வலங்கைமான் மாரியம்மன் கோயில்

வலங்கைமான் மாரியம்மன் கோயில், தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் கும்பகோணம்-ஆலங்குடி சாலையில், கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. [1]

வலங்கைமான் மாரியம்மன் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர் மாவட்டம்
அமைவு:வலங்கைமான்
கோயில் தகவல்கள்
மூலவர்:மாரியம்மன்

அமைப்பு

தொகு
 
கோயில்

இக்கோயில் முன் மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை, திருச்சுற்று ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது. மகா மண்டபத்தின் தென் பகுதியில் விநாயகர் சிலையும், வட பகுதியின் கீழ்ப்புறம் இருளன், பேச்சியம்மன், வீரன், வீரனுடைய தேவியர் ஆகியோரின் சுதைச் சிற்பங்கள் உள்ளன. அர்த்தமண்டபத்தில் உத்சவத் தருமேனிகள் உள்ளன. கருவறை சதுர வடிவில் உள்ளது. இதன்மேல் விமானம் உள்ளது. கோயிலின் தெற்கில் குளம் உள்ளது. [1]

மூலவர்

தொகு

இக்கோயிலின் மூலவராக சீதளாதேவி மகாமாரியம்மன் அமர்ந்த நிலையில் நாற்கரங்களுடன் உள்ளார். வலது மேற்கரத்தில் உடுக்கையும், இடது மேற்கரத்தில் சூலமும் உள்ளது. வலது கீழ்க்கரத்தில் கத்தியும், இடது கீழ்க்கரத்தில் கபாலமும் உள்ளது. இடது காலை மடித்து, வலது காலை தொங்கவிட்டு வீரசிம்மாசனத்தில் உள்ளார். இரு தோள்களின் மீதும் இரு நாகங்கள் உள்ளன. [1] அவர் பாடைகட்டி மாரியம்மன் என்றும் அழைக்கப்படுகிறார்.

திருவிழா

தொகு

ஆவணி, பங்குனி

தொகு

ஆவணி, பங்குனி ஆகிய இரு மாதங்களிலும் மாரியம்மனுக்கு திருவிழா நடைபெறுகின்றது. ஏழு நாட்கள் விழா நடைபெறும். எட்டாம் நாள் புகழ் பெற்ற பெற்ற பாடைத் திருவிழாவும், ஒன்பதாம் நாள் புஷ்பப் பல்லக்கும் சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறுகின்றன.[2] ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விழா நடைபெறுகிறது. ஆவணி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. பங்குனித்திருவிழா பங்குனி முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெறும். [3]

பாடைக்காவடி

தொகு

நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அம்மனிடம் வேண்டி தம் நோய் குணமடைந்ததும் இக்கோயிலுக்கு பாடைக்காவடி எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதனடிப்படையில், பங்குனி பெருந்திருவிழாவின் 8-ஆம் நாள் பாடைக் காவடித் திருவிழாவின்போது பக்தா்கள் பாடைக்காவடி எடுத்து வந்து தங்களுடைய நோ்த்திக்கடனை செலுத்தி நிறைவேற்றுவர். அப்போது நோயிலிருந்து குணமடைந்தவா்களை ஆற்றில் குளிக்க வைப்பர். பின்னர் அவர்களுடைய நெற்றியில் திருநீறு பூசி பச்சைப் பாடையில் படுக்க வைத்து உறவினா்கள் நான்கு போ் சுமந்து வருவர். ஒருவா் முன்னால் தீச்சட்டி ஏந்திவர வலங்கைமான் நகரின் முக்கியமான வீதிகளின் வழியாக பாடைக்காவடி கோயிலை வந்து சேரும். அதனைத் தொடர்ந்து கோயிலை பாடைக்காவடி மூன்று முறை வலம் வரும். பிறகு கொடிமரத்தின் முன்பாக பாடைக்காவடி இறக்கி வைக்கப்படும். பூசாரி பாடையில் படுத்திருப்பவருக்கு திருநீறு பூசி அவரை எழச்செய்வாா். இதைத்தொடா்ந்து பாடைக்காவடி எடுத்தவா் அம்மனுக்கு அா்ச்சனை செய்து தன் நோ்த்திக்கடனை நிறைவேற்றுவாா். இவ்விழாவின்போது நூற்றுக்கணக்கானோா் பாடைக்காவடி எடுப்பா். குழந்தைகள் தொட்டில் காவடியில் சுமந்து வரப்படுவா். [4] இத்திருவிழாவின்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பக்தர்கள் வந்து கலந்துகொள்வர். நூற்றுக்கணக்கானோர் பாடைக்காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவர். இதனால் பாடைக்காவடித்திருவிழா என்று இவ்விழாவினை அழைப்பர். பாடைக்காவடியுடன் ரதக்காவடிகள், அலகுக்காவடிகள், பக்கஅலகுக் காவடிகள், பால் அலகுக்காவடிகள் எனப் பலவகையான காவடிகள் காலை முதல் வந்துகொண்டே இருக்கும். இதே நாளில் செடில் சுற்றும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. [3]

மீன் திருவிழா

தொகு

வலங்கைமானின் தனிச்சிறப்பாக, 9ஆம் நாளான மஞ்சள் நீராட்டு விழா அன்று இரவு வீடு தோறும் மீன் சாப்பிடுவார்கள். விருந்தினர்களுக்கும் அன்று மீன் உணவு வழங்கப்படும். இதனை மீன் திருவிழா என்கின்றனர். [3]

குடமுழுக்கு

தொகு

மூன்று நாட்களாக யாகசாலை பூஜைகள் நடந்து நிறைவு பெற்றன. தொடர்ந்து தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் மற்றும் செப்பு கலசங்கள் முக்கிய வீதிகளில் வழியே ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, அம்மன் சன்னதியில் வைக்கப்பட்டன. [5] யாகசாலை பூசைகளைத் தொடர்ந்து 12 பிப்ரவரி 2020 புதன் கிழமை அன்று இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது [6] [4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 எஸ்.சந்தானராமன், மூவகைச் சிறப்புகளுடன் வலங்கைமான் மாரியம்மன், வலங்கைமான் அருள்மிகு பாடைகட்டி மகாமாரியம்மன் கோயில், மகா கும்பாபிஷேக விழா விளம்பரச் சிறப்பிதழ், தினமணி, 12 பிப்ரவரி 2020
  2. வலங்கைமான் அருள்மிகு மகாமாரியம்மன் தல வரலாறு, மகாமகம் சிறப்பு மலர் 2004, பக்.216,217
  3. 3.0 3.1 3.2 திருவிழாக்களும், புஷ்பப்பல்லக்கும், வலங்கைமான் அருள்மிகு பாடைகட்டி மகாமாரியம்மன் கோயில், மகா கும்பாபிஷேக விழா விளம்பரச் சிறப்பிதழ், தினமணி, 12 பிப்ரவரி 2020
  4. 4.0 4.1 வலங்கைமான் மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம், தினமணி, 13 பிப்ரவரி 2020
  5. கும்பகோணம் வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம், ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட கோபுரக் கலசங்கள், தந்தி டிவி, 11 பிப்ரவரி 2020
  6. வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம், தினமணி, 11 பிப்ரவரி 2020

வெளி இணைப்புகள்

தொகு