வலைவாசல்:இஸ்லாம்/சிறப்புக் கட்டுரை/1
திருக்குர்ஆன் அல்லது குரான் (குர்-ஆன் அரபி: القرآن அல்-குர்-ஆன்) இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை.இசுலாமிய சட்ட முறைமையான சரியத் சட்டத்தின் அடிப்படையாகவும் குரான் விளங்குகின்றது. ஆதம் முதல் முகம்மது நபி வரையிலான இசுலாமிய இறைதூதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட நான்கு வேதங்களில், இது இறுதியானது என்றும் முகம்மது நபியின் இறைத்தூதர் பட்டத்திற்கான அத்தாட்சி எனவும் குரானைப் பற்றி இசுலாம் விளக்குகின்றது.முகம்மது நபி, தனது நாற்பதாவது வயது தொடங்கி இறக்கும் வரையிலான இருபத்தி மூன்று வருடங்கள குரானின் பல பகுதிகளை சிறுகச் சிறுக மற்றவர்களுக்கு கூறினார். அவை மனனம் செய்யப்பட்டும், எழுத்திலும் மற்றவர்களால் பாதுகாக்கப்பட்டது. அவரின் மறைவுக்குப் பின் அபூபக்கரின் ஆட்சி காலத்தில் சைத் பின் சாபித் என்பவரின் தலைமையில் குரானின் எழுத்துப் பிரதிகள் மற்றும் மனனம் செய்யப்பட்ட அத்தியாயங்களின் தொகுப்புகள் திரட்டப்பட்டன. பின் அவை உதுமான் காலத்தில் வரிசைக்கிரமமாக தொகுக்கப்பட்டு நகல் எடுக்கப்பட்டன. இந்த நகல்களே இன்றைய குரானின் மூலமாக உள்ளன.