வலைவாசல்:கிறித்தவம்/கிறித்தவ நபர்கள்/3

தாவீது என்பவர், எபிரேய விவிலியத்தின்படி ஒன்றிணைந்த இஸ்ரயேல் அரசின் இரண்டாவது அரசர் ஆவார். மத்தேயு, லூக்கா நற்செய்திகளின்படி, இவர் யோசேப்பு, மரியா ஆகியோர் வழியில் இயேசு கிறிஸ்துவின் முன்னோர்களில் ஒருவர் ஆவார். இவர் சிறந்த பாடகராகவும், இசைவல்லுநராகவும், போர் வீரராகவும் திகழ்ந்தார். விவிலியத்தில் தாவீதைப் பற்றி அதிகமான தகவல்கள் உள்ளன. வழிதவறிய அரசர் சவுலை ஆண்டவர் புறக்கணித்தார்: "சவுலை அரசனாக்கியதற்காக நான் வருந்துகிறேன். ஏனெனில் அவன் என்னைப் பின்பற்றாமல் விலகிவிட்டான். என் வார்த்தைகளின்படி நடக்கவில்லை." (1 சாமுவேல் 15:11) ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்து போகச் செய்தார். "இவர்களையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை" என்றார் சாமுவேல். தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து, "உன் பிள்ளைகள் இத்தனை பேர்தானா? என்று கேட்க, "இன்னொரு சிறுவன் இருக்கிறான்: அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்" என்று பதிலளித்தார் ஈசாய். அதற்குச் சாமுவேல் அவரிடம், "ஆளனுப்பி அவனை அழைத்து வா, ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்" என்றார். ஈசாய் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம் "தேர்ந்துக் கொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்!" என்றார். உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். (1 சாமுவேல் 16:10-13). ஆண்டவரின் ஆவி சவுலை விட்டு நீங்க, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி அவரைக் கலக்கமுறச் செய்தது. ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி, சவுலின் மீது இறங்கிய போதெல்லாம் தாவீது யாழ் எடுத்து மீட்டுவார்; தீய ஆவியும் அவரை விட்டு அகலும்; சவுலும் ஆறுதலடைந்து நலமடைவார். (1 சாமுவேல் 16:14,23)