விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/மொழிநடை
விக்கிப்பீடியாவில் மொழிநடை என்பது விக்கிப்பீடியா என்ற கலைக்களஞ்சியத்திற்காக உருவாக்கப்படும் கட்டுரைகளின் நடை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை விளக்குவதாகும். ஒரே போன்ற நடையை அனைவரும் பின்பற்றுவதன் மூலம் கட்டுரைகள் படிப்பவர்களுக்கு எளிதாகவும் ஒரு சீர்மையுடனும் இருக்கும். தமிழின் சிறப்பு என்பது தமிழின் எழுத்துகள் சொற்கள் மற்றும் அதன் பொருள்கள், வாக்கிய அமைப்புகள் ஆகியவற்றைப் பெற்றிருப்பதே ஆகும். இவற்றை உள்ளடக்கியதே மொழி இலக்கணம் ஆகும். எனவே தமிழ் விக்கிப்பீடியாவில் உரைநடையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளைப் பின்பற்றி எழுதினால் சீராகவும் கருத்து வெளிப்படுவது தெளிவாகவும் இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு கருத்தை எடுத்துரைக்கும்போது செய்வினை அதிகப் பொருத்தமாக இருக்கும் இடங்களில் செயப்பாட்டு வினையைத் தவிர்த்தல், சிறு சிறு சொற்றொடர்களாக எழுதுதல், முடிவில்லாமல் காற்புள்ளி இட்டுக்கொண்டே போவதைத் தவிர்த்தல், இயன்ற அளவு சொற் புணர்ச்சிகளைத் தவிர்த்தல், புணர்ந்தாலும் இடைவெளி விட்டு எழுதுதல், அடைப்புக்குறி விளக்கங்கள் தவிர்த்தல், புழக்கத்தில் உள்ள எளிய சொற்களைப் பயன்படுத்துதல்,சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லுதலைத் தவிர்த்தல், ஐந்தாம் வகுப்பு மாணவரும் தடையின்றி வாசிக்கக் கூடியதாகவும், பத்தாம் வகுப்பு மாணவருக்காவது புரியக்கூடியதாகவும் இருத்தல், ஆங்கில சொற்றொடர் அமைப்புகளின் தமிழாக்கமாக இல்லாமல் தமிழ்ச் சொற்றொடர் அமைப்பைப் பின்பற்றுதல் ஆகிய சில கொள்கைகளைப் பின்பற்றலாம்.
கட்டுரைகளின் உள் ஒருமைப்பாடு
தொகுநடையும், வடிவூட்டுதலும் ஒரு கட்டுரைக்குள் ஒரே சீராக இருக்க வேண்டும் என்பது தமிழ் விக்கியின் ஒரு முக்கிய கொள்கை ஆகும்; அதற்காக விக்கிப்பீடியாவின் எல்லா கட்டுரைகளுக்கும் ஒன்று போலத்தான் எழுதப்பட வேண்டும் என்பதல்ல. இரு வேறு கட்டுரைகளை ஒப்பிடும்போது ஒரு கட்டுரையில் வெளியிடப்பட்டுள்ள தகவல் வெளியீடு, மற்றொரு கட்டுரையை விட நன்றாக இருக்கலாம், ஆனால் ஒரே கட்டுரையின் உள்ளே பத்திகளுக்குள் அக்கட்டுரையின் நடையையும் வடிவமைப்பையும் ஒரே சீராக வைத்திருப்பது படிப்பவருக்கு தெளிவையும் நிறைவையும் உண்டாக்கும் வாய்ப்புள்ளது. ஒரு கட்டுரைக்குள் அதன் நடை உள் இசைவுடன் இருப்பது நல்லது.
கட்டுரைகளின் உறுதி
தொகுகட்டுரை உருவாக்குநர் ஏதேனும் ஒரு நடையில் உருவாக்கிய ஒரு கட்டுரையின் நடையை அது பொருத்தமாக இருக்கும் பட்சத்தில் அதன் நடையை பொருத்தமான காரணமின்றி வேறொரு காரணத்தை முன்னிட்டும், மற்றொரு நடைக்கு மாற்றக் கூடாது, என நடுவர் குழுக்களிலுள்ள தொகுப்பாசிரியர்கள் தீர்மானித்து உள்ளனர். மேலும் நடையைப் பற்றிய சச்சரவுகளும் தவிர்க்க வேண்டியவை. ஒரு கட்டுரையின் நடையை பற்றிய வேறுபாடு இருந்தால், முதலில் பெரிய அளவில் பங்களித்த எழுத்தாளரின் உரையை கையாளுவது சிறப்பானது.
