வழிப்படு ஏவுகணை

வெடிக்கும் வரை கட்டுபடுத்தப்படும் ஏவுகணை

வழிப்படு ஏவுகணை (guided missile) என்பது, இலக்கு நோக்கி எறியப்படும் ஏவுகணையை அல்லது வெடிகுண்டை கட்டுப்படுத்தும் நுட்ப அறிவியல் குறித்தவை ஆகும். தற்போதுள்ள பெரும்பான்மையான ஏவுகணைகளில் இந்த தொழில் நுட்பம் பல்வகையில் பொதிந்துள்ளன. அதனால் எறியப்படும் நொடியிலிருந்து, அதன் இலக்கைத் தொடும் நொடி வரை, அதன் திசையை மாற்றி அமைக்க இயலும் அல்லது செயல் இழக்கச் செய்ய இயலும். எடுத்துக்காட்டாக, போப்யே ஏவுகணையை[1] இதனை அல்கொய்தா அமைப்பின் தலைவராக இருந்த பின்லேடனைத் தேட மிகவும் பயன்படுத்தினர்.[2] இத்தகைய திறன் உள்ள ஏவுகணைகளை வடிவமைக்க கணினிப் பொறியியல், ஏவுகணையியலின் முக்கிய பிரிவு ஏடிஆர் (Automatic target recognition[3]) நுட்பம் பெரிதும் உதவுகிறது. பொதுவாக, ரேடியோ அலைகளால் படைக்கலங்கள் கட்டுப் படுத்தப்பட்டாலும், அதில் ஒரு குறையுள்ளது. கருவியைக் கட்டுப் படுத்தும் ரேடியோ அலைகளையொத்தவற்றை எதிரிகளும் பரப்பி, இவற்றைப் பயனின்றிச் செய்து விடலாம். இதைத் தவிர்க்க, வெப்பத்தை அளவிடும் மிக நுட்பமான கருவிகளால், படைக்கலத்தின் போக்கைக் கட்டுப்படுத்த முயற்சியும், படக்கருவி அமைந்த தொழில்நுட்பமும் வளர்ந்து வருகிறது.

'V1' என்ற செருமானிய வழிப்படு ஏவுகணை, 1944

வகைகள் தொகு

 
குண்டு போடும் வானூர்தி
 
நகரும் திறன் உள்ள வழிப்படு ஏவுகணை(MOABAFAM)
 
நகரும் திறன் உள்ள வழிப்படு ஏவுகணை-(MGM-5)

பொதுவாக இரண்டு விதமான ஏவுகணைத் தொகுதிகள் இருப்பதாகக் கொள்ளலாம். ஒன்று, நகரும் திறன் அற்றவை என்றும், மற்றொன்று நகரும் திறன் உள்ளவை என்றும் அழைக்கப்படுகின்றன.

