விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா புள்ளிவிபரங்கள் - பகுப்பாய்வு (ஆக. 2006)

குறுக்கு வழி:
WP:STATS

தமிழ் விக்கிபீடியாவின் தரம் பற்றியும், அதன் கட்டுரை எண்ணிக்கை பற்றியும் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறோம். பல வகையான கருத்துக்களும் பரிமாறப்பட்டுள்ளன. ஏனைய இந்திய மொழி விக்கிபீடியாக்கள் கட்டுரை எண்ணிக்கையில் அசுரவேகத்தில் வளர்ந்து வருவது பற்றியும், தமிழ் விக்கிபீடியா இவ்வகையில் தொடர்ந்தும் பின் தங்கி இருப்பது பற்றியும் பல பயனர்கள் அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

  • உண்மையில் நிலைமை என்ன?
  • தமிழ் விக்கிபீடியா பிற மொழி விக்கிபீடியாக்களுடன் போட்டியிட முடியாத நிலையில் உள்ளதா?
  • ஒரு சிறந்த, பயனுள்ள கலைக் களஞ்சியம் ஒன்றை உருவாக்குவதில் நாம் சரியான திசையில் செல்கிறோமா?
  • இது தொடர்பில், நாம் எவ்வாறான விடயங்கள் பற்றிக் கவனம் எடுக்க வேண்டும்?
  • தமிழ் விக்கிபீடியாவின் வேகம் போதுமா? இல்லையா?

மேற்கண்ட கேள்விகள் தொடர்பில் விளக்கம் பெறுவதற்காக விக்கிபீடியா தொடர்பான புள்ளிவிபரங்கள் சிலவற்றை, ஒப்பீட்டு முறையிலும், தனியாகவும் மேலோட்டமாகப் பகுப்பாய்வு செய்வதே இப்பகுதியின் நோக்கமாகும்.

புள்ளிவிபரங்களை நோக்குமுன், எந்தவொரு கலைக்களஞ்சியமும், சிறப்பாகத் தமிழ் விக்கிபீடியா, எந்த நோக்கத்தை அடைய முயற்சிக்க வேண்டும் என்பது பற்றியும், இதற்கான வரையறைகள் பற்றியும் தெளிவான விளக்கம் இருக்கவேண்டும். சுருக்கமாக இது பற்றிச் சொல்வதானால்,

  • எந்த விடயம் சம்பந்தமாகவும் கட்டுரைகளை இங்கே பார்க்கக்கூடிய நிலை வரவேண்டும்.
  • ஒவ்வொரு கட்டுரையும் நிறைந்த, சரியான தகவல்களைக் கொடுக்கவேண்டும்.
  • யாருக்காக இது உருவாக்கப்படுகிறதோ அவர்களுக்குத் தேவையான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
  • பல்வேறு விடயங்களுக்கிடையே ஒரு சமநிலை பேணப்பட வேண்டும்.
  • புரிந்து கொள்ளலை இலகுவாக்கும் வகையில் கட்டுரையின் அமைப்பு இருக்கவேண்டும்.
  • தொடர்பான கட்டுரைகளிடையே இணைப்புகள் முறையாக இருக்கவேண்டும்.
  • வெளியிணைப்புகள் பொருத்தமானவையாக இருக்கவேண்டும்.
  • கட்டுரை ஆழமானதாகவோ, மேலோட்டமானதாகவோ, இடைப்பட்ட நிலைகளிலோ இருக்கலாம் ஆனால், எந்த நிலையில் இருந்தாலும் முழுமையாக இருக்கவேண்டும்.
  • ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்பார்கள். எனவே கூடிய அளவு படிமங்களும், ஒலிக் கோப்புகளும் இருக்கவேண்டும்.

இவை எல்லாவற்றையும் உடனடியாக உருவாக்கி விடமுடியாது. முக்கியமாக இது ஒரு தன்னார்வல முயற்சி. எனவே படிப்படியாகவே இவற்றை அடைய முடியும். ஆனாலும், இந்த இலக்கை அடைவதற்கான முயற்சியில், இருக்கின்ற வளங்களை உரிய முறையில் பயன்படுத்திச் சரியான திசையில் செல்வதே முக்கியமானது. தேவையற்ற போட்டிகளில் நேரத்தையும், வளங்களையும் செலவு செய்யக்கூடாது. நவீன நுட்பங்களைப் பயன்படுத்துவதில் தடை இருக்கக்கூடாது ஆனால் அது தரத்தைக் கூட்டுவதாக இருக்கவேண்டும்.