மூலங்கள் சான்று கோள்களின் அடிப்படையைப் பின்பற்றுதல்
தொகுவிக்கிப்பீடியாவில் கட்டுரையை உருவாக்கும் ஒரு நபர் தான் சொந்த ஆக்கங்கள் அல்லது ஆய்வுகளை உள்ளிடுவது கூடாது. நீங்கள் மூலங்கள் அல்லது சான்றுகோள்களில் உள்ள நடைகளை பின்பற்றலாம். எடுத்துக்காடாக ஒரு நபரின் பெயரை எவ்வாறு கட்டுரையில் குறிப்பிடவேண்டும் என்ற குழப்பம் நேரும்போது எப்படி மற்ற எழுத்தாளர்கள் கையாளுகிறார்கள் என்பதை பார்த்து தீர்மானிக்கலாம். வேறொரு சிறந்த காரணம் இல்லாவிட்டால், எப்படி தரமான இரண்டாம் வகை தமிழ் மூலங்களில் எழுத்து முறை கையாளப் படுகிறதோ, அதையே பின்பற்றலாம். அந்த கட்டுரையின் ஆதாரங்கள் நம்பத் தகுந்தவையாக இருக்க வேண்டும். கட்டுரையின் ஆதாரங்கள் தற்காலத்திய வழக்கு தமிழின் கூறுகளைக் கொண்டிராவிட்டால், தற்கால வழக்கு தமிழை பின்பற்றுவதோடு, அதன் ஆதாரங்களையும் ஆலோசித்தல் சிறப்பு.
கட்டுரைத் தலைப்புகள்
தொகுவிக்கிப்பீடியாவில் உருவாக்கப்படும் கட்டுரையின் தலைப்பு கூடுமானவரை எழுவாயாக இருக்க வேண்டும், பயனிலையாக வருதலைத் தவிர்க்கவும். எந்த ஒரு வேற்றுமை உருபும் ('ஐ', 'ஆல்', 'கு' போன்றவை) இணைக்கப்படாத தனிப் பெயர்ச்சொல்லாக வர வேண்டும். எதுவாயிருப்பினும் கட்டுரையின் முதல் சொல்லாகவோ முதல் வரியிலோ முதல் பத்தியிலோ தலைப்பு வரும் வகையில் எழுத வேண்டும். கட்டுரையில் முதன் முறை தலைப்பு வரும்பொழுது அதை என்ற விக்கி குறியீட்டைப் பயன்படுத்தி தடித்த எழுத்துக்களில் எழுத வேண்டும்.
கட்டுரையில் முதன் முறை தலைப்பு வரும்பொழுது அதை ''' ''' என்ற விக்கி குறியீட்டைப் பயன்படுத்தி தடித்த எழுத்துக்களில் எழுத வேண்டும். எடுத்துக்காட்டாக, '''நடைக் கையேடு''' என்று எழுதினால் நடைக் கையேடு என்று வரும்
துணைத் தலைப்புகள்
தொகுதுணைத் தலைப்புகளை (2ஆம் பத்தித்தலைப்பு)தெரியப்படுத்த ==
என்ற விக்கி குறியை பயன்படுத்துங்கள்; தடித்த எழுத்துக்களுக்கான விக்கி குறியான '''
(தடித்த எழுத்து) என்பதை பயன்படுத்த வேண்டாம். எடுத்துக்காட்டு:
==இது ஒரு துணைத் தலைப்பு==
என தொகுப்பு பெட்டியில் எழுதினால்
- இது ஒரு துணைத் தலைப்பு
என வரும்.
இம்மாதிரி துணைத் தலைப்புகளை எழுதினால், தானாகவே கட்டுரை உள்ளடக்க அட்டவணை உருவாக்கப்படும். மேலும், இவ்வாறு எழுதப்படும் துணைத் தலைப்புகளில் உள்ள சொற்களுக்கு தேடல் முடிவுகளில் அதிக முக்கியத்துவம் கிடைக்கும். மேலும், இவ்வாறு எழுதுவது வாசகர்களின் வாசிப்பு அனுபவத்தையும் எளிமையாக்கும். துணைத் தலைப்புகளில் இணைப்புகள் தருவதை தவிர்க்கவும். அளவுக்கு அதிகமாக துணைத் தலைப்புகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
நிறுத்தக்குறிகள்
தொகுபேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளை எழுத்துக்குறிகள் என்கிறோம். எனவே கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவிலும் கால்புள்ளி (,), அரைப்புள்ளி (;), முக்கால்புள்ளி (:),முற்றுப்புள்ளி (.), புள்ளி (.),கேள்விக்குறி (?), உணர்ச்சிக்குறி (!), இரட்டை மேற்கோள்குறி (" "), ஒற்றை மேற்கோள்குறி (' '), தனி மேற்கோள்குறி ( ' ) இது போன்ற குறியீடுகளைப் பயன்படுத்த வேண்டும். இது கட்டுரையினைப் படிப்போர்க்கு தெளிவை ஏற்படுத்தும்.
