வளருருமாற்றம்

வளருருமாற்றம் (Metamorphism) என்பது, வெப்பம், அமுக்கம், வேறு நீர்மங்கள் (திரவம்) உட்செல்லல் முதலியவை தொடர்பான மாற்றங்களால், ஏற்கனவே உள்ள பாறைகளில் திண்ம நிலையில் ஏற்படும் மீள்பளிங்காதல் (recrystallisation) எனலாம். இங்கே கனிமவியல், வேதியியல் மற்றும் படிகவுருவியல் (Crystallographic) மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

வெப்பநிலை மற்றும் அமுக்க உயர்வினால் உண்டாகும் வளருருமாற்றம், முன்நோக்கிய (prograde) வளருருமாற்றம் எனவும், வெப்பநிலை, அமுக்கம் என்பவை குறைவதன் மூலம் உண்டாகும் வளருருமாற்றம் பின்நோக்கிய (retrograde) வளருருமாற்றம் எனவும் அழைக்கப்படுகின்றது.

வளருருமாற்றத்தின் எல்லைகள்

தொகு

வளருருமாற்றத்திற்கான வெப்பநிலைக் கீழ் எல்லை 100 - 150 °C ஆகும். அமுக்கத்தின் கீழ் எல்லை தொடர்பில் உடன்பாடு எதுவும் இல்லை. வளியமுக்கத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் வளருருமாற்றங்கள் அல்ல என ஒருசாரார் வாதிக்கின்றனர். எனினும் சிலவகை வளருருமாற்றங்கள் மிகக் குறைந்த அமுக்க நிலைகளிலும் ஏற்படக்கூடும்.

வளருருமாற்ற நிலைகளின் மேல் எல்லைகள் பாறைகளின் உருகும் தன்மைகளில் தங்கியுள்ளன. வெப்பநிலை எல்லை 700 தொடக்கம் 900 °C வரை ஆகும். அமுக்கம் பாறைகளின் சேர்மானங்களில் தங்கியுள்ளது. மிக்மட்டைட்டுகள் என்னும் பாறைகள் வளருருமாற்றத்திற்கான மேல் எல்லை நிலைகளில் உருவாகின்றன. இவை திண்மநிலை மற்றும் உருகல் நிலை ஆகிய இரண்டு நிலைகளுக்கும் உரிய அம்சங்களைக் காட்டுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வளருருமாற்றம்&oldid=2741123" இலிருந்து மீள்விக்கப்பட்டது