கட்டுரைகளின் எண்ணிக்கை

தொகு

கட்டுரைகளின் எண்ணிக்கை முக்கியமானது. ஆனால் பயனுள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையே முக்கியமானது. தற்போது அசுர வேகத்தில் வளரும் விக்கிபீடியாக்களில், எது வித உள்ளடக்கமும் இல்லாமலேயே ஆயிரக்கணக்கில் கட்டுரைகளைத் தானியங்கிகள் மூலம் உருவாக்கியுள்ளார்கள். 15,000 கட்டுரைகளைத் தாண்டிவிட்ட தெலுங்கு மொழி விக்கிபீடியாவில், கடைசியாக உருவாக்கப்பட்ட 10,000 க்கு மேற்பட்ட கட்டுரைகள் சராசரியாக 350 பைட்ஸ்களுக்குக் குறைந்த அளவு கொண்டவையே. இன்னொரு விக்கிபீடியாவில் ஒவ்வொன்றும் ஏறத்தாழ 2000 பைட்ஸ் அளவு கொண்ட 1000 க்கு மேற்பட்ட கட்டுரைகளை உருவாக்கியுள்ளார்கள் ஆனால் அத்தனையும் தலைப்புகளும் துணைத் தலைப்புக்களும் மட்டுமே. எல்லாமே அச்சொட்டாக ஒரே மாதிரியானவை. இவ்வாறு செய்வதனால் புள்ளிவிபரங்களையும் கூட ஓரளவுக்கு மோசமில்லாமல் வைத்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் பயனுள்ள கட்டுரைகள் ஆக்குவது எப்போது சாத்தியமாகும் என்று தெரியவில்லை. ஒரு வேளை விரைவில் தன்னியக்கமாகவே இவற்றை மேம்படுத்தவும் கூடும். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆரம்ப நிலைகளில் பெருமளவுக்கு தன்னியக்கமாகக் கட்டுரைகளை உருவாக்குதல் பொருத்தமானதாகத் தெரியவில்லை. கட்டுரைகளின் எண்ணிக்கையைக் கூட்டுவது பங்களிப்பவர்களின் எண்ணிக்கையில் பெருமளவுக்குத் தங்கியுள்ளது மட்டுமன்றி, இது தொடர்பில் பல்வேறு மொழி விக்கிபீடியாக்களின் புள்ளிவிபரங்கள் ஒத்த தன்மையைக் காட்டுகின்றன. கீழுள்ள படம், ஒப்பீட்டுக்காக, கட்டுரை எண்ணிக்கையில் முன்னணியில் உள்ள ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்ச் என்பவற்றுடன், தமிழ், தெலுங்கு, வங்காள மொழி விக்கிபீடியாக்கள் தொடர்பான வரைபுகளைக் காட்டுகின்றது.

 

இது ஒரு பங்களிப்பாளருக்கான கட்டுரை எண்ணிக்கைக்கான பெறுமானத்தை (கட்டுரை எண்ணிக்கை/பங்களிப்பாளர் எண்ணிக்கை) மாதங்களுக்கு எதிராக வரைந்து பெறப்பட்ட வரைபாகும். ஒப்பீட்டுக்கு வசதியாக ஒவ்வொரு மொழி விக்கிபீடியாவினதும் முதல் 33 மாதங்களே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. இங்கே பின்வரும் விடயங்களை அவதானிக்கலாம்.

  • ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, தமிழ் ஆகிய மொழிகள் சராசரியாக ஒரு பங்களிப்பாளருக்கு 60 கட்டுரைகள் என்ற அளவை ஒட்டியே காணப்படுகின்றன.
  • தமிழ் இந்த மட்டத்தில் கூடிய சீரான போக்கைக் காட்டுகின்றது.
  • ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு மொழி வரைபுகள், இறுதிப்பகுதியில் கீழ் நோக்கிய போக்கைக் காட்டுகின்றன. ஆனால் தமிழ் தொடந்தும் சராசரியைப் பேணிவருகிறது.
  • தெலுங்கும், வங்காள மொழியும், சீரற்ற போக்கைக் காட்டுகின்றன. தெலுங்கில் ஒரு பங்களிப்பவருக்கு 150 வரை கட்டுரைகள் உருவாக்கப் பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

