விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/கொள்கைகளும் நற்பண்புகளும்
விக்கியூடகங்களின் தொலைதூரப் பார்வை "உலக அறிவு முழுமையையும் ஒவ்வொருவருக்கும் கட்டற்ற முறையில் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒர் உலகைக் காண்பது" ஆகும். இதை நோக்கியே விக்கியூடகத்தின் பல்வேறு செயற்திட்டங்கள் அமைக்கின்றன. இந்த செயற்திட்டங்களை வெற்றிகரமாக முன்னகர்த்த எமக்கு அடிப்படையான கொள்கைகளும் நற்பண்புகளும் உதவுகின்றன.
கொள்கைகள் ஏன் தேவை?
தொகுஎமது குறிக்கோள் எமக்கு முக்கியமானது. தமிழ் விக்கியூடகம் உருப்பெற ஓர் ஒருமித்த தொலைநோக்கு திட்டக்கண்ணுடன் செயல்படுவது இன்றியமையாதது. எமது செயல்திட்டங்களை நெறிப்படுத்த எமது விழுமியங்களிலும், பண்பாட்டு சூழலிலும், நோக்கத்திலும் இருந்து எழும் தெளிவான கொள்கைகளும் வழிகாட்டல்களும் புரிந்துணர்வுகளும் எமக்கு தேவையாகின்றன.
முக்கியக் கொள்கைகள்
தொகுவிக்கியூடகங்களில் பங்களிக்க முன்வருவோர் அனைத்துக் கொள்கைகளையும் படித்த பின்னர் மட்டுமே பங்களிக்க வேண்டும் என்றில்லை. ஆனால் முக்கியமான கொள்கைகளை அறிந்து கொள்வது நீங்கள் இசைவாகப் பங்களிப்பதை விரைவுபடுத்தும்.
- கட்டற்ற உள்ளடக்கம்: அனைத்து விக்கியூடகங்களும் கட்டற்ற உரிமத்தில் படைக்கப்படுகிறன, பகிரப்படுகின்றன. இவை அனைவருக்கும் உரித்தான பொதுச் சொத்து. எந்தத் ஒரு குறிப்பிட்ட தொகுப்பாளரும் எந்த உள்ளடக்கத்திற்கும் உரிமையாளர் அல்லர்; உங்களின் எந்த ஆக்கமும் தயக்கமின்றித் தொகுக்கவும், பகிரவும் படலாம். பிறரின் காப்புரிமைகளை மதித்து காப்புரிமைக்கு கட்டுப்பட்ட ஆக்கங்களை சேர்க்காதீர்கள். அவ்வாறு சேர்க்க விரும்பின் அவர்களின் எழுத்துமூலமான அனுமதியைப் பெற்றுச் சேருங்கள்.
- நடுநிலை நோக்கு: விக்கி உள்ளடக்கங்கங்களில் ஒரு பக்கச்சார்பு வாதங்களை மட்டும் எடுத்துக்கூறுவதைத் தவிர்த்து தகுந்த அனைத்து பார்வைகளுக்கும் மதிப்பளித்து உரிய இடம் தாருங்கள். இடம்பெறும் தகவல்களுக்கு தரமான மேற்கோள்களைச் சேர்த்து வலுப்படுத்துங்கள்.
- விக்கியர்கள் ஒருவருக்கொருவர் மதிப்புடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ளுதல்: சக பங்களிப்பாளர்கள் நல்நோக்குடன் செயற்படுகிறார்கள் என்று நம்பி நீங்களும் நல்ல நம்பிக்கையுடன் செயற்படுங்கள். நீங்கள் உடன்படாதிருக்கும்போதும் சக விக்கிப்பீடியரை மதிக்கவும் பண்புடன் நடந்து கொள்ளவும் வேண்டப்படுகிறீர்கள். விக்கி நற்பழக்கவழக்கங்களை கடைப்பிடியுங்கள், தனிப்பட்ட தாக்குதல்களை தவிருங்கள். விவாதங்களில் இணக்க முடிவு காணுங்கள்.
- இணக்க முடிவு: இணக்க முடிவு என்பது ஒரு குழு முடிவெடுக்கும் முறை ஆகும். ஒரு குழுவின் அனைத்து அல்லது பலரின் இணக்கத்தோடு எடுக்கப்படும் முடிவே இணக்க முடிவு ஆகும். விக்கியில் எழுக்கூடிய பல்வேறு சிக்கல்களுக்கு விக்கிப் பங்களிப்பாளர்கள் உரையாடி இணக்க முடிவு காண உதவுங்கள்.
- திறந்த, உள்வாங்கும், பல்வகை விக்கிச் சமூகம் (Open, Inclusive, Diverse Wiki Community): பல மொழியினர், சமயத்தினர், நாட்டினர், துறையினர், வயதினர் கட்டற்ற அறிவு என்ற ஒரே இலக்கோடு இணையும் களம் விக்கியூடகம். இங்கு எமது செயற்பாடுகள் திறந்த நிலையில், அனைவரையும் உள்வாங்கி முன்னேற விளைகின்றன.
