வலைவாசல்:விவிலியம்/சிறப்புக்கட்டுரை/5
கொல்கொதா (Golgotha) என்பது பழங்கால எருசலேம் நகரின் மதில்சுவர்களுக்கு வெளியே இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்ட இடத்துக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும். இது கல்வாரி (Calvary) அல்லது கபாலஸ்தலம் என்றும் புதிய ஏற்பாட்டில் அழைக்கப்படுகிறது. கொல்கொதா என்பது "குல்கல்தா" (Gûlgaltâ) என்னும் எபிரேயச் சொல்லின் ஒலியாக்கம் ஆகும். இச்சொல்லின் விளக்கமாக புதிய ஏற்பாட்டில் மண்டை ஓட்டு இடம் என்னும் தொடர் தரப்படுகிறது. இதே பொருள் தரும் கிரேக்கத் தொடர் Kraniou Topos (Κρανίου Τόπος) என்றும் இலத்தீன் தொடர் Calvariae Locus என்றும் அமையும். இலத்தீன் தொடரிலிருந்து Calvary என்னும் ஆங்கிலச் சொல்லும், கல்வாரி என்னும் தமிழ் ஒலிபெயர்ப்பும் பெறப்பட்டன.
புதிய ஏற்பாடு கொல்கொதா (கல்வாரி = மண்டை ஓட்டு இடம்) என்பதை ஒரு மலை என்றோ, குன்று என்றோ குறிப்பிடவில்லை. மாறாக இடம் என்று பொதுவாகவே குறிப்பிடுகிறது. ஆயினும் கி.மு. 333இலிருந்து அவ்விடம் ஒரு குன்று என்றும், கி.பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து ஒரு மலை என்றும் குறிப்பிடப்பட்டு வந்துள்ளது. இலத்தீன் மொழிபெயர்ப்பிலிருந்து கல்வாரி என்னும் பெயர் தோன்றியது. பல விவிலிய மொழிபெயர்ப்புகளில் அப்பெயரும் ஏற்கப்பட்டது. மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நான்கு நற்செய்தியாளர்களும் இயேசு கொல்கொதாவில் சிலுவையில் அறையுண்டு இறந்த தகவலைத் தருகின்றனர்.
கொல்கொதா எங்கே உள்ளது என்பது பற்றியும் பல கருத்துகள் உண்டு. மிகப் பாரம்பரியக் கருத்து கி.பி. 325ஆம் ஆண்டில் எழுந்தது. அந்த ஆண்டில் புனித ஹெலேனா என்பவர் இயேசு சிலுவையில் இறந்த இடத்தை அடையாளம் கண்டார். ஹெலேனா உரோமைப் பேரரசன் முதலாம் காண்ஸ்டண்டைன் என்பவரின் தாய் ஆவார். இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்திலிருந்து சில மீட்டர் தொலையில் இயேசுவின் கல்லறையையும் ஹெலேனா அடையாளம் கண்டார். அதோடு இயேசு அறையுண்டு இறந்த சிலுவையும் கண்டெடுக்கப்பட்டது. ஹெலெனாவின் மகன் மன்னர் முதலாம் காண்ஸ்டண்டைன் இயேசுவின் கல்லறை இருந்த இடத்தில் ஓர் அழகிய கோவிலைக் கட்டியெழுப்பினார். அது திருக்கல்லறைக் கோவில் (Church of the Holy Sepulchre) என்று அழைக்கப்படுகிறது