மேற்படி அவதானிப்புகள் தமிழ் விக்கிபீடியா, கட்டுரை எண்ணிக்கை தொடர்பில், இயல்புக்கு ஒத்தவகையிலும், சீராகவும் செயற்படுவதை உறுதிப்படுத்துகின்றன. அத்துடன் இது, பங்களிப்பாளரின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

கட்டுரைகளின் அளவு

தொகு

கட்டுரைகளை அவை எடுத்துக்கொள்கிற பைட்ஸ் அடிப்படையில் ஒப்பிடுவதில் சிக்கல் உண்டு. சில மொழி எழுத்துக்கள் கூடிய பைட்ஸ் களை எடுக்கின்றன. இதனாலும் மொழி அமைப்பினாலும், ஒரே விடயத்தை விளக்குவதற்கு வெவ்வேறு அளவில் பைட்ஸ் தேவைப்படுகிறது. இந்திய மொழிகள், ஆங்கிலம் போன்ற மொழிகளோடு ஒப்பிடும்போது அதிக பைட்ஸ் களைப் பயன்படுத்துகின்றன. மேலோட்டமான அவதானிப்பு ஒன்றின் மூலம் ஐரோப்பிய மொழிகளிலும் சுமார் 2.5 மடங்கு கூடுதலான பைட்ஸ்களை இந்திய மொழிகள் பயன்படுத்துவதாகக் காணப்படுகிறது. இதனால் அடுத்து வருகின்ற ஒப்பீட்டுப் பகுப்பாய்வுக்காக இந்திய மொழிகளின் கட்டுரை அளவுகள் 2.5 ஆல் வகுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கீழே காணப்படும் படம், கட்டுரை எண்ணிக்கையின் அதிகரிப்போடு, கட்டுரைகளின் சராசரி அளவு (பைட்ஸ் இல்) எவ்வாறான போக்கைக் காட்டுகின்றது என்பதை விளக்குகின்றது.

 

இந்த வரைபுக்காக, எடுத்துக்கொள்ளப்பட்ட ஒவ்வொரு மொழியிலும் 4100 தொடக்கம், 6000 எண்ணிக்கையான கட்டுரைகள் உருவாகும் வரையிலான தகவல்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

மேற்படி வரைபிலிருந்து பின்வருவனவற்றை அவதானிக்கலாம்.

  • ஆங்கிலம், ஜெர்மன், பிரான்ஸ் மொழிகளும் சுமார் 5000 கட்டுரைகளை உருவாக்கும் காலப்பகுதியில், கட்டுரைகளின் சராசரி அளவாக 1500 பைட்ஸ் களுக்கும் குறைவாகவே கொண்டிருந்தன.
  • தமிழ் இப்பகுதியில் அளவுகளை 2.5 ஆல் வகுத்துத் தரப்படுத்திய பின்னரும் முன்னணியிலேயே இருக்கிறது.
  • தெலுங்கு ஆரம்பத்தில் நல்ல நிலையிலிருந்து சராசரி 1000 க்கும் கீழ் வந்துவிட்டது. (இதன் பின்னர் உருவாக்கப்பட்ட 10,000 க்கும் மேற்பட்ட கட்டுரைகளின் அளவுகளைப் பார்க்கும் போது இது சராசரி 500 க்கும் கீழ் வந்திருக்கக் கூடும்)
  • வங்காள மொழியைப் பொறுத்தவரை, சராசரி 500 க்கும் கீழிருந்து சிறிதளவு உயர்ந்திருப்பது போல் தோன்றுகிறதாயினும் இன்னும் 500 க்குச் சற்று மேலேயே உள்ளது.
  • ஆங்கிலம், ஜெர்மன், பிரான்ஸ் மொழிகள் இறுதிப்பகுதியில் தொடர்ந்தும் மேல் நோக்கிய போக்கையே காட்டுகின்றன. (தற்போது இம்மொழிகள் ஒவ்வொன்றும் 3000 க்கு மேற்பட்ட சராசரிகளைக் கொண்டுள்ளன).
  • இந்திய மொழிகளில் தமிழும் தெலுங்கும் கீழ் நோக்கிய போக்கையும், வங்காளம் மட்டமான போக்கையும் காட்டுகின்றன.

