynasty கிபி.350) தோற்றுவித்த கொங்கணி வர்மன் இந்த பட்டத்தை கொண்டுள்ளான். இதனைத்தொடர்ந்து கடம்ப அரசமரபை (Kadamba Dynasty) தோற்றுவித்த மயூரவர்மன் (கிபி.345-365) இப்பெயரை கொண்டுள்ளான். பின்னர் அஸ்ஸாம் மாநிலத்தில் வர்மா அரசை (Varma Dynasty) அமைத்த புஷ்கர் வர்மன் (350 - 374 CE) இந்த பட்டத்தை சூட்டியுள்ளார்.

கிபி 6ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் மாறவர்மன் அவனி சூளாமணி வர்மன் என்ற பட்டம் கொண்டு ஆட்சி செய்தான். தமிழ்நாட்டில் மாறவர்மன் அவனி சூளாமணி காலம் முதல் பாண்டிய மன்னர்கள் மாறவர்மன், சடையவர்மன் என்னும் பட்டங்களைப் புனைந்து கொண்டார்கள்.

வரம்பனும் பரம்பனும்

தொகு

சங்க இலக்கியங்களில் சேரமன்னர்கள் வரம்பன் என்றழைக்கப்பட்டதுபோல கல்வெட்டுச் சான்றுகளில் முதல் சான்றாக இருப்பது பரம்பன் என்ற அம்மன் கோவில்பட்டி தமிழி சொல்தான். இச்சொல் வரம்பன் என்றும் வாசிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டை ஆட்சி செய்த மூவேந்தர்களின் எல்லையை குறிக்கும்படியான சிறுபாணாற்றுப்படை பாடல் வரிகள், சேரமன்னனை மருமான் என்று குறிப்பிடுகிறது. இது வர்மன் என்ற சொல்லுடன் தொடர்புடையது.

குடபுல காவலர்‌ மருமான்‌ குட்டுவன்‌” (சிறுபாணாற்றுப்படை 47-49)


மேற்கோள்கள்

தொகு
  1. -மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - பக்கம் 236
  2. சிலப்பதிகாரம் - மதுரைக் காண்டம் 13. கட்டுரை காதை, வரி 13
  3. 1. கோவிசைய விண்ணபருமற்கு நான்காவ 2. து (தகடூரு) நாடாளும் கங்கரைசரு 3. மேல் வந்த தண்டத்தோடு எ 4. றிந்து பட்ட வாண பெருமரைசரு ............……........... - விஷ்ணுவர்மனின் இருளப்பட்டி நடுகல் கல்வெட்டு ( நடுகற்கள் - ச.கிருஷ்ணமூர்த்தி பக்கம் - 148 )
  4. Early Tamil Epigraphy - Iravatham Mahadevan (page - 525)
  5. ( நடுகற்கள் - ச.கிருஷ்ணமூர்த்தி பக்கம் - 198 )
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரம்பன்_மரபு&oldid=3852652" இலிருந்து மீள்விக்கப்பட்டது