வல்லிபுர ஆழ்வார் கோவில்

வல்லிபுர ஆழ்வார் கோயில், இலங்கையின் வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள வல்லிபுரம் எனும் ஊரில் உள்ள பிரபலமான விஷ்ணு ஆலயம் ஆகும். இவ்வாலயத்தின் மூல மூர்த்தியாக விஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம் உள்ளது.

வல்லிபுர ஆழ்வார் கோவில் முகப்பு
வல்லிபுர ஆழ்வார் உற்சவ மூர்த்தி
வல்லிநாச்சியின் மடியில் தவழும் மாயவன்

அமைவிடம் தொகு

வல்லிபுர ஆழ்வார் கோவில் வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. துன்னாலை, புலோலி, வராத்துப்பளை, கற்கோவளம் ஆகிய கிராமங்களுக்கு அணி சேர்க்கும் முகமாக இக்கிராமங்களுக்கு மத்தியில் இக்கோவில் அமைந்துள்ளது. பருத்தித்துறையில் இருந்து கிட்டத்தட்ட 4 மைல் தொலைவில் இக்கோவில் உள்ளது. ஆர்ப்பரிக்கும் கடலோசை, வெள்ளை மணற்பரப்பு, பசுமையைக் கொடுக்கும் விருட்சங்கள் என்று இயற்கை அன்னை அரவணைக்கும் ஒரு கோவிலாக ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் விளங்குகிறது. வரலாற்றுப் பெருமை கொண்ட இவ்வாலயம் மூர்த்தி தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கமையப்பெற்ற புராதன தலமாகும்.

காரணப் பெயர் தொகு

வல்லிபுரம் என்ற பெயர் இக்கிராமத்திற்கு எவ்வாறு ஏற்பட்டது என்பது பற்றி பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் நாகர்களுடைய ஆட்சி கி.பி. 303 இலும் லம்பகர்ணர் ஆட்சி 556 இலும் முடிவுக்கு வந்தது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.இப்பகுதிகளில் குடியேறிய படை வீரர்களின் ஆதிக்கம் வளர்ச்சியடையத் தொடங்கியபோது வட மறவர்கள் ஆட்சி செய்த இடம் வடமராட்சி எனப்பட்டது. நூலாசிரியரான ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களின் கருத்துப்படி தொண்டை நாட்டின் வடக்கில் வசித்த மக்களில் ஒரு பகுதியினர் இங்கு குடியேறியதாகவும் அவர்கள் குடியேறிய பிரதேசத்திற்கு வடமராட்சி என்று பெயரிட்டதாகவும் தெரியவருகிறது. அக்குழுவின் தலைவனாக வல்லியத்தேவன் என்பவன் இருந்ததாகவும் அவனின் பெயரைக் குறிக்கும் முகமாக இக்கிராமத்திற்கு வல்லிபுரம் என்று பெயரிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது

வல்லி என்ற சொல்லுக்கு ஆயர்பாடி என்ற ஒரு கருத்தும் புரம் என்றால் கோவில் என்றும் பொருள் கொள்ள முடியும். எனவே வல்லிபுரம் என்பது ஆயர்பாடிக் கோவிலாகவும் கண்ணன் வளர்த்த இடமாகவும் கொள்ளப்படுகிறது.

ஆழ்வார் தொகு

ஆழ்வார் என்ற சொல் திருமாலையும் ஆழ்வான் என்ற சொல் சூரியனையும் குறித்து நிற்கிறது. வேத காலத்தில் சூரியனோடு தொடர்புடைய தெய்வமாக விஷ்ணு போற்றப்படுகிறார். இதன் காரணத்தாலும் வல்லிபுரநாதரை வல்லிபுர ஆழ்வார் என்று வழிபட்டிருக்கலாம். அது மாத்திரமல்லாமல் இலங்கையின் வட பகுதியை நாகர்கள் ஆட்சி செய்தபோது அவர்கள் நாகம், சூரியன் ஆகியவற்றை வழிபட்டதாகவும் அவர்கள் வசித்த பிரதேசங்களில் ஒன்றாக வல்லிபுரம் இருந்திருக்கலாம் எனவும் கருத இடமுண்டு.

சக்கர வழிபாடு தொகு

ஸ்ரீ வல்லிவுர ஆழ்வார் கோவிலின் மூலஸ்தானத்தில் சக்கரம் வைத்தே பூசை நடைபெறுவது வழக்கம். சூரிய வழிபாட்டிலும் வழிபாட்டுச் சின்னமாகச் சக்கரம் இடம்பெறுகிறது. இதே வழிபாட்டுச்சின்னம் பௌத்த மதம் ஆதிக்கம் பெற்ற காலத்தில் தர்ம சக்கரமாக மாறியதாகக் கூறப்படுகிறது. அதே நேரம் வைணவ குடியேற்றத்தால் திருமாலின் சக்தி வாய்ந்த சக்கர ஆயுதமாக இச்சக்கரம் பூஜிக்கப்படுகிறது.

