வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புக் கட்டுரை/6

முத்தமிழ் என்பது இயல், இசை, நாடகம் என்னும் மூன்றாகும். இதில் இயற்றமிழ் பண்ணோடு புணர்ந்து தாளத்தோடு நடைபெறும்போது அது இசைத்தமிழாக உருவெடுக்கிறது. அத்தகைய தமிழிசை, தமிழனின் வாழ்வியலோடு பண்டு முதல் பின்னிப் பிணைந்து வந்திருக்கிறது. பழந்தமிழ் மக்கள் நுட்பமான இசைப்புலமையும், இசை இலக்கண அறிவும் பெற்றிருந்தனர். கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் எழுந்த நூல்களான தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் ஆகிய நூல்கள் இது பற்றிக் கூறுகின்றன. பழந்தமிழ் மக்கள் இயற்கையில் எழும் ஒலிக் கூறுகளை நுண்மையாக ஆராய்ந்தனர். அதனை ஒட்டி இனிமையான ஓர் இசை முறையை உருவாக்கினர். படிப்படியாகப் பண்படுத்திய அந்த இசை முறையைப் "பண்" என்று அழைத்தனர். வாழும் நிலத்திற்கேற்பப் பண்களை வகைப்படுத்தினர். நேரத்திற்குப் (காலத்திற்குப்) பொருந்த பண்கள் பாடினர். சுவைக்குத் தகுந்த பண்கள் பாடினர். பண்கள் 103 என்றும் வகுத்தனர்.