நகரும் திறன் அற்றவை தொகு

இவை சாதாரணமான சறுக்கு விமானத்தை ஒத்த வடிவில் இருக்கும். ஏவுகணையை இலக்கினருகே கொண்டு சென்று வீசுவர். தரையிலுள்ள ரேடார், விமானம் வருவதை அறிந்து, பீரங்கியை இயக்கும். விமானம் என்ற இடம் வரும் போது, ஏவுகணை அதன் மீது வெடிக்கும். தானியங்கிக் கருவிகளோ அல்லது இதைக் கொண்டு சென்ற விமானத்திலுள்ள கருவிகளோ, இலக்கை நோக்கிச் செல்லும்படியான நுடபத்தினைப் பெற்று இருக்கும். உதாரணமாக, அமெரிக்கர்கள் பயன்படுத்திய, சிறு விமானத்தின் வடிவில் அமைக்கப்பட்ட, 'வௌவால்'[4] என்ற போர்க் கருவியைக் கூறலாம். குட்டையான இறக்கைகளும், வாலில் உயர்த்திகளும், சுக்கானும் இதில் இருந்து, செங்குத்தாகச் சறுக்கிச் செல்லும். இதன் உடலில் வைக்கப்பட்டிருந்த வெடி மருந்து, இலக்கைத் தொட்டவுடனோ அல்லது சிறிது தாமதமாகவோ, வெடிக்குமாறு, இதிலுள்ள திரி அமைந்திருக்கும். இத்தகைய கருவிகளின் போக்கைக் கட்டுப்படுத்த நுட்பம் அமைக்கப்பட்டிருக்கும். 'வௌவால்' ஏவுகணை, ரேடாரினால் செலுத்தப்படுகிறது. விமானத்திலிருந்து வௌவாலை விடுவித்ததும், அதிலுள்ள ரேடார், 'அலைபரப்பி' இயங்கத் தொடங்கி, அதிலுள்ள திரையொன்றில் இலக்கின் பிம்பத்தைக் காட்டும். இப்பிம்பம் திரையின் மையத்தில் இருக்குமாறு, அதிலுள்ள தானியங்கிச் சாதனங்கள் அதைக் கட்டுப்படுத்தும். இதனால், இலக்கு எப்படித் திரும்பி, தப்பிச்செல்லப் பார்த்தாலும் 'வௌவால் ஏவுகணை', அதற்கேற்றவாறு தனது போக்கை மாற்றிக்கொண்டு, அதைத் தாக்கும் திறனைப் பெற்றிருந்தது.

நகரும் திறன் உள்ளவை தொகு

இக்கருவிகள் மிகக் கொடூரமானவையும், முக்கியமானவையும் ஆகும். இவற்றை இலக்கின் அருகே கொண்டு போய் வீச வேண்டியதில்லை. இவை தானாகவே, வானத்தில் பறந்து இலக்கை அடைகின்றன. பொதுவாக, இவை வானியக்க முறையில், ஒலியினும் வேகமாகப் பறக்கும் திறன் உள்ளவை. இவை மிக உயரமாக மேலே சென்று, பல நூறு கிலோமீட்டர்கள் வேகத்துடன் கீழிறங்குகின்றன. ஆகையால், இவற்றைத் தடுப்பது எளிதன்று. எடுத்துக்காட்டாக, கார்காயில்' (Gargoyle)[5][6] என்ற ஏவுகணை, மணிக்குச் சுமார் 650 கிலோமீட்டர் வேகத்தில் கீழிறங்கி, இலக்கைத் தாக்கும். இதன் வாலில், மிகப் பிரகாசமான பந்தம் போன்ற அமைப்பு இருக்கும். இதன் உதவியால், நல்ல சூரிய வெளிச்சத்திலும், இது உள்ள இடத்தை நெடுந் தொலைவிலிருந்து கண்டு, இதன் போக்கை, ரேடியோ அலைகளால் கட்டுப்படுத்தலாம். வெடிகுண்டு போன்ற வடிவுள்ள 'ரேசான்' (RAzOn)[7] என்ற அமைப்பொன்றும், பாலங்கள், வீடுகள் போன்ற சிற்றிலக்குக்களை, கண்டு தாக்கும் திறன் பெற்றிருக்கும்.

மேற்கோள்கள் தொகு

  1. https://www.globalsecurity.org/wmd/world/israel/popeye-t.htm
  2. https://www.telegraph.co.uk/news/worldnews/asia/afghanistan/1365479/Intelligent-missile-used-against-bin-Laden-caves.html
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-01-05. பார்க்கப்பட்ட நாள் 2020-01-08.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-07-21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-08.
  5. https://www.boeing.com/history/products/gargoyle-missile.page
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-07-21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-07.
  7. https://www.shapeways.com/product/9E4D4MG2U/vb-3-quot-razon-quot-bomb
"https://ta.wikipedia.org/w/index.php?title=வழிப்படு_ஏவுகணை&oldid=3773839" இலிருந்து மீள்விக்கப்பட்டது