விக்கிப்பீடியா:உங்கள் முதலாவது கட்டுரை
செம்பியன்பற்று மானியவளை முருகன் ஆலய சரித்திரம்
இலங்கையில் வடமாகாணத்தின் தென்கிழக்கே வயல் வெளிகளையும் கடலையும் கொண்டுள்ள வடமராட்சி கிழக்கானது மருத நிலமும் நெய்தல் நிலமும் ஒருங்கே இணையப் பெற்ற கிராமமாக செம்பியன்ப்பற்று திகழ்கின்றது. சோழ சிற்றரசன் செம்பியன் ஆண்டு வந்ததால் இவ் ஊருக்கு செம்பியன்ப்பற்று எனப் பெயர் வந்துள்ளது. சோழ அரசனின் ஆட்சி காலத்தில் அரசபணியாளர்கள் பலர் அங்கு வாழ்ந்துள்ளார்கள். அங்கு வாழ்ந்த கந்தப்பர் அவர்களின் மூதாதயர்கள் வாழ்ந்து வந்த நிலப் பகுதி அரசனால் மானியமாக வழங்கப்பட்டதால் மானியவளை என்ற பெயர் பெற்றது என முன்னோர்கள் நம்புவதாக அறியப் படுகின்றது. அதில் ஒரு பகுதியில் வசித்துவந்த தந்தையாருடன் (பெயர் தெரியவில்லை ) மகன் கந்தப்பரும் உள்ளூரில் விவசாயம் செய்து அவற்றை வன்னியில் கொண்டு சென்று வாணிபம் செய்து வந்தனர். அந்தக் காலத்தில் மாட்டு வண்டில் போக்குவரத்து நடைபெற்று வந்துள்ளது. அப்படி வியாபாரம் செய்ததனால் தான் ஹொரவப்பொத்தானையிலுள்ள எல்லா பிரதான வீதிகளிலும் உள்ள அநேகமான கடைகள் மற்றும் போலீஸ் நிலையம் ஆகியவை எமது உறவினர்களுக்கு சொந்தமாக இருந்தது. இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரங்களால் பலரும் அவற்றை ஒவ்வொன்றாக விற்று விட்டனர். எனினும் இன்னமும் சில இன்றும் இருக்கின்றன. இவர்கள் கதிர்காமம் முருகன் கோவில் தீர்த்த திருவிழாவிற்கு மாட்டு வண்டியில் வழமையாக போய் வரும்போது தமது ஊராருக்கும் உறவினர்களுக்கும் கொடுப்பதற்காக பல துணிப் பைகளில் திருநீறு கொண்டுவருவார்கள். அப்படி ஒருமுறை திருநீறு கொண்டு வந்த போது அதில் ஒரு பைக்குள் வேல் ஒன்று இருந்துள்ளது. அந்த வேலை ஒரு இடத்தில் வைத்து வழிபட்டு வந்துள்ளனர். (ஆதாரம்: செல்வமலர் அவர்களுக்கு அப்பம்மா சின்னத்தங்கம் கூறியது)
1833,1834 ஆண்டுகளில் செம்பியன்பற்று பகுதியில் பெரியம்மை நோய் பரவி மிகவும் அதிகமான மக்கள் மரணித்ததுடன் பசி பட்டினி தாண்டவமாடிய வேளையில், (ஆதாரம்: Martyn 's notes of Jaffna) அவ் ஊரைச் அனைவரும் நோய் வாய்பட்டவர்களையும் மற்றும் சொத்துக்கள் முழுவதையும் அப்படியே விட்டு விட்டு வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்தனர். இலங்கையைத் தாக்கிய பெரியம்மை தொற்று நோய் நாட்டின் பாதி மக்களை அழித்தது என்றும் பெரியம்மை நோய் வந்தவர்களை உயிருட்டன் புதைத்த சம்பவங்களும் இடம்பெற்றதாக The History of Smallpox Epidemics in Sri Lanka என்னும் நூலில் T.M. Zameer-Careem என்பவர் குறிப்பிடுகின்றார். தடுப்பூசி முதன்முதலில் 1886 இல் கட்டாயப்படுத்தப்பட்டாலும், 28 ஆண்டுகள் மருத்துவத் துறையில் ஏற்பட்ட சிக்கல்களால் நடைமுறைப் படாததால் இந்த நோய் நாடு முழுவதும் பரவியது. என Ceylon transmission: two case studies என்று https://worldakkam.com/ இல் Uditha Devaprya குறிப்பிடுகின்றார்.
