தமிழ் ஒளியின் நூற்றாண்டு சிறப்புக் கவியரங்கம்

பாரதி நிலவு

தாசன் கலங்கரை

பயணித்த தோணி –நீ


போலி சுருட்டர்களை

இலக்கியப்  பிரச்சரப் பீங்கியால்

சுட்டுப் பொசுக்கியவன்

உழைப்பாளிகளின் குருதி பருகும்

குருட்டறிவு அட்டைப்பூச்சிகளை நசுக்கியவன்

அரைக்காசுக்கு  அல்லாடியவர்களுக்காகப் பாடியவன்

அன்னைத் தமிழ்மொழி

ஆனந்தக் கூத்தாடி வழிபல தேடியவன்

இன்னலுற்று இடர்களைப் பாடிய

பைந்தமிழ்ப் புலவன் தமிழ் ஒளி

பாண்டிச்சேரியவன்-

சிறுபுல்லை

அல்லல் படுத்தும்

ஆதிக்க பனியை

அப்புறப்படுத்த உதித்த

பொதுவுடைமைச் சூரியன்;


கைகட்டியே பழக்கப்பட்ட –எங்கள்

சொற்களுக்கு பரிவட்டம் கட்டிவிட்டவன்

பாசாங்கு செய்துகொண்டு

பாசிச தூசுகளைப் படரவிடாமல்

தட்டி விட்டவன்:


வனாந்திர காட்டிடையே

அனாதைக் குயிலாய்-நாங்கள்

கூவிய போது

இலக்கிய அடைக்கலம் கொடுத்தவன்

ஆதிசனங்களின் அறியாமையை எடுத்தவன்.


ஆஸ்ரம வழக்குகளையெல்லாம்

அரச மரத்தடி அய்யன் புத்தனை வைத்துத் தீர்த்துக்கொண்டாய்- உன்

அன்பெனும் அக்கறை காந்தத்தால்

எங்களை ஈர்த்துக்கொண்டாய்;


நந்தவனத்து மீன்களின்

நாட்டியத்தை ரசிக்காத உன்கண்கள்;

புழுதி சேற்றின்

புண்களுக்கு அல்லவா ஒத்தடமிட்டு மகிழ்கின்றன.


கருத்தியல் புறாக்களை

காயமுண்டாக்கும்

கருட குமாரர்களுக்கு

நீயும் தப்பவில்ல.


சாதிமத வெயில் பட்டு

கருத்துப்போன தமிழர்களை -உன்

கந்தகப் பாட்டுக்களால்

சிவக்கச் செய்தாய்.

வேதாந்த நரிகளின்

வேட்டைக்காடா தமிழ்நாடு?

சித்தாந்த சிறுத்தைகள்

சுற்றித்திரியும் போது.


பட்டத்து அரசரின் பரிசில் பெற்று

புகழ் பரணி பாடாமல்

பாட்டாளி வர்க்கத்தார் வாழ்வை

பகலாக்க ஓய்விலாமல் சுழன்றவன் –நீ;


காலத்தின் கோரமுகத்தை

காலாகாலத்திற்கும் எடுத்துக்காட்டுகிறது

உனது படைப்புகள்

மகிழ்கிறோம்.


தலைமுறை பலகடந்தும்

தறுதலைகளின்  அட்டகாசம் கண்டு

வருந்துகிறோம்- எங்க

திருந்துகிறோம்.


தெருவுக்கு வெளியவே தேரை நிறுத்துகிறான்

குடிசையைக் கொளுத்துகிறான்

தண்டவாளத்தில் காதல் உடலைச் சிதைக்கின்றான்

அன்றாடச் செய்திகளில் ஆணவப் படுகொலையை அரங்கேற்றம் செய்கின்றான்.

எங்கள் இரத்தக்குருதியில்

உடல் வளர்க்கும் ஓநாய்களுக்கு

எங்கே தெரியப்போகிறது

எங்கள் வேதனை.


வரலாறுகள் தின்றுவிட்ட

ஏப்பங்களை அணுகிப்பார்த்தால்

சில  வடுக்களின் ஈரத்தை உணராம்


காலத்தின் இருப்பை

காதலிப்பவர்களால்

காலத்தின் இயல்பை

காதலிக்க முடியாது.


வியர்வை முத்துகளை விளையச்செய்யும்

உழைப்பாளர்களின் உடலல்ல –அது

சுறுசுறுப்புகளின் கடல்

உற்சாகத்திற்கு களைப்பு எழுதும் மடல்.


காலத்தீவின் ஓரங்களில்

கரையொதுங்குகின்றன

நீந்தி கடக்க நினைத்த வாழ்க்கை.


நண்பர்களே

சாமக்கோடாங்கியின்

குறிகளை

காது கொடுத்து

கேட்பதில்லை பகல்.

-வாலிதாசன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலிதாசன்&oldid=4146823" இலிருந்து மீள்விக்கப்பட்டது