விக்கிப்பீடியா:செய்திக் குறிப்பு
தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தி செய்தி இதழ்கள், பிற ஊடகங்களுக்கு அனுப்புவதற்கான செய்திக் குறிப்பு:
1. விக்கிப்பீடியா என்றால் என்ன?
விக்கிப்பீடியா ( http://en.wikipedia.org ) என்பது ஒரு கலைக்களஞ்சியம். இணையத்தில் இலவசமாகப் பயன்படுத்தலாம். இது ஒரு கூட்டு முயற்சி இலாப நோக்கற்ற திட்டம். 2001 முதல் இயங்குகிறது. 250க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது. கலைக்களஞ்சியம் போக விக்சனரி (விக்கி அகரமுதலி), விக்கி நூல்கள், விக்கி செய்திகள் போன்ற இன்னும் பல துணைத் திட்டங்களும் உள்ளன.
2. தமிழ் விக்கிப்பீடியா பற்றி?
தமிழ் விக்கிப்பீடியா ( http://ta.wikipedia.org ) 2003ல் தொடங்கியது. தற்போது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், விலங்குகள், பறவைகள், திரைப்படம், இலக்கியம், தமிழ், பண்பாடு, புவியியல் போல பல்வேறு துறைகள் குறித்த 18,000+ கட்டுரைகள் உள்ளன. 9000+ பதிவு செய்த பயனர்கள் உள்ளனர். ஒவ்வொரு நாளும் 50,000 பேர் பார்க்கின்றனர். தமிழ் விக்சனரி ( http://ta.wiktionary.org ) என்னும் பன்மொழி-தமிழ் அகரமுதலியில் 96,000+ சொற்களுக்குப் பொருள் அறியலாம்.
3. தமிழ் விக்கிப்பீடியாவுக்கு யார் யார் பங்களிக்கிறார்கள்?
இந்தியா, இலங்கை, கனடா, ஆசுத்திரேலியா, சப்பான், ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் முதலிய நாடுகளில் இருந்து பங்களிக்கிறார்கள்.
புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் மிகுதியாகப் பங்களிக்கிறார்கள். மயூரனாதன் என்ற ஈழத் தமிழரே முதன் முதலில் எழுதத் தொடங்கினார். இன்று வரை 2,000க்கும் மேற்பட்ட அருமையான கட்டுரைகளை எழுதி பெரும் பங்காற்றி உள்ளார்.
சிறீதரன் கனகு, நற்கீரன், பேராசிரியர். செல்வக்குமார், பேராசிரியர். வி. கிருஷ்ணமூர்த்தி, சிவக்குமார், சுந்தர், டெரன்சு, கோபிநாத், நிரோஜன் சக்திவேல், கார்த்திக் பாலா, தானியல் பாண்டியன், ரவிசங்கர், உமாபதி, வினோத், குறும்பன், சந்திரவதனா, செல்வம், தேனி சுப்பிரமணி, வெர்க்லோரும், சிந்து, கலாநிதி முதலியோர் குறிப்பிடத்தக்க பங்காற்றி உள்ளார்கள்.
கணிதவியல் பேராசிரியர், சுற்றுச்சூழல் ஆய்வு மாணவர், கானுயிர் ஆய்வு மாணவர், கட்டிடக் கலைஞர், மென்பொருள் வல்லுனர்கள், இலத்திரனியல் பேராசிரியர், நூலாசிரியர், நாடக ஆசிரியர், கல்லூரி மாணவர் போன்ற பல துறையினர் எழுதி வருகிறார்கள்.
தமிழகத்தில் இருந்து பங்களிப்பவர்கள் 10%க்கும் குறைவே. தமிழகத்தில் கணினி, இணைய வசதிகள் பெருகாமை, வசதி உள்ளவர்களிடம் விழிப்புணர்வு இல்லாமை, பொருளாதாரத் தன்னிறைவு இன்மை இந்தப் பங்களிப்புக் குறைவுக்கு காரணம்.
4. தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பது எப்படி?
துறை சார் ஆர்வம், தமிழ் எழுத்துத் திறம் உள்ள எவரும் தங்களுக்கு விருப்பமான துறை குறித்து நேரடியாக தமிழ் விக்கிப்பீடியா தளத்தில் பாடநூல் கட்டுரை நடையில் எழுதலாம். யாருடைய ஒப்புதலும் தேவை இல்லை. நீங்கள் எழுதுவது உடனுக்குடன் கோடிக்கணக்கான உலகத் தமிழர்கள் பார்வைக்கு வரும். பிற விக்கிப்பீடியர்கள் உங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவர். ஒரு கணினி, இணைய இணைப்பு இருந்தால் உங்கள் வீடு, கல்லூரி, அலுவலகத்தில் இருந்தே ஓய்வு நேரத்தில் எழுதலாம்.
கட்டுரைகள் எழுதுவது போக, கட்டுரைகளுக்குப் பொருத்தமான புகைப்படங்களையும் எடுத்துத் தந்து உதவலாம்.
5. விக்கிப்பீடியாவில் உள்ள தகவல்களை நம்பலாமா?
விக்கிப்பீடியாவில் உள்ள தகவல்களை சரிபார்த்து உறுதி செய்ய பெரும் முயற்சி எடுக்கிறோம். எத்துறை சார்ந்த தகவலையும் பெற முதல் படியாக கண்டிப்பாக விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தலாம். எனினும், விக்கிப்பீடியா தவிர்த்த ஒன்றுக்கு மேற்கட்ட வெவ்வேறு இடங்களில் இருந்து தகவல்களைப் பெற்று உறுதிப் படுத்தக் கொள்ள வலியுறுத்துகிறோம்.
6. விக்கிப்பீடியாவை இணையத்தில் மட்டும் தான் படிக்க முடியுமா?
இப்போது இணையத்தில் மட்டும் தான். விரைவில் நூல் வடிவிலும், CD வடிவிலும் தேர்ந்தெடுத்த சில கட்டுரைகளை வெளியிட முடிவு செய்திருக்கிறோம்.
7. தமிழ் விக்கிப்பீடியா குறித்து மேலும் அறிவது எப்படி?
tamil.wikipedia at gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்பலாம்.