இப்படி இடம் பெயந்தவர்களில் கந்தப்பரின் தந்தை குடும்பத்தினர் மற்றும் அவரது பிள்ளைகள் சீனியர் சின்னையா மற்றும் மகள் (பெயர் தெரியவில்லை) ஆகியோரும் செம்பியன்பற்றிலிருந்து வேறு பலரும் குடிபெயர்ந்து தும்பளையில் நிரந்தரமாகக் குடியேறினர். இவர்களின் உறவினர்களில் கந்தப்பரின் (மகளின் மகள்) பேத்தி அன்னப்பிள்ளையின் கணவர் ஆழ்வார் என்பவர் தான் கடைசியாக குடிபெயர்த்துள்ளதாக அறியப்படுகின்றது. இவர்களது உறவினர் அல்லாத தும்பளை மேற்கில் வாழ்பவர்களில் அனேகமானோரின் பரம்பரையும் செம்பியப்பற்று ஆகும். இதற்கு பல சான்றுகள் உள்ளன. (ஆதாரம்: ரகுவரன் எழுதிய ஊரும் வாழ்வும் தும்பளைக் கிராமம் பற்றிய ஆவணம்)
கந்தப்பர் தம்பதிகளின் பிள்ளைகளான சீனியர் சின்னையா மற்றும் மகள் (முருகேசு, சின்னத்தம்பி,செல்லம்மா, சோதிமுத்து, அன்னப்பிள்ளை,கந்தசாமி ஆகியோரின் தாய்) அனைவரும் தும்பளையில் வாழ்ந்து வந்தனர். சீனியருக்கு நான்கு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் இருந்துள்ளார்கள். சிறிது காலத்தின் பின் சீனியர் நோய்வாய்ப்பட்டு மரணமானார். சீனியரின் மனைவியின் பெயர் சின்னத்தங்கம் ஆகும். சின்னத்தங்கதின் மூத்த மகன் தம்பையா சிறு குழந்தையாக இருந்தபோது அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படுள்ளது. பல வைத்தியர்களாலும் குணப்படுத்த முடியாத நிலையில், ஒரு சோதிடரை நாடிய போது அவர் சீனியரின் பரம்பரையினரால் வணங்கப்பட்ட கோவிலை அல்லது தெய்வத்தை கைவிட்டதால் இந்த நோய் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். இதை அறிந்த சின்னத்தங்கம் நோய்வாய்பட்ட குழந்தையையும் தூக்கிக்கொண்டு 16ம் கட்டையடியில் (மைல்கல்) இருக்கும் செம்பியன்ப்பற்று மானியவளைக்குச் சென்று முன்னர் வழிபட்ட இடத்திற்குச் சென்று பார்த்த போதுஅங்கு எதுவுமே இருக்கவில்லை. அவர் ஒரு இளநீர் தேங்காயை வைத்து வணங்கி அதே இடத்தில கோவில் கட்டுவதாக சபதம் செய்து திரும்பியுள்ளார். அதன் பின்னர் அவரின் மகன் குணமாகியுள்ளார். (ஆதாரம்: கணேஷரட்ணம் அவர்களுக்கு அம்மம்மா சின்னத்தங்கம் கூறியது) இந்தச் சம்பவம் 1910ம் ஆண் டளவில் இடம்பெற்றது. அதன் பின்னர் இந்த ஆலயம் சின்னத்தங்கம் அவர்களால் களிமண்ணால் கட்டப் பட்டது. சரியான வருடத்தை அறிந்து கொள்ள முடியவில்லை
1942 ஆண்டுகளில் இந்தக் கோவில் களிமண்ணால் கட்டப்பட் டு பனை ஓலையால் வேயப்படட ஒரு சிறு குடிலில் ஒரு அம்மிக்குழவியைச் சுற்றி வேல்களை வைத்து கும்பிடுவதை கணேஷரட்ணம் லலிதா சிவஞானசுந்தரம் செல்வமலர் தயாநிதி குலராஜசிங்கம் அமிர்தா (மேசி) முத்துமலர் போன்ற தற்போதுள்ள மூத்தவர்கள் பார்த்திருக்கிறார்கள். எல்லா வேல்களையும் ஒரு ஓலைப் பெட்டியில் முருகேசர் வீட்டில் வைத்திருப்ப்பார். அவற்றில் ஒரு தங்கத்திலான வேலும் இருந்தது. சந்திரசேகரம் வருடாந்தப் பூசை நேரங்களில் அவற்றை கோவிலுக்கு எடுத்துப் போவார். வழமையாக தம்பையா பூசை செய்வார்.
