வானவில் பாலம் (டெக்சாசு)
டெக்சாசு வானவில் பாலம் தென்மேற்கு டெக்சாசில் நேச்சசு ஆற்றுக்குக் குறுக்கே சபைன் ஏரிக்கு அண்மையில் ஆற்றின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஊடு சட்டகப் பாலம் ஆகும். ஆற்றின் தென்மேற்குக் கரையில் அமைந்த செபர்சன் கவுண்டியில் உள்ள ஆர்த்தர் துறைமுகத்தை ஆற்றின் வடகிழக்குக் கரையில் ஒரேஞ்ச் கவுண்டியில் உள்ள பிரிட்சு நகரத்துடன் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 87ம், மாநில நெடுஞ்சாலை 73ம் இந்தப் பாலத்தினூடாவே செல்கின்றன.
இப்பாலத்தின் கட்டுமான வேலைகள் 1936ல் டெக்சாசு மாநில நெடுஞ்சாலைகள் திணைக்களத்தின் வழிகாட்டலில் தொடங்கின. இப்பாலம் கப்பல் போக்குவரத்துக்குத் தடையாக அமையக்கூடும் என்ற ஆற்றின் மேல்நீரோட்டப்பகுதி நகரமான பியூமொன்டின் கவலையைக் கணக்கில் எடுத்து இப்பாலத்தின் முதன்மை அகல்வு 680 அடி (210 மீ) ஆக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டது. அத்துடன், இதன் கீழ் அமையும் நிலைக்குத்து வெளி 177 அடி (54 மீ) ஆகவும் இருந்தது.[1] இந்த வெளி அக்காலத்தில் மிக உயரமான யூ.எசு.எசு பட்டோக்கா எனப்படும் ஐக்கிய அமெரிக்கக் கடற்படைக் கப்பல் இப்பாலத்தின் கீழாகப் போக்குவரத்துச் செய்யப் போதுமானதாக இருக்கும் வகையிலேயே வடிவமைப்புச் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் குறித்த கடற்படைக் கப்பல் என்றுமே இதனூடாகச் செல்லவில்லை.
வானவில் பாலம் 1938 செப்டெம்பர் 8ம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. தொடக்கத்தில் ஆர்த்தர் துறைமுகம் - ஒரேஞ்சுப் பாலம் எனப் பெயரிடப்பட்ட இப்பாலம் பின்னர் 1957ல் தற்போதைய பெயரைப் பெற்றது. 1996ல் இது வரலாற்று இடங்களுக்கான தேசிய பதிவேட்டுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
முன்னாள் படையினர் நினைவுப் பாலம்
தொகு1988ல் ஒரு வடந்தாங்கு பாலமான முன்னாள் படையினர் நினைவுப் பாலத்தின் கட்டுமான வேலைகள் தொடங்கி, 8 செப்டெம்பர் 1990ல் திறக்கப்பட்டது.[2] இப்பாலம் வானவில் பாலத்துக்குச் சமாந்தரமாக அமைக்கப்பட்டது. இதன் நிலைக்குத்து வெளி 143 அடி (43.5 மீ). இது வானவில் பாலத்திலும் உயரம் குறைந்தது..[3]
புதிய பாலம் கட்டி முடிந்த பின்னர், வானவில் பாலம் திருத்த வேலைக்காக மூடப்பட்டது. 1997ல் மீண்டும் திறக்கப்பட்டபோது,[4] மேற்கு நோக்கிச் செல்லும் போக்குவரத்துக்கு மட்டுமேயான ஒருவழிப் பாதையாக ஆக்கப்பட்டது. புதிய பாலம் கிழக்கு நோக்கிய போக்குவரத்துக்குப் பயன்பட்டது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-10-07. பார்க்கப்பட்ட நாள் 2006-10-07.
- ↑ "History of Our Bridges". City of Bridge City. Archived from the original on 2013-07-26. பார்க்கப்பட்ட நாள் 2013-06-14.
- ↑ "Bridge City Texas". Ohwy.com. பார்க்கப்பட்ட நாள் 2011-08-19.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-01-10.
- ↑ https://web.archive.org/web/20060322150854/http://www.dot.state.tx.us/mcd/onestop/const/beaumont.htm