இலக்கங்களை எழுதுதல்
தொகுவிக்கிப்பீடியாவில் ஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களை எழுத்து வடிவில் குறிப்பிடுவது நலம். பத்துக்கு மேற்பட்ட எண்களை, எண் வடிவிலும் குறிப்பிடலாம்.
(சரியான நடை) ஐந்தாம் நூற்றாண்டு, 17 ஆம் நூற்றாண்டு, பதினேழாம் நூற்றாண்டு
(தவறான நடை) 5ஆம் நூற்றாண்டு, 02 போட்டிகள்
செயப்பாட்டுவினை
தொகுசெயப்பாட்டுவினை பெரும்பாலான இடங்களில் தவிர்க்கத்தக்கது. அது வாசிப்பதற்குத் தடையாக அமைந்து, குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும். "தவிர்க்கப்படக்கூடிய சொற்பயன்பாடுகள்" என்பதைத் "தவிர்க்கக்கூடிய சொற்பயன்பாடுகள்" என்றே சொல்லலாம். அதுதான் இயல்பான பேச்சுவழக்கு ஆகும். செயப்பாட்டுவினை பெரும்பாலும் ஆங்கிலத்தின் செயப்பாட்டு வினையை அப்படியே நேரடிமொழிபெயர்ப்பதால் விளைவது. "Edited pages" என்பதைத் "தொகுக்கப்பட்ட பக்கங்கள்" என்னாமல் "தொகுத்த பக்கங்கள்" என்றே இயல்பாகச் சொல்லலாம். இது விக்கியில் பொதுவான நெறிமுறை ஆகும்.
பிற மொழிப் பெயர்கள்
தொகுபிற மொழிப் பெயர்களை (இடங்கள், நபர்கள்) தமிழில் எழுதும் பொழுது, அப்பெயர்களை உரோமன் எழுத்தில் அடைப்புக்குறிக்குள் தாருங்கள் (இது ஆங்கிலம், பிரான்சியம் இடாய்ச்சு போன்ற மொழிகளில் இருக்கலாம்). இப்படி செய்வதால், பிற இணையத்தளங்களில் இந்தப் பெயர் குறித்து தேட உதவியாக இருக்கும். விக்கிப்பீடியா பக்கங்களை உரோமன் எழுத்தில் உள்ள சொற்களைக் கொண்டு தேடுவதற்கும் இது உதவும். தமிழில் ஒலிபெயர்த்து எழுதும்பொழுது தமிழில் மெய்யொலிக்கூட்டம் என்னும் கட்டுரையின் விதிமுறைகளைப் பின்பற்றுங்கள். பிறமொழிப்பெயர்களே ஆயினும், தமிழில் மெய்யெழுத்தில் தொடங்கி எழுதலாகாது என்பன போன்ற விதிகளைப் பின்பற்றி எழுதுங்கள். பொருளுள்ள பெயர்ச்சொற்களுக்கு சீனம், சப்பானிய மொழி போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் முற்காட்டு இருந்தால், நாமும் சொற்களை மொழிபெயர்த்து பொருள் விளங்குமாறு வழங்கத் தயங்கக்கூடாது. இடுகுறிப் பெயர்ச்சொற்களை இயன்ற வரை தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதி அடைப்புக்குறிகளில் ஆங்கிலம், மூல மொழியின் எழுத்துகளைக் கொண்டு எழுதிக் காட்டலாம். ஒலிக்கோப்புகள் தரலாம்.