இப்போதுள்ள கல்லால் கட்டப்பட்ட கோவில் 1953 ம் ஆண் டின் முற்பகுதியில் சின்னத்தங்கம் அவர்களால் கட்டப்பட்டது. அவர் தனது பிள்ளைகள் சகோதரர்களிடம் நிதி சேர்த்து இதனைக் கட்டிமுடித்தார். பலர் நிதிஉதவி செய்ய முன்வந் ததால் நிதி சேர்ப்பது பெரிய கஷ்டமாக இருக்கவில்லை. சின்னத்தங்கம் தனது சகோதரி சின்னாச்சிப்பிள்ளையின் மருமகன் விநாசித்தம்பியையும் அழைத்துக்கொண்டு அங்கு சென்று கட்டி முடித்தார். வினாசித்தம்பி அந்தக் காலத்தில் மிகுந்த செல்வந்தர். தனது வியாபாரத்தை தனது மூத்த மகனிடம் கொடுத்துவிட்டு கட்டிட வேலையாட்களை கூட்டிக்கொண்டு சின்னத்தங்கதுடன் போய் அங்கேயே தங்கியிருந்து மிக்க சிரமத்துடன் இந்தக் கோவிலைக் கட்டினார்கள். அந்தக் காலத்தில் கோவிலுக்கு கிட்ட வாகனங்கள் செல்ல முடியாது. 16ம் மைல் கல்லிலிருந்து அனைத்துக் கட்டிடப் பொருட்களும் தூக்கிக் கொண்டு பாதி வழி வயல் சேற்றுக்குள்ளாலும் மிகுதி பாதி சுடு மணலுக்குள்ளாலும் செல்லவேண்டும். அத்துடன் அப்போது கோவில் கிணறு இருக்கவில்லை. ஒவ்வொரு வாளி தண்ணீரும் அந்த ஊர் விதானையார் வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்டது. கடுமையான வெய்யில் காரணமாக பனை ஓலைகளை பாதைக்குப் போட்டு நடந்து வந்தார்கள். இப்படிக் கஷ்டப்படுத்தான் இந்தக் கோவில் கட்டி முடிக்கப்பட்டது.(ஆதாரம்: கணேஷரட்ணம் அவர்களுக்கு அம்மம்மா சின்னத்தங்கம் கூறியது) சின்னத்தங்கம் பலமுறை கதிர்காமத்திலுள்ள முருகன் ஆலயத்திற்கு போக முயற்சித்தும் அது கைகூடவில்லை, ஆதலால் அவருடன் சேர்ந்து அனைவரும் இந்த செம்பியன்ப்பற்று முருகனை கதிர்காம முருகனாக எண்ணி வழிபட்டு வருகின்றனர். ஆகவே தான் "கதிரமலை முருகன் மானியவளை உற்பத்தி" என்ற வாசகம் கோவிலின் முன் சுவரில்
பதிக்கப்படுள்ளது. இதன் காரணமாகவே செம்பியன்ப்பற்று முருகனின் வருடாந்தப் பெரிய பூசை கதிர்காமம் கோவில் தீர்த்தத்திற்கு அடுத்த வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகின்றது. மானியவளை முருகனை தரிசித்தால் கதிர்காம முருகனை தரிசித்த பலன் கிடைக்குமென அனைவரும் நம்புகின்றார்கள். பல வருடங்களின் பின் சின்னத்தங்கம் கதிர்காமம் ஆலயத்திற்கு சென்று வந்ததாக அறியப்படுகின்றது.
