விக்கிப்பீடியா:கட்டுரைப்போட்டி விதிகள்

தமிழ் விக்கிப்பீடியாவுக்கான தகவல் பக்கங்கள் (கட்டுரைகள்) எழுதுவதற்கான போட்டி விதிமுறைகள் சுருக்கமாக வலைவாசலின் முதல் பக்கத்தில் தரப்பட்டுள்ளது. மேற்படி விதிகள் குறித்த விரிவான விளக்கங்கள் இப்பக்கத்தில் உள்ளன.


கட்டுரைப்போட்டிக்கான விதிகள்:


  • தகவல் பக்கங்கள் (கட்டுரைகள்) ஆதாரங்களின் அடிப்படையில் நடுநிலைமையுடன் அமையவேண்டும். இனம், சமயம், அரசியல், தனிநபர் குறை, வேறுபாடுகள் தொடர்பாக வெறுப்பைத் தூண்டாதவாறு, தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஏற்றதாக அமைய வேண்டும்.
    • விக்கிப்பீடியா உலகில் உருவாகும் பல்வேறு விடயங்கள் தொடர்பான அறிவைத் திரட்டித் தரும் ஒரு திட்டம். இதனால் இங்கே இடம்பெறும் கட்டுரைகளில் தரப்படும் தகவல்கள் ஆதாரங்களின் அடிப்படையில் அமைய வேண்டியது முக்கியம். சிறப்பாக, சர்ச்சைக்கு உரிய விடயங்களில் நம்பத்தகுந்த சான்றுகள் தரவேண்டும். சொந்தக் கருத்துக்களோ, எழுதுபவரின் சொந்த ஆராய்ச்சி முடிவுகளோ கட்டுரையில் இடம்பெறக்கூடாது.
    • விக்கிப்பீடியாக் கட்டுரைகளில் நடுவுநிலைமை மிகவும் முக்கியம். அதாவது, குறித்த விடயம் தொடர்பில் ஒரு கருத்தையோ அல்லது நோக்கையோ மட்டும் வலியுறுத்திக் கட்டுரைகள் இருக்கக்கூடாது. அவ்விடயம் தொடர்பான பல்வேறு கருத்துக்களுக்கும், நோக்குகளுக்கும் மதிப்புக் கொடுத்துக் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும்.
    • விக்கிப்பீடியா இனம், சமயம், அரசியல் அல்லது வேறெந்தப் பிரிவுகளில் அடிப்படையிலும் ஒரு பகுதியினருக்குச் சார்பானது அல்ல. இது உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது. இதனால் மேற்படி வேறுபாடுகளின் அடிப்படையில் வெறுப்புணர்வுகளைத் தூண்டக்கூடிய கட்டுரைகள் விக்கிப்பீடியாவுக்கு ஏற்றனவல்ல.


  • தகவல் பக்கங்களில் உள்ள சொற்களின் எண்ணிக்கை 250 முதல் 500 வரை அமைய வேண்டும். (இரண்டு A4 தாள் பக்க அளவு)
    • விக்கிப்பீடியாவில் இடம்பெறக்கூடிய கட்டுரைகளுக்கு அளவு வரையறை கிடையாது. ஆனாலும், இப் போட்டியில் நடைமுறை வசதி கருதிக் கட்டுரையின் நீளத்துக்கு வரையறை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, குறித்த அளவுக்குள் முழுமையானதாகக் கட்டுரைகள் அமைய வேண்டும். அதாவது, தலைப்புக் குறிக்கும் விடயத்தை வாசிப்பவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அதன் முக்கியமான அம்சங்கள் கட்டுரையில் இடம்பெற வேண்டும்.


  • தகவல் பக்கங்கள் ஒருங்குறியில் (Unicode) அமைய வேண்டும்.
    • விக்கிப்பீடியா ஒருங்குறி வரிவடிவத்தையே பயன்படுத்துகின்றது. இதனால் கட்டுரைகள் ஒருங்குறியில் எழுதப்பட்டால்தான் தெரிவுசெய்யப்படும் கட்டுரைகளை நேரடியாகவே பதிவேற்றம் (upload) செய்யலாம். அத்துடன், கட்டுரைகள் நடுவர்களுக்கு மென்படிகளாகவே வழங்கப்படும் என்பதால் எல்லாக் கட்டுரைகளும் ஒரே வரிவடிவிலும் எல்லோரும் இலகுவாக வாசிக்கக்கூடிய பொதுவான வரிவடிவத்திலும் அமைவது முக்கியம். இவற்றைக் கருத்தில் கொண்டே ஒருங்குறியில் கட்டுரைகளை அளிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. கணினியில் தமிழில் தட்டச்சு உதவிப் பக்கத்தைப் பார்க்கவும்.