தேதிகள்
தொகுதமிழ் நாட்காட்டி முறை அனைத்துலகத் தமிழர்களால் வெவ்வேறு விதமாகப் புரிந்து கொள்ளப்படுவதால், குழப்பத்தை தவிர்க்கும் பொருட்டு ஆங்கில நாட்காட்டி முறையை தமிழ் விக்கிபீடியாவில் பின்பற்றுதலின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. ஆங்கில நாட்காட்டி முறையில் திகதிகள் அறியப்படாத பண்டைத் தமிழ் நாட்டு வரலாற்றுத் தகவல்கள் மட்டும் தமிழ் நாட்காட்டி முறையின் கீழ் தரப்படலாம். ஆங்கில நாட்காட்டித் தேதிகளுடன் கூடுதலாக தமிழ் நாட்காட்டித் தகவல்கள் தருவது வரவேற்கப்படும் வேளையில், எத்தருணத்திலும் அவ்வாறு குறிப்பிடப்படும் தமிழ் மாதப் பெயர்கள் தமிழ் நாட்காட்டி முறைக்கு இணங்க மட்டுமே இருத்தல் அவசியம். கி.பி ஆண்டுகளின் முன் கி.பி எனக் குறிப்பிடத் தேவையில்லை. ஆனால், கி.மு ஆண்டுகளுக்கு முன் கண்டிப்பாக கி.மு எனக் குறிப்பிடவும். இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு போன்ற சொற்றொடர்களை தவிர்த்து, ஆண்டு எண்ணை குறிப்பிட்டே எழுதுங்கள். இப்படி எழுதுவதின் மூலம், அடிக்கடி கட்டுரையில் உள்ள தகவல்களை இற்றைப்படுத்த வேண்டிய அவசியத்தை தவிர்க்கலாம்.
சாய்வெழுத்துக்கள்
தொகுபின் வரும் இடங்களில் சாய்வெழுத்துக்களைப் பயன்படுத்தவும்.
படைப்புத் திறன் வெளிப்பாடுகள், நூல்களின் பெயர்கள், திரைப்படப் பெயர்கள், பாடல், கவிதை வரிகள், மேற்கோள்கள், உயிரியல் பெயர்கள், (எ.கா) சொலனஸ் நைக்ரம் (மணத்தக்காளி), பிறமொழிச் சொற்களின் எழுத்துப்பெயர்ப்புகள், எழுதப்படும் பொருள் ஒரு சொல்லாகவோ அல்லது எழுத்தாகவோ இருப்பின் அதை சாய்வெழுத்தில் குறிப்பிடவும்.(எ.கா) (1) அகரம் தமிழ் அரிச்சுவடியில் உயிரெழுத்துக்களில் முதலெழுத்தாகும். (2)நாகரீகம் என்ற சொல் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றதா அல்லது வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்ததா என்பது பற்றி மொழியியலாளர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
மேலும் சாய்வெழுத்துகளைக் கீழ்கண்டவைகளின் தலைப்புகளுக்கு பயன்படுத்தவும்.
- நூல்கள்
- கணினி, நிகழ்பட ஆட்டங்கள்
- அறமன்ற வழக்குகள்
- திரைப்படங்கள்
- நீண்ட கவிதைகள்/காப்பியங்கள்
- பாட்டு தொகுப்புகள்
- தனியார் பெயர் தாங்கிய பயண வண்டிகள்
- இசை ஆக்கங்கள்
- இதழ்கள் (நாளிதழ்கள், கிழமை இதழ்கள், மாதிகை)
- நாடகங்கள்
- பெயர் சூட்டப்பட்ட கப்பல்கள்
- தொலைக்காட்சித் தொடர்கள்
- ஓவியம், கலைப் பொருள்கள்
பொதுவாக நீண்டஆக்கங்களுக்கு சாய்வெழுத்து பயன்படுத்தவும். கீழுள்ள சிறிய ஆக்களின் தலைப்புகள் மேற்கோள் குறிகளுக்கிடையே இருக்க வேண்டும்.
- கட்டுரைகள், உரைகள்
- பெரிய நூலின் உட்பிரிவுகள்
- தொலைக்கட்சி தொடரின் தனிப் பகுதிகள்
- சிறிய கவிதைகள்
- குறுநாவல்கள் (குறும்புதினங்கள்)
- பாட்டுகள்.