இவ் ஆலயத்தில் நியமனம் செய்யப்பட்ட பூசாரியும், உரிமையாளர்கள் எவரும் ஆண் பெண் என்ற பாகுபாடின்றி பூசை செய்யலாம். சமஸ்கிரதமோ மந்திரங்களோ தெரிந்திருக்க வேண்டும் என்ற எந்த அவசியம் இல்லை. பல ஆண்டுகள் அங்கே பூசைகளெல்லாம் ஒழுங்காக நடைபெற்று வந்தது. சந்திரசேகரம் உயிருடன் இருக்கும் வரை அவர் கோவிலை நன்றாக நடாத்தி வந்துள்ளார். உள் நாட்டுப்போர் காரணமாக 1983 முதல் 2009 போர் முடியும் வரை பூசை கள் ஒழுங்காக நடைபெறவில்லை. போர் முடிந்தபின்னரும் கண்ணிவெடி மற்றும் பாதைகள் இல்லாத காரணத்தால் கோவிலுக்கு எவரும் செல்லவில்லை. தங்கத்திலான வேலும் உள்ளுர் போர் காலங்களில் தொலைந்து விட்டது. 2014ம் ஆண்டு ஞானசுந்தரம் கனவில் வந்த முருகன் அனைவரும் தன்னைக் கைவிட்டு விட்டனர் என அறிவித்துள்ளார். அவர் வேறு சிலருடன் சேர்ந்து 2016ம் ஆண்டு இந்த ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டது.சந்திரசேகரம் மறைவிற்குப் பின் ஜெயராஜ் அந்தப் பொறுப்பை எடுத்து நடத்தினர். அதற்குரிய செலவுகளை 2011 ம் ஆண்டிலிருந்து வெளி நாடுகளிலுள்ள உறவினர்களமிருந்து முகநூல் மூலமாக கணேஷரட்ணமும் மற்றும் உள்நாட்டிலுள்ள சிலரும் கோவில் பராமரிப்பு மற்றும் பூசைக்குரிய பணம் கொடுத்து வந்துள்ளார்கள். பெரிய பூசைச் செலவை உள்ளூர் மக்களும் மிகுதியை ஞானசுந்தரமும் வழங்கி வந்தனர். அதன்பிறகு வாரப்பூசைகளும் பெரிய பூசையும் ஒழுங்காக நடைபெற்று வந்துள்ளது அத்துடன் செம்பியன்ப்பற்று மக்கள் கந்தர் சஷ்டி பூசைகளை ஏழு நாட்களும் அங்கே செய்து வருகின்றனர். எம்மவர்களில் அதிகமானோர் பூசைகளில் கலந்து கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை. அத்துடன் பெரியபூசை முன்னய நாட்களைப் போல் காவடி பன்னீர்ச் செம்பு போன்ற நேர்த்திக்கடன்கள் இன்றியே நடந்து வருகின்றது.
இந்த செம்பியன்ப்பற்று மணியவளை முருகன் ஆலயம 80 ஆண்டுகளுக்கு மேல் பூஜிக்கப்பட்டு வருவதற்கு மிகவும் உறுதியான சான்றுகள் உள்ளன. (இக் கட்டுரை 2022ம் ஆண்டு எழுதப்படுகிறது) கந்தப்பரின் பெற்றோர்கள் பரம்பரையில் வந்த அனைவருமே இந்த ஆலயத்தின் உரிமையாளர்களா வார்கள். இது இப்போது ஆறு தலைமுறைகளும் தாண்டிவிட்டது. நூறுக்கணக்கானவர் இந்தக் கோவிலின் வாரிசுகளும் உரிமையாளருமாவார்கள். அத்துடன் பலரும் வெவ்வேறு நாடுகளில் வாழ்கின்றார்கள். பலருக்கு என்ன நடைபெறுகின்றது என்ற ஒரு தகவலும் தெரிவதில்லை. இந்தக் கோவிலுக்குரிய எந்த ஆவணமோ குறிப்புகளோ எங்கும் எவரிடமோ அல்லது எந்த அலுவலகத்திலோ இல்லை. முன்னர் காலத்திலிருந்த ஓலை உறுதியும் கறையான் அரித்து தொலைந்து போய் விட்டதாக ஜெயராஜ் கூறுகின்றார்.