சிங்கை நகர் தொகு

இராசதானியாக விளங்கிய சிங்கை நகர் எது என்பது பற்றி வரலாற்று ஆசிரியர்களுக்கிடையில் பல முரண்பாடுகள் உண்டு. சுவாமி ஞானப்பிரகாசரின் கருத்துப்படி வல்லிபுரப் பிரதேசமே இராசதானியாக விளங்கிய சிங்கை நகர் ஆகும்.ஆனால் அது நல்லூர் என்பது வேறு சிலருடைய கருத்தாகும். எது எப்படி என்றாலும் சிங்கை நகர் அலையெறியும் கடற்கரையோரத்தில்தான் அமைந்திருந்தது எனக்கூறப்படுகிறது.

வல்லிபுர ஆழ்வார் தொகு

வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்குரிய நிலத்தில் பழைய கட்டிடத்தின் அழிபாடுகளுக்கிடையில் 1936 ஆம் ஆண்டளவில் வல்லிபுரப் பொன்னேட்டுச் சாசனம் கண்டெடுக்கப்பட்டது.4 வரிகளைக் கொண்ட இச்சாசனம் பிராமி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள பியகுக என இடம் தற்காலத்திலுள்ள புங்குடுதீவுடன் அடையாளம் காணப்படுகிறது. எனவே வல்லிபுர பிரதேசமும் ஆழ்வார் கோவிலும் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுக்குரிய இடமாகக் கருதப்படுகின்றது.

ஐதீகக் கதை தொகு

தட்சண கைலாய மான்மியம் எனும் நூலின்படி ஆழ்வார் கோவிலின் ஐதீக வரலாறு அற்புதமானது. தற்போது இக் கோவில் தீர்த்த உற்சவம் நடைபெறும் வங்கக் கடல் பகுதியிலே அதிசயமான மச்சமொன்று துள்ளிக்குதித்து, ஆரவாரம் செய்து மக்களை அதிசயத்தில் ஆழ்த்தியது. கற்கோவள கடலோடிகள் அந்த மச்சத்தைப் பிடிப்பதற்கு எடுத்த முயற்சிகள் கை கூட வில்லை. இவ்வேளையில் வராத்துப் பளையைச் சேர்ந்த நாகசாபம் பெற்ற லவல்லி எனப்படும் மீனவப் பெண்ணான வல்லி நாச்சி பயபக்தியுடன் தவமிருந்தார். அவர் கனவில் தோன்றிய பகவான் சிலவற்றைக் கூறி மறு நாள் குறித்த இடத்திற்கு வருமாறு பணித்தார். மறு நாள் காலை அங்கு கப்பலில் உட்கார்ந்து பகவானின் திருநாமங்களை உச்சரித்தார். அப்போது அந்த மச்சம் கடலில் இருந்து அவர் மடியில் துள்ளிக் குதித்து அழகிய குழந்தையாக மாறியது. கண்ணன் உதித்தான் என ஆரவாரம் செய்த வலைஞர்கள் குழந்தையை பல்லக்கில் வைத்து தூக்கிச் சென்றனர். களைப்புற்ற மக்கள் ஓர் இடத்தில் பல்லக்கை வைத்து இளைப்பாறினர். பின்னர்பல்லக்கைத் தூக்க முயற்சி செய்தபோது பல்லக்கு மாயமாக மறைந்தது. சக்கரம் ஒன்று தோன்றியது. எனவே அம்மக்கள் அவ்விடத்தில் ஆலயம் ஒன்றை அமைத்து அச்சக்கரத்தை வழிபடத் தொடங்கினார்கள். இக்கதை ஐதீகக் கதையாகக் காணப்படுவதனால் அன்று தொட்டு இன்று வரை செவி வழியாகப் பேணப்பட்டு வருகிறது.

பிள்ளையார் வழிபாடு தொகு

வைஷ்ணவ ஆலயங்களிலும் அக்காலங்களில் பிள்ளையாருக்கே முதலிடம் கொடுக்கப்பட்டது. இதனால் ஆலமரம், அழகிய குளம், நெல் வயல்கள் என இயற்கையின் அரவணைப்பில் உள்ள குருக்கட்டு சித்தி விநாயகருக்குப் பூசை செய்த பின்னர் வல்லிபுர ஆழ்வாருக்கு பூசை செய்வது வழக்கமாகும்.

திருவிழாக்கள் தொகு

புரட்டாதி மாதம் பூரணைத் திதியில் தீர்த்த உற்சவம் நிகழக் கூடிய வகையில் 15 நாட்கள் திரு விழா நடைபெறும் 16 ஆம் நாள் கடலாடு தீர்த்த உற்சவம் இடம் பெறும் அடுத்த நாள் பட்டுத் தீர்த்தம் நிகழ்த்தப்படும். இக்கோவில் ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும். நாராயணனின் நரகாசுர சம்காரம் தீபாவளி தினத்தன்றும், மார்கழி மாதம் முழுவதும் காலையில் விசேட பூசைகள் நடைபெறும். ஞாயிற்றுக் கிழமையே வல்லிபுர ஆழ்வாருக்கு சிறப்பான நாளாகும். இங்கு விபூதியும் திருநாமமும் பிரசாதமாக வழங்கப்படுவது தனிச்சிறப்பாகும்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லிபுர_ஆழ்வார்_கோவில்&oldid=3675739" இலிருந்து மீள்விக்கப்பட்டது