விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/அறிமுகம்
இன்றைய மிகப் பெரிய தகவல் ஊடகமாக விளங்குவது இணையம் ஆகும். இணைய ஊடகங்களில் தமிழ் மொழி கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. முதன்முதலாக தமிழ் இலக்கியப் படைப்புக்களை இணையத்தில் இலவசமாக வெளியிடும் ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முயற்சியாக மதுரைத் திட்டம் (projectmadurai.org) 1998ஆம் ஆண்டில் பொங்கல் தினத்தன்று துவங்கப்பட்டது. இதுவரை 270 இற்கும் மேற்பட்ட மின்னூல்கள் இத்திட்டத்தின் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து ஈழத்து தமிழ் நூல்களையும் பிற ஆவணங்களையும் மின்வடிவில் இணையத்தில் பேணி வைப்பதற்கான இலாப நோக்கற்ற ஒரு தன்னார்வக் கூட்டுழைப்பாக நூலகம் (noolaham.org) அமைந்தது. இந்தியாவில் இணையவழியே கல்வி வளங்களையும் வாய்ப்புகளையும் உலகளாவிய கல்விக்காக நிறுவப்பட்ட முதல் மற்றும் இணையில்லா அமைப்பாக தமிழ் இணையக் கல்விக்கழகம் (tamilvu.org) அமைக்கப்பெற்றது. இந்தப் பல்கலைக்கழகத்தின் இணைய நூலகம் மிகவும் பயன்பாடு மிக்கது. இதனுள் பல நூறு நூல்கள் சேமிக்கப் பெற்றுள்ளன.
தவிர தனிநபர் முயற்சிகளாக சென்னை லைப்ரரி (chennailibrary.com), பொள்ளாச்சி நசன் அவர்களின் தமிழம்.நெட் (thamizham.net), ரமேஸ் சக்கரபாணியின் திறந்த வாசிப்பகம் (openreadingroom.com) போன்றவையும் தமிழ்ப் படைப்புகளின் சேகரிப்புத் தளங்களாக விளங்குகின்றன. தமிழ் மரபு அறக்கட்டளை ஓலைச்சுவடிகளை எண்ணிம வடிவாக்கல் (tamilheritage.org) பணியில் ஈடுபட்டுள்ளது. தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள் (padippakam.com) ஈழப்போராட்டம் தொடர்பான பல்வேறு படைப்புக்களைக் கொண்டுள்ளது.
தமிழ் விக்கியூடகம் 2000 களில் அறிமுகமான விக்கி நுட்பத்தைப் பயன்படுத்தி தமிழில் பலதரப்பட்ட உள்ளடக்கங்களைக் கூட்டாக, கட்டற்ற முறையில் உருவாக்குவதற்கான ஊடகம் ஆகும். இது உலகளாவிய, பன்மொழித் திட்டமான விக்கிமீடியாவின் (wikimedia.org) ஒர் அலகாகும். விக்கிமீடியாச் செயற்திட்டங்களை விக்கிமீடியா அறக்கட்டளை (wikimediafoundation.org) பராமரிக்கிறது.
சனவரி 15, 2001ஆம் ஆண்டில் விக்கிப்பீடியா.கொம் என்ற வலைத்தளத்தை ஜிம்மி வேல்சு என்பார் கட்டற்றக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் எண்ணத்துடன் பதிகை செய்தார். அவரது கூட்டு நிறுவனர் லாரி சாங்கர் விக்கித் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கூட்டாக்கத் திட்டமாக இதனை வடிவமைத்தார். விளம்பரங்களைக் கொண்டு இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில்லை என்ற கொள்கை முடிவுடன் இத்திட்டத்தின் வலைத்தளம் ஆகத்து 2002இல் விக்கிப்பீடியா.கொமிலிருந்து விக்கிப்பீடியா.ஆர்க் என்ற முவரிக்கு மாற்றப்பட்டது. சூன் 2003இல் ஓர் இலாபநோக்கற்ற அறக்கட்டளை நிறுவனமாக இதனை நிர்வகிக்க விக்கிமீடியா பவுண்டேசன் என்ற நிறுவனம் உருவானது.
இந்த நிறுவனத்தின் குவிய நோக்கினால் விக்கியூடகத் திட்டங்கள் பல நிலைகளில் வளரத் தொடங்கின. புதிய கட்டுரைகளால் உள்ளடக்கம் விரிவடைந்தது; ஆங்கிலம் மட்டுமன்றி பிறமொழிகளுக்கும் இத்திட்டங்கள் விரிவடைந்தன. மேலும் இம்மொழிகளில் செய்திகள், மேற்கோள்கள், உசாத்துணைக்கான நூல்கள், போன்ற பல்வேறு உள்ளடக்கங்களை கொண்ட புதிய விக்கித்திட்டங்கள் உருவாயின. பன்மொழி அகரமுதலிகளும் பொதுப்பயன்பாட்டுக்கு உகந்த கட்டற்ற ஊடக சேமிப்பகமும் விரைவாக வளரத் தொடங்கின. மென்பொருள் வடிவாக்கமும் மேம்பாடும் வழங்கிகளின் நிர்வாகமும் முறைப்படுத்தப்பட்டன. விக்கியூடகத் தொகுப்பாளர்களின் சமூகத்தேவைகளை சந்திக்கும் வண்ணம் பல கொள்கைகள் வரையறுக்கப்பட்டன.
சனவரி 2002இல் விக்கிப்பீடியாவின் 90% கட்டுரைகள் ஆங்கிலத்தில் இருந்தன. சனவரி 2004இல் ஆங்கிலக் கட்டுரைகள் மொத்த விக்கிப்பீடியா கட்டுரைகளில் 50%ஆகவே இருந்தது. இந்த பன்மொழித்தன்மை வளர்ச்சியடைந்து 2013இல் 85% கட்டுரைகள் ஆங்கிலமல்லாத மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.
விக்கியின் வளர்சிதை மாற்றம்
தொகு-
நிறுவல் நாள் – 6 திசம்பர் 2001
-
6 திசம்பர் 2001 – 12 அக்டோபர் 2003
-
13 அக்டோபர் 2003 – 13 மே 2010
-
13 மே 2010 – இன்றுவரை