2021ம் ஆண்டு ஆவணி மாதம் நானும் (கருணாரட்ணம்) ஞானசுந்தரமும் உரையாடியபோது இந்த கோவிலை ஒழுங்குபடுத்துவதுடன் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என எண்ணி எம்முடன் கணேஷரட்ணம் ஜெயராஜ் கணேஷ்சங்கர் மகிந்தராஜ் கிரிதரன் ஆகியோரையும் இணைத்து ஒரு தற்காலிக குழு அமைத்து சில தற்காலிக குழுக் கூட்டங்கள் வைத்து கலந்துரையாடிய பின் 30.10.2021 ஞாயிறுக்கிழமை சர்வதேச ரீ தியாக ஒரு Zoom பொதுக் கூட்டம் வைத்து அதில் ஒரு நிரந்தர நிர்வாகசபை தெரிவுசெய்யப்பட்டது. இந்த நிர்வாக சபையின் ஆயுட்காலம் மூன்று வருடங்களாகும். அதன்பிறகு பொதுச் சபை கூடி புதிய நிர்வாகசபையை தெரிவு செய்வார்கள். இப்போது இந்த ஆலயம் ஒரு நிர்வாகசபைன் கீழ் இயங்குவதுடன் ஆவணப்படுத்தலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகசபை உறுப்பினர்கள் தலைவர் :ஞானசுந்தரம் உப தலைவர் :ஜெயராஜ் செயலாளர்:கருணாரட்ணம் உப செயலாளர்: மகிந்தராஜ் தானாதிகாரி :மங்கயற்கரசி உப தானாதிகாரி: கணேஷ்சங்கர் ஆலய பரிபாலகர்கள் 1:கிரிதரன் ஆலய பரிபாலகர்கள் 2 :பவானி ஆலோசகர்: கணேஷரட்ணம்
நிர்வாக சபையினர் பல ஆக்கபூர்வமான வேலைகளை ஆரம்பித்துள்ளனர். கோவிலுக்கு தெற்கு புறமாக ஒரு பரப்பு காணி நடராசா ஜெயராஜன் அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டு கோவில் காணிக்குரிய நிலம் நிலஅளவையாளர் பஞ்சாட்சரம் அவர்களால் அளக்கப்பட்டு திருஞானசம்பந்தர் சந்திரசேகரன் நொத்தாரிசு அவர்களால் கோவிலின் காணி தற்போது கோவிலின் பெயரில் - "செம்பியன்பற்று மானியவளை முருகன் ஆலயம்" உறுதி செய்து எழுதப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் மட்டும் நடைபெற்று வந்த பூசை இப்போது வாரம் இருமுறை செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகின்றது. கோவிலைச் சுற்றி இரண்டு பயன்தரு மரங்களும், நான்கு நிழல்தரு மரங்களும் நாட்டப்பட்டுள்ளன. கட்டிட திருத்த வேலைகள் முடிவடைத்துள்ளன. மடத்துடன் தொடராக 12 அடி நீளத்திற்கு அரை சுவருடன் புதிதாக சமையல் அறை அமைக்கப்பட்டுள்ளது. மின்சார இணைப்பு பெற விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு: இந்த கோவிலின் சரித்திரத்தை எழுத எனக்கு உறுதுணையாக இருந்ததுடன் பல தகவல்களும் தந்துதவிய அனைவருக்கும் குறிப்பாக எமது மூத்தவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். என்னால் முடிந்தளவு விபரங்களை சேகரித்து இதை தயாரித்துளேன். தவறுகள் இருந்தால் தயவுசெய்து எனக்கு இயன்ற ஆதாரங்களுடன் எழுத்தில் அறியத்தரவும். நன்றி – கருணாரட்ணம்