- இறுக்கமான விதிமுறைகள் இல்லை: மேற்கண்ட கொள்கைகளைத் தவிர்த்து வேறு இறுக்கமான கட்டுப்பாடுகள் இல்லை. ஆக்கங்களை துணிவுடன் இற்றைப்படுத்தவும்; தவறுகள்/பிழைகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்; ஏனெனில் முந்தைய பதிப்புகள் இயல்பாகச் சேமிக்கப்படுவதால் மீட்கமுடியாத பாதிப்பு ஒன்றும் நிகழ வாய்ப்பில்லை.
பிற கொள்கைகள், வழிகாட்டல்கள், கையேடுகள்
தொகுமேற்சுட்டப்பட்ட கொள்கைகள் தமிழ் விக்கியூடகங்களை நெறிப்படுத்தும் அடிப்படை, மேல் நிலைக் கொள்கைகள் ஆகும். இவை தவிர அன்றாட விக்கிப் பணிகளுக்கு உதவும் வழிகாட்டல்களும், கையேடுகளும் உள்ளன. இவற்றைப் பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம்:
- உள்ளடக்கம் தொடர்பானவை - எ.கா நடைக் கையேடு, மேற்கோள் சுட்டுதல்
- பயனர்களுக்கு இடையேயான நடத்தைகள் தொடர்பானவை - தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
- விக்கிச் செய்முறைகள் தொடர்பானவை - எ.கா நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்
- சட்டம் தொடர்பானவை - எ.கா பதிப்புரிமை
கொள்கை உருவாக்கம்
தொகுதமிழ் விக்கியில் இரண்டு முக்கிய கொள்கைத் தொகுதிகள் உண்டு. அவை
- ஆங்கில விக்கிகளில் இருந்து பெறப்படும் முக்கிய கொள்கைகள்
- தமிழ் விக்கிகளி உருவாக்கப்படும் கொள்கைகள்
விக்கியூடகத்தின் எமக்குரிய பொதுவான கொள்கைகளை நாம் கவனத்தில் கொண்டும் மதித்தும் செயற்படுகின்றோம். எனினும் தமிழ் விக்கியூடகங்களின் தேவைகளுக்கு ஏற்ப அவ்வப்பொழுது கொள்கைகள் வகுத்து நடைமுறைப்படுத்துவதும் வழக்கம் ஆகும். பொதுவாக, கொள்கைகள் எப்படி உருவாக்கம் பெறுகின்றன என்பது கீழே விளக்கப்படுகின்றது.
- பரிந்துரைத்தல் (Recommendations or Proposal) - விக்கிகளின் ஆலமரத்தடி மற்றும் பிற உரையாடல் பக்கங்களில் கொள்கைகள் திறந்த முறையில் தேவைக்கேற்ப பரிந்துரைக்கப்பட்டு அலசப்படுகின்றன.
- கருத்துவேண்டல் / கலந்துரையாடல் (Request for Comments/Consultations) - பரிந்துரைக்கப்படும் கொள்கைகள், வழிகாட்டல்கள் தொடர்பாக பயனர்களிடம் கருத்துக்கள் கோரப்படுதல், பகிரப்படுதல்.
- திருந்திய கொள்கைகள் அல்லது சீர்திருத்தப்பட்ட பரிந்துரைகள் (Refined Policies) - பெறப்பட்ட கருத்துக்களுக்கு ஏற்ப கொள்கைகளில் திருத்தம் செய்யப்பட்டு ஆவணப்படுத்தல்.
- கொள்கைகளைப் பின்பற்ற பயனர்களுக்கு பரிந்துரைத்தல்.
இச்செயற்பாடு திறந்தமுறையில் ஒளிவுமறைவின்றி (open and transparent), பொறுப்புணர்வுடன், பற்பல பயனர்களின் கருத்துகளுக்கும் செயற்பாடுகளுக்கும் மதிப்பளித்து மேற்கொள்ளப்படவேண்டும். மிகப்பல கொள்கைகளுக்கு ஒரு இணக்க முடிவு எட்டப்பட்டு எழுதப்படுகின்றது. இணக்க முடிவே விரும்பப்படுகின்றது, எனினும் தேவையேற்படின் வாக்குப்பதிவும் மேற்கொள்ளப்படலாம். (Consensus or Democratic Agreement)
பற்பல கொள்கைகள் இறுதியான இறுக்கமான வடிவு கொள்வதில்லை. பயனர்கள் எதிர்ப்பு மறுப்பு தெரிவிக்கும் பொழுது மீள்பரிசீலனைக்கு கொள்கைகள் ஈடுபடுத்தப்படும்.
கொள்கைகள் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகின்றன?
தொகுதமிழ் விக்கியூடகம் அதன் பயனர்களால் ஆக்கப்படுகின்றது. எனவே கொள்கைகளை ஆக்குவதும் நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் பயனர்களையே சாரும். தமிழ் விக்கியூடச் சமூகம் கூட்டாக கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்றது.