சில இடங்களில் தலைப்பு சாய்வெழுத்திலோ, மேற்கோள் குறிகளுக்கிடையிலோ இருத்தல் கூடாது
- மதச் சொற்பொழிவுகள்
- நீதிமன்ற, சட்டமன்ற ஆவணங்கள்
சொற்களைச் சொற்களாகக் குறிப்பிடும் பொழுது
தொகுசொற்களைச் சொற்களாகவோ, ஓர் எழுத்தை எழுத்தாகவோ குறிப்பிடும் போது சாய்வெழுத்தை பயன்படுத்துக. எடுத்துக்காட்டு:
உலகமயமாகுதல் என்பது உலகளவில் பன்னாடுகளிடையே ஏற்படும் பொருட்கள், கலாசாரம், கருத்து, மூலதனம் இவற்றின் ஏற்றுமதி-இறக்குமதிகளை குறிக்க 20 ஆண்டுகளாகப் பயன்படுகிறது. (இங்கு உலகமயமாதல் என்பது அச்சொல்லைப் பற்றிய விளக்கம் ஆகையால் அச்சொல்லைக் சாய்வெழுத்துகளில் காட்டவும்)
பிற மொழிச் சொற்கள்
தொகுதெரிந்தும் தமிழ்ச் சொற்களுக்கு ஈடாக பிற மொழிச் சொற்களை பயன்படுத்த வேண்டாம். தெரியாமல் பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தினால் பிற பயனர்கள் பரிந்துரைப்பர், அல்லது மாற்றி எழுதுவர். எடுக்காட்டுக்கள்: கம்பியூட்டர் - கணினி, இண்டர்னட்-இணையம், சைக்கிள்-மிதிவண்டி.
பிற மொழி சொற்றொடர் கொடுக்கும் போதும், சில தமிழில் இன்னும் சேர்க்கப்படாத ஒரு சில பிறமொழி சொற்கள் கொடுக்கும் போதும்,சாய்வு எழுத்துக்களைப் பயன்படுத்தலாம். தமிழ்மயப் படுத்தப்பட்ட பிறமொழிச் சொற்களை அந்த சூழ்நிலைகளில் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டு: ஜப்பானிய மொழியில் படிப்பதற்கும், எழுதுவதற்கும் ஹிரகானா, கடகானா, கஞ்சி, சில சமயம் ரோமாஜி எழுத்துரு அறிவு தேவைப்படுகிறது. ஆனால் தமிழ் மொழியில் சேர்க்கப் பட்டுள்ள பிற மொழி சொற்களை எழுதும் போது, சாய்வு முறையை பயன்படுத்தக் கூடாது - எடுத்துக்காட்டு டி. என். ஏ பாலிமரேசு, கடோலினியம், பெர்ள், தாலிபான். இதில் ஒரு குறுக்கு வழி, தமிழ் அகராதிகளில் வரும் சொற்களை சாய்வு படுத்தி எழுதாமல் இருப்பது நன்று. பிற மொழிச் சொற்கள் மிகக் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும், தேவையெனில் பிறமொழியில் அவை எவ்வாறு குறிக்கப்படுகின்றன என்பதனை பக்கத்தில் அடைப்பு குறிகளில் போடலாம்.
மரியாதைச் சொற்கள்
தொகுகட்டுரைகளில் வரும் நபர்களின் பெயர்களுடனும் (அவர்களின் வயது, பதவி என்னவாக இருந்தாலும்), பயனர் பேச்சுப் பக்கங்களிலும் (விக்கிபீடியாவில் அவர்கள் அனுபவம், பங்களிப்புகளின் அளவு, பொறுப்பு, வயது, பொதுவாழ்க்கை பதவி என்னவாக இருந்தாலும்), திரு, அவர்கள், மேதகு, செல்வி, என்பன போன்ற வழக்கமான தமிழ் மரபு சார்ந்த அடைமொழிச் சொற்களைப் பயன்படுத்துவது தேவையற்றது. அடைமொழிகள் இல்லாத அழைப்பை(விளியைப்) பரிந்துரைக்கிறோம். பயனர்களுடன் தனிப்பட்ட விக்கி சமுதாயத்திற்கு அப்பாற்பட்ட தொடர்பு இருக்கும் எனில் அவர்களின் பேச்சுப்பக்கங்களில் மட்டும் ஒருமையிலோ, அண்ணா, அக்கா, தம்பி என்றோ அழைக்கலாம். மற்றபடி, பொதுவான விக்கிபீடியா கலந்துரையாடல் பக்கங்களில் மற்ற பயனர்களை ஒருமையில் (நீ, உன் என்பது போல) அழைப்பது தவிர்க்க வேண்டும்.