தமிழைப் பொறுத்த வரை சராசரி குறைந்து கொண்டே வருவது ஒரு நல்ல சமிக்ஞை அல்ல. இதை உயர்த்துவதற்குத் திட்டமிட்ட செயற்பாடுகள் தேவை.

வெவ்வேறு அளவுள்ள கட்டுரைகளின் விழுக்காடு

தொகு

தமிழ் விக்கிபீடியாவில் வெவ்வேறு அளவுள்ள கட்டுரைகள் ஏன்னென்ன விழுக்காட்டு அளவில் அகானப்படுகின்றன என்பதையும், தொடங்கிய காலத்திலிருந்து இந்த அளவுகள் எவ்வாறு மாறிவருகின்றன என்பதையும் கீழேயுள்ள வரைபு காட்டுகின்றது.

 

இவ்வரைபு தமிழ் விக்கிபீடியாவை வளர்ப்பதில் கவனத்தில் கொள்ளவேண்டிய சில முக்கியமான அம்சங்களைத் தெளிவாகக் காட்டுகின்றது.

  • 2000 - 4000 பைட்டுகள் அளவுள்ள கட்டுரைகளும், 1000 - 2000 பைட்டுகளுக்கு இடைப்பட்ட அளவுள்ள கட்டுரைகளும் விழுக்காட்டில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் காட்டுகின்றன.
  • பெரிய கட்டுரைகளான 4000 - 8000 பைட்ஸ், 8000 - 16000 பைட்ஸ் கொண்டனவும் விழுக்காட்டில் வீழ்ச்சியையே காட்டுகின்றன.
  • அதே நேரம் சிறிய 128 - 256 பைட்ஸ் அளவுள்ளனவும், 256 - 512 பைட்ஸ் அளவுள்ளனவுமான கட்டுரைகளின் விழுக்காடு பெருமளவு அதிகரித்துள்ளன. அத்துடன் தொடர்ந்தும் அவை மேல் நோக்கிய போக்கையே காட்டுகின்றன.


பெரிய கட்டுரைகளின் விழுக்காடுகள் குறைந்து வருவதும், சிறிய கட்டுரைகள் அதிகரித்துவருவதும் கட்டுப்படுத்தப்பட வேண்டிய போக்கு ஆகும். முக்கியமாக மிகச் சிறிய கட்டுரைகளை 2000 - 4000 பைட்ஸ் மற்றும் 4000 - 8000 பைட்ஸ் அளவுள்ள கட்டுரைகளாகத் தரமுயர்த்த முயற்சி செய்யவேண்டியது அவசியம்.

கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் தானியங்கிகளைப் பயன்படுத்திவரும் தெலுங்கு விக்கிபீடியாவுக்கான மேற்காட்டியது போன்ற வரைபு ஒப்பீட்டுக்காகக் கீழே தரப்பட்டுள்ளது.

 

எல்லாப் பெரிய அளவுகளும் கிடை அச்சோடு அண்டி 8% க்கும் குறைவாகவே இருப்பதைக் காண்க. அண்மைக்காலத்தில் 40% அளவுக்கு இருந்து வந்த 256 - 516 பைட்ஸ், 516 - 1000 பைட்ஸ் கொண்ட கட்டுரைகள் 20% அளவுக்குக் குறைந்து விட்டன. மிகச் சிறிய கட்டுரைகளான 128 - 256 பைட்ஸ் கொண்ட கட்டுரைகள் 10% அளவிலிருந்து ஒரு மாத காலத்தில் 40% ஐ எட்டியிருக்கின்றன. 64 - 128 அளவுள்ள கட்டுரைகள் கூட 10% அளவுக்கு வந்து தீவிரமான மேல் நோக்கிய போக்கைக் காட்டி நிற்கின்றன. இது மேற்படி விக்கிபீடியா 5100 கட்டுரைகளைக் கொண்டிருந்த போதுள்ள நிலை. கடந்தமாதத்தில் இது 15,000 க்கும் மேல் உயர்ந்துள்ளது. பெரும்பாலும் 300 பைட்ஸ் க்குக் கீழ்ப்பட்ட அளவுள்ள கட்டுரைகள் மூலமே இது அடையப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழ் விக்கிபீடியா இது போன்ற போட்டிகளில் ஈடுபட்டுத் தன்னைத் தரமிறக்கிக் கொள்ளக்கூடாது.