ஒரு மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் முயற்சியில் ஈடுபடும்போது இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும். அவ்வாறின்றி இலக்கணமுறையுடன் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும். வழாநிலை ஏழு வகைப்படும். இலக்கண முறையின்றிப் பேசினாலும் எழுதினாலும் கூட சில இடங்களில் இலக்கணமுடையதைப்போல வழாநிலையாக ஏற்றுக்கொள்ளும் முறைக்கு வழுவமைதி என்று பெயர்.

வழாநிலை வகைகள்

தொகு
  • திணை வழாநிலை,
  • பால்வழாநிலை,
  • இடவழாநிலை,
  • காலவழாநிலை,
  • வினாவழாநிலை,
  • விடைவழாநிலை,
  • மரபுவழாநிலை

என வழாநிலைகள் ஏழு வகைப்படும்.

1. திணைவழாநிலை

தொகு

உயர்திணை, அஃறிணை ஆகிய இரு திணைகளும் மயக்கமின்றி வருவது திணைவழாநிலை ஆகும்.

உயர்திணை தொடர்ந்த பொருண்முத லாறும் அதனொடு சார்த்தி னத்திணை முடிபின.[1]

சான்று

தொகு

1. கண்ணன் நல்லன். 2. யானை கரியது.

2. பால்வழாநிலை

தொகு

ஐவகைப்பாலும் மயக்கமின்றி எழுதுவதும் பேசுவதும் பால்வழாநிலை ஆகும். அந்தந்தப் பாலுக்குரிய எழுவாய்கள் அந்தந்தப் பாலின் பயனிலையைக் கொண்டு முடிதல் வேண்டும்.

திணைபால் பொருள்பல விரவின சிறப்பினும் மிகவினு மிழிபினு மொருமுடிபினவே..[2]

சான்று

தொகு

1. வளவன் இனியன். 2. கோதை நல்லாள். 3. புலவர்கள் வேந்தர்களைப் பாடினார்கள். 4. யானையின் கோடு கூரியது. 5. பறவைகள் பறந்தன.

3. இடவழாநிலை

தொகு

மூவகை இடமும் மயக்கமின்றி எழுதுவதும் பேசுவதும் இடவழாநிலை ஆகும். ஓர் இடத்திற்கு உரிய எழுவாய் அதே இடத்திற்குரிய பயனிலையைக் கொண்டு முடிதல் இடவழாநிலையாகும்.

சான்று

தொகு

1. நான் சென்றேன். 2. நீ வந்தாய். 3. மாணவர்கள் தமிழைப் படித்தார்கள்.

4. காலவழாநிலை

தொகு

முக்காலமும் மயக்கமின்றி எழுதுவதும் பேசுவதும் காலவழாநிலை ஆகும். ஒரு தொடரில் எக்காலப்பெயர் இடம் பெறுகிறதோ அக்காலத்திற்குரிய பயனிலையையே கொண்டு முடிதல் வேண்டும்.

சான்று

தொகு

1. நான் நேற்று வந்தேன். 2. நீவிர் இன்று வருகின்றீர். 3. மாணவர்கள் நாளை நாட்டை ஆள்வார்கள்.

5. வினாவழாநிலை

தொகு

அறுவகை வினாக்களும் மயக்கமின்றி எழுதுவதும் பேசுவதும் வினாவழாநிலை ஆகும். வினாவில் இடம்பெறும் எழுவாயின் திணை, பால் ஆகியவை மாறாமல் வினாப் பயனிலை வருவதே வினாவழாநிலை ஆகும். திணைபால் பொருள்பல விரவின சிறப்பினும் மிகவினு மிழிபினு மொருமுடி பினவே..[3]

சான்று

தொகு

1. திருக்குறளை இயற்றியவர் யார்? 2. பருப்பு உளதோ வணிகரே?

6. விடைவழாநிலை

தொகு

ஒரு வினாவிற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகக் குறிப்பாலோ ஏற்ற விடை உரைப்பது விடைவழாநிலை ஆகும். தம்பால் இல்லது இல்லெனின் இனனாய் உள்ளது கூறி மாற்றியும் உள்ளது சுட்டியும் உரைப்பர் சொற்சுருங்குதற்கே ..[4]

சான்று

தொகு

1. திருக்குறளை இயற்றியவர் யார்? என்னும் வினாவிற்கு திருவள்ளுவர் என விடையளிப்பது. 2. பருப்பு உளதோ வணிகரே? என்னும் வினாவிற்கு பருப்பு உள்ளது, பருப்பு இல்லை, பயிறு உள்ளது போன்ற விடைகளும் விடைவழாநிலையே. இங்கு பருப்பு உள்ளதா? என்னும் வினாவிற்கு பயிறு உள்ளது என விடையளிப்பினும் அதுவும் வழாநிலையே ஆகும். அவ்விடை பருப்பு இல்லை என்னும் விடைப் பொருளை மறைமுகமாக உணர்த்தியது. இது இனமொழி விடையாகும். இவ்வகைவிடையை இலக்கணநூலார் இறைபயத்தல் என்னும் வகையில் அடக்குவர்.

7. மரபுவழாநிலை

தொகு

முன்னோர் ஒரு பொருளை எச்சொல்லால் வழங்கினரோ அவ்வாறே வழங்குவது மரபு ஆகும். மரபுத்தொடர்கள் மயக்கமின்றிப் பேசுவதும் எழுதுவதும் மரரபு வழாநிலை ஆகும்.

சான்று

தொகு

1. சேவல் கூவியது. 2. அம்பு எய்தான். 3. குருவிக் கூடு

வெளியிணைப்புகள்

தொகு

தமிழ் இணையக் கல்விக் கழகம்

  1. நன்னூல் -சூத்திரம் 377
  2. நன்னூல் -சூத்திரம் 378
  3. நன்னூல் -சூத்திரம் 387
  4. நன்னூல் -சூத்திரம் 406
"https://ta.wikipedia.org/w/index.php?title=வழாநிலை&oldid=3734338" இலிருந்து மீள்விக்கப்பட்டது