விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/விக்கி இடைமுகம்
விக்கி இடைமுகத்தை (Wiki Interface) விளங்கிக் கொள்ளல் விக்கியைப் பயன்படுத்தவும் விக்கியில் பங்களிக்கவும் உதவும். விக்கியூடக விக்கிகள் மீடியாவிக்கி என்ற மென்பொருளைப் பயன்படுத்துகின்றன. ஒவ்வொரு விக்கியும் உள்ளடக்க வடிவமைப்பில் வேறுபாடுகளைக் கொண்டு இருப்பினும் அனைத்தும் ஒரே மென்பொருளையும் ஒத்த இடைமுகத்தையுமே பயன்படுத்துகின்றன.
ta.wikipedia.org போன்ற ஒரு இணைய முகவரியைப் பயன்படுத்தி நீங்கள் ஒரு விக்கியூடக விக்கிக்கு வர முடியும். முதற்பக்கத்தில் அந்த விக்கியின் உள்ளடக்கத்தில் இருந்து பல விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். பொதுவாக, பெரும்பாலான விக்கிகள் இடதுபக்கத்தில் பல இணைப்புக்களைக் கொண்டிருக்கும். இவை பயனர்கள் உலாவ, உதவிபெற, ஊடாட, தகவல்களைப் பெற பயன்படும் இணைப்புக்களைக் கொண்டு இருக்கும்.
வலதுபக்க மேல் மூலையில் தேடல் பெட்டி இருக்கும். ஒரு சொல்லை, அல்லது சொற்தொடரை நீங்கள் அதில் இட்டு தேடினால், அந்தக் கட்டுரை இருந்தால் உங்களை அந்தக் கட்டுரை உங்களுக்குத் தோற்றமளிக்கும். மாற்றாக அக் கட்டுரை இல்லாவிடின் அச் சொல் எந்த எந்தக் கட்டுரைகளில் வருகிறதோ அவற்றின் பட்டியலைக் காட்டும். நீங்கள் ஒரு புதுக் கட்டுரையை உருவாக்க ஊக்குவிக்குமாறு ஒரு சிவப்பு இணைப்பும் இருக்கும்.
விக்கியூடகத்தின் எந்த ஒரு விக்கிப் பக்கத்திலும் கட்டுரை, உரையாடல் என்ற இரு தத்தல்கள் இடது பக்கத்திலும், படிக்கவும், தொகு, வரலாற்றைக் காட்டவும் ஆகிய மூன்று தத்தல்கள் வலது பக்கத்திலும் இருக்கும். கட்டுரையே பக்கத்தின் முதன்மையான உள்ளடக்கத்தைக் கொண்ட பகுதி. உரையாடல் என்பது அக் கட்டுரையை அல்லது உள்ளடக்கத்தைப் பற்றி பயனர்கள் உரையாடுவதற்கான பகுதி. பொதுவாக ஒரு கட்டுரை அல்லது உரையாடல் பக்கம், "படிக்கவும்" என்ற நிலையிலேயே இருக்கும். தொகுக்கும்போது அது அக் கட்டுரையின் குறியீடுகளுடனான மூலத்துக்கு எடுத்துச் செல்லும். செய்யப்பட்ட எல்லா மாற்றங்களையும் பார்க்க "வரலாற்றைக் காட்டவும்" என்ற இணைப்பின் ஊடாகச் சென்று பார்க்கலாம்.