  • தகவல் பக்கங்களை மே 15, 2010க்குள் நிறைவு செய்து .doc அல்லது .odt கோப்பு வடிவில் http://tamilint2010.tn.gov.in இணையத் தளத்தினூடாக அனுப்ப வேண்டும்.
    • போட்டி தொடர்பான அடிப்படைத் தகவல்களைத் தருவதற்கும், மாணவர்கள் எழுதும் கட்டுரைகளை ஏற்றுக் கொள்வதற்குமாக மேற்குறிப்பிட்ட இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. கட்டுரைகளை மாணவர்கள் இந்த இணையத் தளத்தில் பதிவேற்ற முடியும். இது தொடர்பான எல்லா விபரங்களையும் அந்த இணையத் தளத்திலேயே அறிந்து கொள்ளலாம்.


  • அனுப்பும் தகவல் பக்கங்களின் உரிமை போட்டி அமைப்பாளர்களையே சாரும்.
    • விக்கிப்பீடியாவில் இடம்பெறும் கட்டுரைகள் தொடர்பில் எவருக்கும் காப்புரிமை கிடையாது. கிரியேட்டிவ் காமென்ஸ் () என்னும் உரிமத்தின் அடிப்படையில் அல்லது பொதுக்கள () உரிமத்தின் அடிப்படையிலேயே படைப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. போட்டிக்கு வரும் கட்டுரைகளில் தகுதியானவை தமிழ் விக்கிப்பீடியாவில் சேர்க்கப்பட உள்ளதால், மேற்படி உரிமங்களின் அடிப்படையில் கட்டுரைகளை விக்கிப்பீடியாவுக்கு வழங்குவதற்காகவே கட்டுரைகளுக்கான உரிமைகள் போட்டி அமைப்பாளர்களுக்கு வழங்கப்பட வேண்டியது அவசியம் ஆகும்.


  • மேலும் விபரங்களும், கூடுதல் விபரங்களுக்கான இணைப்புக்களும் இந்தப் பக்கத்தில் தரப்பட்டுள்ளன. தகவல் பக்கங்களை எழுதுமுன் இங்கு தரப்பட்டுள்ள விபரங்களை வாசித்துப் புரிந்துகொள்வது முக்கியம்.
    • மாணவர்கள் எழுதும் கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவுக்காக எழுதப்படுகின்றன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் இடம்பெறத் தக்கவையாக இருப்பது அவசியம். தமிழ் விக்கிப்பீடியாவுக்காகக் கட்டுரைகளை எழுதுவது தொடர்பான உதவிகளும் விளக்கங்களும் இதற்கென உருவாக்கப்பட்டுள்ள வலைவாசல் பக்கத்திலும் அதனோடு இணைந்த பக்கங்களிலும் தரப்பட்டு உள்ளன.
    • தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கெனவே ஏறத்தாழ 22,000 கட்டுரைப் பக்கங்கள் உள்ளன. எனவே மாணவர்கள் புதிதாக எழுதும் கட்டுரைகளை ஏற்கெனவே உள்ள தலைப்புக்களில் எழுதாமல் இருக்க வேண்டும். இது தொடர்பாக உதவிகள் மேற்குறித்த பக்கத்தில் தரப்பட்டுள்ளன.
    • மேலும், சான்றுகள் தருதல், மொழி நடை போன்ற விடயங்களிலும் உதவிப் பக்கங்கள் உள்ளன.


  • தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் பக்கங்கள் உலகளாவிய தமிழ் விக்கிப்பீடியாவில் சேர்க்கப்படும்.
    • பரிசு பெறும் கட்டுரைகள் மட்டுமல்லாது, பொருத்தமான கட்டுரைகள் அனைத்தையுமே தமிழ் விக்கிப்பீடியாவில் இடம்பெறச் செய்ய உள்ளோம். இதனால் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கை கூடுவதுடன், பல துறைகள் சார்ந்த கட்டுரைகளும் இடம் பெறும்.


  • தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
    • கட்டுரைகளை மதிப்பீடு செய்வதற்கு அவ்வத்துறைகளில் உரிய கல்வித்தகைமைகளும் அநுபவமும் வாய்ந்த நடுவர்கள் உள்ளனர். கட்டுரைகள் விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமானவையா என்பதை முடிவு செய்வதற்கு அநுபவம் உள்ள விக்கிப்பீடியர்கள் உதவுவர். இவற்றின் அடிப்படையில் தேர்வுக்குழு முடிவுகளை எடுக்கும்.