விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி
கட்டுரை நடை
உலகளாவிய தமிழர்களும் பள்ளிக் கல்வி மட்டும் முடித்தோரும் கூட புரிந்து கொள்ளத் தக்க வகையில் கட்டுரையின் மொழி நடை இயன்ற அளவு எளிமையானதாக இருத்தல் வேண்டும். எளிமையாக இருக்க வேண்டும் என்ற போதிலும், கட்டுரைகளின் நடை ஒரு கலைக் களஞ்சியத்திற்கு ஏற்ற நடையாக இருத்தல் வேண்டும். வலைப்பதிவுகளிலோ இதழ்களில் மக்களின் பொழுதுபோக்கிற்காகவோ மெல்லிய வாசிப்பிற்காகவோ எழுதும் பொழுது நாம் சிலவகை நடைகளைப் பயன்படுத்துவோம். (எடுத்துக்காட்டாக தன்னிலையிலோ, முன்னிலையிலோ எழுதுதல், ஆங்கில மற்றும் பிற மொழி சொற்களை அப்படியே அடைப்புக்குறியிடாமல் பயன்படுத்துதல் போன்றவை.) இவை ஒரு கலைக் களஞ்சியத்திற்கு ஏற்புடைய பயன்பாடுகள் அல்ல. நடை தொடர்பான நெறிமுறைகளுக்கு நடைக் கையேட்டைப் பார்க்கவும்.
கட்டுரையின் நம்பகத்தன்மை
- கட்டுரையில் உள்ள தகவல்களுக்கு இயன்ற அளவு ஆதாரங்களைத் தெரிவியுங்கள். இதுபற்றி மேலும் அறிய விக்கிபீடியா:மேற்கோள் சுட்டுதல் என்ற பக்கத்தைப் பாருங்கள்.
- ஒருபக்கச் சாய்வுக் கருத்துக்களையும் உணர்ச்சிப்பூர்வமான சொற்றொடர்களையும் தவிருங்கள்.
பொதுவான குறிப்புகள்
- இயன்ற அளவு பிற மொழி சொற்களைத் தவிர்க்கவும். ஐயம் இருந்தால் கட்டுரையின் உரையாடல் பக்கங்களில் உதவி கேட்கவும். பார்க்க: விக்கிபீடியா பேச்சு:சொல் தேர்வு
- இலக்கணப் பிழை, எழுத்துப் பிழை இன்றி முழுமையான வாக்கியங்களை எழுதவும். தகுந்த இடங்களில் மட்டும் தகவல்களை அட்டவணைப்படுத்தவும்.
- உங்களின் சிறிய பங்களிப்பு கூட வரவேற்கப்படும் அதே நேரத்தில், நீங்கள் தொடங்கும் கட்டுரைகள் பற்றி விரிவாக எழுத முயற்சிக்கவும். குறுங்கட்டுரைகளைத் தவிர்க்கலாம்.
- வாசிப்பை எளிமையாக்க உங்கள் கட்டுரையை சிறு சிறு பத்திகளாக துணைத் தலைப்பிட்டு எழுதவும். பெரும்பாலும், சொற்களை பிரித்து எழுதினால் வாசிப்போருக்கு எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
- கட்டுரையின் முதல் வரியில் கூடுமான வரை கட்டுரையின் தலைப்பு வருமாறு எழுதவும். அத்தலைப்பை ''' ''' என்ற குறியீடுகளைப் பயன்படுத்தி தடித்த எழுத்துக்களில் குறிப்பிடவும்.
கட்டுரை எழுதிய பின்
- கட்டுரை பொருள் குறித்து மேலும் அறிந்து கொள்ள உதவியாக தரமான பின் இணைப்புகளைத் தாருங்கள்.
- பிற மொழி விக்கிபீடியாக்களில் உங்கள் கட்டுரைக்கு இணையாக உள்ள பக்கங்களுக்கு இணைப்பு தாருங்கள். இயன்றால், ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள இணைப்பக்கத்திலிருந்து உங்களின் கட்டுரைக்கு இணைப்பு தாருங்கள்.
இவற்றையும் பார்க்கவும்
- விக்கிபீடியா:சிறப்புக் கட்டுரைகள்- விக்கிபீடியாவில் உள்ள சிறந்த கட்டுரைகளின் பட்டியல்.