பொது
தொகுமேற்கோள்களை சாய்வெழுத்தில் இடத் தேவை இல்லை; அதற்கு விதிவிலக்கு புறமொழி வார்த்தைகளை பயன்படுத்துதல், போன்றவையாகும். சில இடங்களில் சில சொற்கள் முதல் நூலில் இருக்கும், அல்லது அங்குள்ளதை ஒருவர் குறிப்பாக சுட்டுகிறாரா என வேறுபடுத்தி காட்டுவது தேவையாக இருக்கலாம். எ.கா. அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. (அழுத்தம் கொடுக்கப்பட்டது) அதே போன்று குறுஞ்சொற்களை (எடுத்துக்காட்டு - எ.கா, பின் குறிப்பு - பி.கு) எனக் குறிப்பிடலாம். அடைப்புக் குறிகளுக்குள் வெற்றிடம் விடாமல் எழுதவும். எடுத்துக்காட்டு: சரியான முறை - சுஜாதா (எழுத்தாளர்) தவறான முறை - சுஜாதா ( எழுத்தாளர் ). அடைப்புக் குறியைத் தொடங்கும் முன் ஒரு வெற்றிடம் விடவும்.
எடுத்துக்காட்டு: சரியான முறை - சுஜாதா (எழுத்தாளர்)
தவறான முறை - சுஜாதா(எழுத்தாளர்)
அடைப்புக் குறிகளுக்கான மேற்கண்ட வழிமுறைகள் கட்டுரைத் தலைப்புகளுக்கும் பொருந்தும். நிறுத்தக்குறிகளுக்கு அடுத்து ஒரு வெற்றிடம் விட்டு அடுத்து வரும் சொல்லை எழுதவும்.
கிரந்த எழுத்துகள்
தொகுசில நேரங்களில் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்த நேரிடின் தேவைப்படும் சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல் இருந்தால் ஆளலாம். சான்றாக
- இஷ்டம் -> விருப்பம்.
- சந்தோஷம் - > மகிழ்ச்சி
- கஷ்டம் - > துன்பம், முடை, இடர், இடர்ப்பாடு, இன்னல், தடை, இடைஞ்சல்
- ஸ்மைல் - > புன்னகை
- ஜ, ஷ, ஸ, ஹ ஆகியவற்றுக்குப் பதிலாகத் தமிழில் வழமையாக ஈடு கொடுக்கப்படும் எழுத்துகளைப் பயன்படுத்தலாம்.
- வருஷம் - > வருடம்; வருசம். ஆண்டு (ஆண்டுவிழா, ஆண்டுநிறைவு என்னும் வழக்குகள் நோக்குக)
- விஷயம் - > விசயம், விதயம், விடயம். (இது இன்னதென்று பொருள் புரியாது பயன் படுத்தும் ஒரு சொல். பெரும்பாலான இடங்களில் செய்தி ("சேதி",) குறிப்பு, நிகழ்வு என்று பொருள்படும்
- விசேஷம் - > விசேசம், விசேடம், சிறப்பு, கொண்டாட்டம்
- விஷம் - > விசம், விடம் (விசம், விடம் என்று ஒலிப்பைத் திரித்துச் சொன்னாலும் பாம்பு கொத்தினால் உயிர் போவது உறுதி :) ) நஞ்சு
- ஷாந்தி -> சாந்தி
- ஷங்கர் - > சங்கர்
- ஹனுமான், ஹிந்தி, ஹிந்து, ஹோட்டல், ஹொகேனக்கல் - > அனுமான், இந்தி, இந்து, ஓட்டல், ஒகேனக்கல் (ஹகரத்தை விடுத்து அதை அடுத்து வரும் உயிர் ஒலியைக் கொள்ள வேண்டும்)
- ராஜா, ரோஜா, ஜாதி, ஜோதிடம், ஜோதி - > ராசு, ராசா, ரோசா, சாதி, சோதிடம், சோதி. (முதல் சகரத்தை வல்லினமாக பலுக்கினால், ஒலித்திரிபு குறைவே)
மேல் உள்ள எடுத்துக்காட்டுகளைக் கொண்டு, கிரந்தம் தவிர்த்துத் தமிழில் எழுதுவது தற்போதும் பெரு ஊடகங்களிலும் வழக்கில் உள்ளதே என அறியலாம். சில சொற்களைக் கிரந்தம் தவிர்த்தும் சிலவற்றில் கிரந்தம் தவிர்க்காமலும் எழுதுவதற்கு போதிய தமிழாக்க முயற்சிகளும் பழக்கமும் இல்லாததே காரணம். எனவே, கிரந்தம் தவிர்த்து எழுதுவதை ஏதோ புதிய நடைமுறையாகக் கருதத் தேவை இல்லை.